இந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....

தொழில் நுட்பம் சார்ந்த விவசாயமே இன்றைய தேவை

நவீன தொழில் நுட்பம் சார்ந்த விவசாயமே இன்றைய தேவை என்று இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழக பெங்களூர் மண்டல திட்ட இயக்குநர் சா. பிரபு குமார் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார். குலசேகரத்தில் வேளாண் அறிவியல் நிலையம் சார்பில் நடைபெற்ற வேளாண் தொழில் நுட்ப வார தொடக்க விழா நிகழ்ச்சியில் அவர் மேலும் பேசியதாவது. விவசாயத்தில் காலத்திற்கேற்ற மாற்றம் தேவை. பசுமைப் புரட்சி காலத்தில் உற்பத்தியை மட்டுமே கணக்கில் கொண்டு விவசாயம் செய்யப்பட்டது. இதனால், விவசாயிகளுக்கு அதிக லாபம் கிடைக்கவில்லை அது நாம் செய்த தவறு. இதன்காரணமாக விவசாயிகள் தங்களது வாரிசுகளை விவசாயத்தில் ஈடுபடுத்தவில்லை. 1990- க்கு பிறகு உலக அளவிலும், இந்திய அளவில் விவசாயத்தில் பெரும் மாற்றம் ஏற்பட்டு வருகிறது. இந்த மாற்றத்திற்கு விவசாயிகள் அனைவரும் தயாராக வேண்டும். தொழில் நுட்பம் சார்ந்த விவசாயமே இன்றைய தேவை. புதிய தலைமுறையினரை விவசாயத்தில் ஈடுபடுத்த வேண்டும். மாறிவரும் உலகச் சூழலில் விவசாயம், விவசாயிகளுக்கு லாபகரமானதாக அமையும். கன்னியாகுமரி மாவட்டத்தில் பல பயிர்கள் சாகுபடி செய்யும் வாய்ப்புகள் உள்ளது. கேரள மாநிலம் அருகில் உள்ளதால் நல்ல சந்தை வாய்ப்புகள் உள்ளது. ஆண்டுக்கு 1500 செ.மீ. மழை கிடைக்கும் இந்த மாவட்டத்தில் அதிக கூலி, மற்றும் வேலையாள்கள் குறைவு காரணமாக விவசாயத்தில் இயந்திரமயமாதலை பயன்படுத்த வேண்டும் என்றார் அவர். நிகழ்ச்சியில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழக விரிவாக்க கல்வி இயக்குநர் பா. கலைச் செல்வன் தலைமை வகித்து பேசியதாவது: விவசாயிகளுக்கு தொழில் நுட்ப அறிவு, தொழில் சேவை, தொழில் நுட்பம் தொடர்பான இடுபொருள்கள் ஆகியனச் சென்றடைய வேண்டும் என்ற அடிப்படையில் விவசாய வார விழா நடத்தப்படுகிறது. மலர் சாகுபடி, நெல் ஆராய்ச்சி மற்றும் தோட்டக் கலைத் துறையினரின் புதிய கண்டுபிடிப்புகள் வேளாண்மை அறிவியல் மையம் மூலம் விவசாயிகளுக்குக் கொண்டு செல்லப்படுகிறது. இத் துறைகள் மற்றும் தொழில் நுட்பத் துறை சார்பில் 356 நெல் ரகங்களை வெளியிட்டுள்ளோம், 130 க்கும் மேற்பட்ட வேளாண் கருவிகளைத் தயாரித்துள்ளோம். குறைவான விவசாய நிலப்பரப்பைப் பயன்படுத்திக் கொண்டு, தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி லாபகரமாக உற்பத்தி செய்ய வேண்டும் என்றார். மாவட்ட வேளாண் இணை இயக்குநர் கணேசன், தோட்டக் கலை அலுவலர் அசோக் மேக்ரின், ரப்பர் வாரிய துணை ஆணையர் முரளிதரன், முன்னோடி வங்கி மேலாளர் சந்திரசேகரன், திருப்பதிசாரம் நெல் ஆராய்ச்சி மைய பேராசிரியர் மற்றும் தலைவர் எ.பி.எம். கிருபாகரன், பேச்சிப்பாறை தோட்டக் கலை ஆராய்ச்சி மைய பேராசிரியர் மற்றும் தலைவர் ஐ. பிரேம் ஜோஸ்வா, தோவாளை மலர் ஆராய்ச்சி நிலைய இணைப் பேராசிரியர் மற்றும் தலைவர் ரா. சுவர்ணபிரியா ஆகியோர் பேசினர். முன்னதாக, பேச்சிப்பாறை வேளாண் அறிவியல் நிலைய பேராசிரியர் மற்றும் தலைவர் க. இறைவன் வரவேற்றார். இணைப் பேராசிரியர் தி. தங்க செல்வபாய் நன்றி கூறினார். நிகழ்ச்சியில் திரளான விவசாயிகள் பங்கேற்றனர். அவர்களுக்கு கருத்துக் காட்சி, விவசாய தொழில் நுட்பக் கருவிகள் குறித்த விளக்கம் அளிக்கப்பட்டது.

குறிச்சொற்கள்: ,

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..

Post a Comment