இந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....

தர்பூசணி விலை சரிவு: விவசாயிகள் கவலை


தர்பூசணி விலையில் சரிவு ஏற்பட்டுள்ளதால், விவசாயிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டம் பொங்கலூர் பகுதியில் 100 ஏக்கரில் தர்பூசணி சாகுபடி செய்யப்பட்டிருந்தது. கார்த்திகை, மார்கழி மாதங்களில் விதைப்பு பணி துவங்கப்பட்டு, தை, மாசியில் அறுவடைக்கு வருகிறது. வெயில் சூட்டை தணிக்க மக்கள் விரும்பி உண்பதால், வெயில் காலங்களில்
தர்பூசணிக்கு மவுசு அதிகமாக இருக்கிறது. விவசாயிகள் விற்கும் விலைக்கும், நுகர்வோர் வாங்கும் விலைக்கும் இரண்டு மடங்கு விலை வித்தியாசம் காணப்படுகிறது. நீண்ட நாட்களுக்கு இருப்பு வைத்திருக்க முடியாது என்பதாலும், விரைவில் கெட்டுப்போகும் என்பதாலும் விலை வித்தியாசம் தவிர்க்க முடியாத ஒன்றாக உள்ளது.
கடந்தாண்டு வியாபாரிகள் சில்லரை விலையில் கிலோ 14 ரூபாய்க்கு விற்பனை செய்தனர். முதல் தரமான தர்பூசணி காய்களை விவசாயிகளிடம் கிலோ ஆறு ரூபாய் என்ற விலைக்கு கொள்முதல் செய்தனர். ஏக்கருக்கு 10 டன் வரை மகசூல் கிடைத்ததால், விவசாயிகள் நல்ல லாபம் பார்த்தனர். செலவு போக ஏக்கருக்கு 30 முதல் 40 ஆயிரம் வரை லாபம் கிடைத்தது.
இந்தாண்டும் நல்ல விலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் விவசாயிகள் தர்பூசணி சாகுபடி செய்திருந்தனர். இந்தாண்டு வெயில் காலம் துவங்கியது முதல் சில நாட்கள் மட்டும் ஐந்து ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்பட்ட தர்பூசணி விலை "கிடுகிடு'வென சரிந்து, இரண்டில் இருந்து மூன்று ரூபாய்க்குள் கொள்முதல் செய்யப்படுகிறது. விலை சரிவு தர்பூசணி சாகுபடி செய்திருந்த விவசாயிகளுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுபற்றி விவசாயிகள் கூறியதாவது: விதை விலை ஏற்றம், உர விலை ஏற்றம், ஆள் கூலி உயர்வு போன்ற காரணங்களால் இந்தாண்டு செலவு அதிகம் ஏற்பட்டது; பெரிய காய்களை மட்டுமே வியாபாரிகள் கொள்முதல் செய்கின்றனர்; சிறிய காய்களை எடுப்பதில்லை; இதை சந்தைக்கு கொண்டு வந்து அடிமாட்டு விலைக்கு விற்க வேண்டியுள்ளது. மகசூலும் வழக்கத்தை விட குறைந்து, ஏக்கருக்கு ஐந்து டன் மட்டுமே கிடைத்தது; விலையும் குறைந்து விட்டதால், லாபம் எதையும் எதிர்பார்க்க முடியவில்லை; இதை இருப்பு வைத்து விற்க முடியாது என்பதால், கேட்ட விலைக்கு விற்பதை தவிர வேறு வழியில்லை, என்றனர்

குறிச்சொற்கள்: , , ,

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..

Post a Comment