இந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....

தண்ணீர் இன்றி நெல் வயல்கள் வறண்டன: அறுவடை பருவத்தில் சாவியான சோகம்

மானாமதுரை: பருவம் தவறிய மழை, பாசனத்திற்கு வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படாததால், மானாமதுரை பகுதியில் நெல் வயல்கள் வறண்டு கிடக்கின்றன. இப்பகுதியில் 40 ஆயிரம் ஏக்கரில் சம்பா நெல் பயிரிடப்பட்டுள்ளது. கொந்தகை, மணலூர், திருப்புவனம், திருப்பாச்சேத்தி, பூவந்தி, பழையனூர், கட்டனூர் உட்பட 15 கிராமங்கள் வலது பிரதான கால்வாய் மூலம் பாசன வசதி பெறுகின்றன. இடைக்காட்டூர், பச்சேரி, வேம்பத்தூர், வேலூர், சிறுகுடி கிராமங்கள் இடது பிரதான கால்வாயில் பயன் பெறுகின்றன. மிளகனூர், கட்டிக் குளம், கீழப்பசலை, குறிச்சி, நெட்டூர், தெ.புதுக்கோட்டை கிராமங்கள் வலது பிரதான கால்வாயின் கடைமடை பகுதியில் உள்ளன. இப்பகுதி விவசாயம் வைகை அணை நீரை நம்பியே உள்ளது.


தண்ணீர் இல்லை: ஆண்டுதோறும் நவம்பர் இறுதியில், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட பாசனத்திற்கு, அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படும். இந்த ஆண்டு அணையில் போதிய தண்ணீர் இல்லாததால், இரண்டு நாட்கள் மட்டுமே திறக்கப்பட்டது. வறண்ட நிலங்களில் வந்த குறைந்த அளவு தண்ணீர், கடைமடை பகுதிகளுக்கு போய் சேரவில்லை.


தாமதம்: கண்மாய்களிலும் குறைவான அளவே நீர் தேங்கியது. பருவம் தவறிய மழையால் இப்பகுதி விவசாயிகளும், உரிய காலத்தில் சாகுபடி செய்யவில்லை. வழக்கமாக அக்டோபரில் துவங்க வேண்டிய நடவு பணிகள், நவம்பரில் தான் துவங்கின. தற்போது இவை அறுவடையின் இறுதி கட்டத்தில் உள்ளன. பயிரை காப்பாற்ற அணையில் இருந்து நீர் திறக்க விவசாயிகள் வலியுறுத்தினர். ஆனால் தண்ணீர் திறக்கப்படவில்லை. இதனால் பயிர் காய்ந்து, கருகும் அவலம் ஏற்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்ட பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில், சிவகங்கை மாவட்ட நிர்வாகம் இதற்கான முயற்சி எடுக்கவில்லை என விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர்.


இதுகுறித்து சிலரின் கருத்துக்கள்:


விவசாய சங்க தலைவர் ஆதிமூலம், திருப்புவனம்: இரு மாவட்டங்களுக்கான பங்கீட்டில், உரிய நீரை மாவட்ட நிர்வாகம் பெற்று தரவில்லை. இதனால் அறுவடைக்கு தயார் நிலையில் உள்ள பயிர்கள் கருகி வருகின்றன. மாவட்ட பாசனத்திற்கு குறைந்த அளவு தான் திறக்கப்பட்டது. ஆற்றில் மணல் குவாரிகளை ஒட்டிய பகுதிகளை கடப்பதற்குள், இரு நாட்களில் தண்ணீர் நிறுத்தப்பட்டது. கண்மாய்களும் வறண்டு விட்டன. அணையில் நீர் திறக்க, மாவட்ட நிர்வாகம் முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை.


பாசன சங்க தலைவர் காசி, மேலநெட்டூர்: கடைமடை பாசனத்திற்கு, ஆண்டுதோறும் டிசம்பரில் ஏழு நாட்கள் தண்ணீர் திறக்க வேண்டும். ஆனால், ஜனவரியில் மூன்று நாட்கள் மட்டுமே திறந்தனர். மீண்டும் திறக்கப்படும் என எதிர்பார்த்து, கடன் வாங்கி விவசாயம் செய்தோம். தண்ணீர் திறக்கவில்லை. நெற்பயிர்கள் கருகி வருகிறது. இதற்கு இழப்பீடு வழங்க வேண்டும்.


விவசாய சங்க தலைவர் எம். ராமசந்திரன், தெ.புதுக் கோட்டை: கோ- 47, ஆடுதுறை ரக பயிரை 500 ஏக்கர் வரை நடவு செய்தோம். இதில் 370 ஏக்கரில் பயிர்கள் கருகிவிட்டன. பயிர்களை காப்பாற்ற, ஒரு மணி நேரத்திற்கு 15 ரூபாய் என விலைக்கு வாங்கி தண்ணீர் பாய்ச்சினோம். இதனால், 20 ஆயிரம் ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டது. வங்கி கடனை தள்ளுபடி செய்வதோடு, இழப்பீடு வழங்கவேண்டும்.


மாநில விவசாயிகள் சங்க தலைவர் தங்கமணி: இங்கு 40 ஆயிரம் ஏக்கரில் பயிர்கள் வாடுகின்றன. தண்ணீர் இல்லை என சொல்லும் அரசு, கடன் வாங்கி நடவு செய்த பயிருக்கு இழப்பீடு வழங்கவேண்டும். ஆண்டுக்கு ஏழு நாட்கள் தண்ணீர் திறக்கவேண்டும். இந்த நாட்களில் தண்ணீர் திறப்போம் என்ற உத்தரவாதத்தை, பொதுப்பணித்துறையினர் வழங்க வேண்டும்.


கலெக்டர் மகேசன் காசிராஜன் கூறியதாவது: அக்டோபர், டிசம்பரில் மழை குறைவால், நீர்வரத்து பாதிக்கப்பட்டது. அணையில் தற்போது 44.36 அடி தண்ணீர் மட்டுமே உள்ளது. அணையில் இருப்பில் உள்ள நீரை, திறக்க முயற்சி எடுக்கப் பட்டது. அப்படியே திறந்தாலும், ஆற்றுப்படுகை காய்ந்துள்ளதால், கடைமடை பகுதிகளுக்கு போய் சேராது.

குறிச்சொற்கள்: ,

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..

Post a Comment