பி.டி. கத்தரிக்காய் கூடாது: மருத்துவ நிபுணர்கள் வலியுறுத்தல்
1:46 PM செய்திகள், பி.டி. கத்தரிக்காய் கூடாது: மருத்துவ நிபுணர்கள் வலியுறுத்தல் 0 கருத்துரைகள் Admin
பி.டி. கத்தரி எனப்படும் மரபணு மாற்றப்பட்ட கத்தரிக்காயை இந்தியாவில் பயிரிடக் கூடாது என மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷை மருத்துவ நிபுணர்கள் குழு வியாழக்கிழமை சந்தித்து வலியுறுத்தியது. டாக்டர் மீரா சிவா (புது தில்லி), டாக்டர் ஜி.பி.சிங் (சண்டிகர்), டாக்டர் பாரத் ஷா (பரோடா), டாக்டர் ஜி.சிவராமன் (சென்னை) ஆகிய நால்வர் குழு, அமைச்சரைச் சந்தித்து எந்தந்த வகையில் பி.டி. நச்சு புரதம், பொது மக்களின் உடல் நலனில் பாதிப்பை உண்டாக்கும் என்பதை விரிவாக விளக்கினர். மேலும் குழந்தைகளுக்கு உடல் எடை குறையும் வாய்ப்பு மற்றும் ஒவ்வாமையை பி.டி. கத்தரிக்காய் ஏற்படுத்தும் ஆபத்து குறித்தும் சான்றுகளுடன் விரிவாக விளக்கினர். சித்த, ஆயுர்வேத மருந்துகளில் நீண்ட காலமாக இப்போதுள்ள கத்தரிக்காய் எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பது குறித்து சித்த மருத்துவ நிபுணரும் பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் தலைவருமான ஜி.சிவராமன் விளக்கினார். அதே சமயம், மத்திய அரசின் மரபணு மாற்ற தொழில்நுட்ப அனுமதிக் குழு (ஜிஇஏசி) வெளியிட்ட முடிவில், பி.டி. கத்தரியின் ஆல்கலாய்டுகள் பெருவாரியாக மாறியுள்ளதையும் இது கத்தரியின் மருத்துவக் குணத்தை மாற்றி விடும் ஆபத்தையும் குறிப்பிட்டனர். இதனால் ஜீன் கலப்படமடைந்து அதே குடும்பத்தைச் சேர்ந்த பிற மருத்துவக் குணமுள்ள தாவரங்கள் பாதிக்கப்படும் அபாயத்தை அமைச்சரிடம் விவரித்தனர். மருத்துவ நிபுணர்கள் குழு கூறிய விஷயங்களை ஆவணப்படுத்திக் கொண்ட அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ், வரும் 10-ம் தேதி முடிவை அறிவிப்பதாகத் தெரிவித்தார்.
குறிச்சொற்கள்: செய்திகள், பி.டி. கத்தரிக்காய் கூடாது: மருத்துவ நிபுணர்கள் வலியுறுத்தல்
பகிர்தல் மிக எளிமையானது,அழகானது