இந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....

காவிரியாற்று கரையை ஆக்கிரமித்து நடக்கும் நெல் சாகுபடி: ஈரோட்டில் இருந்து கொடுமுடி வரை துணிச்சல்

ஈரோட்டில் இருந்து கொடுமுடி வரை காவிரியாற்றின் கரையை பல இடங்களில் ஆக்கிரமித்து நெல் நடவுப்பணி தீவிரமாக நடந்து வருகிறது. ஈரோடு காவிரியாற்றின் வலது புறம் 100 மீட்டர் அகலத்துக்கும் மேல் கரை அமைக்கப்பட்டுள்ளது. பெரும்பாலும் மழைக்காலத்தில் வெள்ளம் வரும் நாட்களை தவிர பெரும்பாலான நாட்களில், ஆற்றில் தண்ணீர் கரைப்பகுதி வரை வருவதில்லை. காவிரியாற்றின் வலது கரையை ஒட்டியே காலிங்கராயன் கால்வாய் செல்கிறது.காலிங்கராயன் கால்வாய் பகுதியில் குறுவை சாகுபடிக்கு ஜூன் 16ம் தேதி தண்ணீர் திறக்கப்படும். காலிங்கராயன் கால்வாய் பாசனத்தில் ஈரோடு அக்ரஹாரம், வைராபாளையம், கருங்கல்பாளையம் பகுதியில் பெரும்பாலும் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. காலிங்கராயன் பாசனத்துக்கு தண்ணீர் திறந்து சாகுபடி பணிகள் நடக்கும் போது, காவிரியாற்றின் கரைப் பகுதியும் ஆக்கிரமிக்கப்பட்டு, ஆண்டு தோறும் நெல் சாகுபடி பணி நடக்கிறது. காலிங்கராயன் கால்வாய்க்கும் காவிரியாற்றுக்கும் இடைப்பட்ட விளை நிலங்களில் இருந்து மீதமாகும் கசிவுநீர் சிறு ஓடை வழியாக காவிரியாற்றை அடைகிறது. கரையை ஆக்கிரமித்து நடக்கும் சாகுபடிக்கு இந்த ஓடையில் வரும் தண்ணீர் பயன்படுத்தப்படுகிறது.காலிங்கராயன் கால்வாய் பகுதியில் ஆண்டு தோறும் நேரடியாக 16 ஆயிரம் ஏக்கரும், மறைமுகமாக கிணற்றுப் பாசனம் மூலம் 4,000 ஏக்கர் சேர்ந்து 20 ஆயிரம் ஏக்கர் வரை சாகுபடி பணி நடக்கிறது. இக்கால்வாய்ப் பாசனத்தில், நெல், கரும்பு, வாழை, மஞ்சள், நெல் அதிகளவு விவசாயிகள் சாகுபடி செய்கின்றனர். இந்த கால்வாயின் கரைப்பகுதியை ஒட்டி நிலம் ஆக்கிரமிக்கப்பட்டு, மூன்று முதல் மூன்றரை மாதத்தில் அறுவை செய்யும் வகையில், நெல் சாகுபடி பணி தீவிரமாக நடந்து வருகிறது. காலிங்கராயன் கால்வாய் பாசன விவசாயிகளை பின்பற்றி ஆக்கிரமிப்பாளர்களும் சாகுபடி பணியை தொடர்ந்து மேற்கொள்கின்றனர். கால்வாய் பகுதியில் பிற விவசாயிகள் அறுவடை பணியை துவங்கும் போது இவர்களும் அறுவடையை துவக்கி முடித்து விடுகின்றனர்.இதுகுறித்து வைராபாளையத்தை சேர்ந்த விவசாயி ஒருவர் கூறியதாவது: காவிரியாற்றின் கரைப் பகுதியில், ஆண்டுதோறும் சிலர் ஆக்கிரமித்து, நெல் சாகுபடி செய்து வருகின்றனர். ஈரோடு வைராபாளையம் பகுதி மட்டும் இல்லாமல் காவிரியாற்றில் கரை பகுதியில் கொடுமுடி வரை ஆங்காங்கே இது போல் ஆக்கிரமித்து நெல் சாகுபடி செய்கின்றனர். சராசரியாக 1,500 ஏக்கர் வரை ஆக்கிரமிப்பு நிலத்தில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. காவிரியாற்றில் பருவமழை காலத்தில் கூட இருகரையும் தொட்டு தண்ணீர் சென்று பல ஆண்டுகளாவதால், ஆக்கிரமிப்பாளர்கள் துணிந்து சாகுபடி பணிகளை மேற்கொள்கின்றனர். ஆற்றின் கரை பகுதி என்பதால், நெல் செழிப்பாக வளர்கிறது.ஆண்டுதோறும், ஒரு இடத்தில் ஆக்கிரமித்து சாகுபடி செய்பவர் தொடர்ந்து அதே இடத்தில், சாகுபடியை தொடர்ந்து செய்கின்றனர். இதேபோல் காலிங்கராயன் கால்வாயில் இடது கரை பகுதியிலும் ஆக்கிரமித்து நெல் சாகுபடி செய்கின்றனர். ஒவ்வொருவரும் அரை ஏக்கருக்கு மேல் நிலத்தை ஆக்கிரமித்து நெல் சாகுபடி செய்வதால், சராசரியாக 15 முதல் 20 குவிண்டால் வரை நெல் உற்பத்தி செய்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

குறிச்சொற்கள்: ,

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..

Post a Comment