இந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....

மரபணு மாற்ற கத்திரிக்காய் அனுமதியில் அவசரம் ஏன்?

மரபணு மாற்ற கத்திரிக்காயை அனுமதிப்பது தொடர்பான முழு அளவிலான ஆய்வுகள் முடிவடையாத நிலையில், அவற்றை அனுமதிக்க சில அமைச்சர்களும், அதிகாரிகளும் அவசரம் காட்டுவதாக குன்னூரில் நடைபெற்ற விவாத மேடையில் குற்றம் சாட்டப்பட்டது. தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் குன்னூரிலுள்ள ஒய்எம்சிஏ அரங்கில் மரபணு மாற்ற கத்திரிக்காய் குறித்த விவாத மேடை நடத்தப்பட்டது. இதில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநில துணைத்தலைவர் சுப்பிரமணியம் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். அப்போது அவர் பேசுகையில், கடந்த கால வரலாற்றை புரட்டி பார்க்கும்போது ஒரு புதிய தொழில்நுட்பம் வரும்போது அதை ஒரு சாரார் எதிர்ப்பது வழக்கமாகி வருகிறது. இருப்பினும் மரபணு மாற்ற உணவுப்பொருட்களை ஐரோப்பிய நாடுகள் தங்கள் நாட்டில் பயிர் செய்யவும், விற்பனைக்கும் தடை விதித்துள்ளன. அதைப்போலவே மரபணு மாற்ற கத்திரிக்காயை இந்தியாவில் பயிரிட அனுமதிக்கக்கூடாது என்றார். குன்னூர் பாஸ்டியர் ஆய்வக உதவி இயக்குநர் டாக்டர் வெங்கட்ரமணா பேசுகையில், மரபணு மாற்ற கத்திரிக்காயை பொறுத்தமட்டில் அரைகுறை ஆராய்ச்சிகள் மட்டும் செய்யப்பட்டுள்ளன. பன்னாட்டு நிறுவனங்களின் வியாபார நோக்கத்திற்காக அவசர கதியில் இந்தியாவில் அவற்றை அறிமுகப்படுத்த முயற்சிகள் நடைபெறுகின்றன. இதை மக்கள் எதிர்க்க வேண்டுமென்றார். பாஸ்டியர் ஆய்வக இளம் விஞ்ஞானி டாக்டர் சிவானந்தா பேசுகையில், கத்திரிக்காயின் மரபணுவுடன் பாசில்லஸ் துரங்கசீயஸ் என்ற மண்ணிலுள்ள பாக்டீரியாவின் மரபணுவை இணைத்து பி.டி. கத்திரிக்காய் உற்பத்தி செய்யப்படுகிறது. கத்திரிக்காயில் உண்டாகும் பூச்சிகளை கொல்லும் ஆற்றல் கொண்ட ஒருவித விஷப்பொருளை உள்ளடக்கிய புரதத்தை உற்பத்தி செய்யும் இந்த பாக்டீரியா, கத்திரிக்காயை உண்ணும் மனித உடலிலும் எத்தகைய மாற்றங்களை உருவாக்கும் என்பதைக் குறித்த சரியான தகவல்கள் இல்லை என்றார். குன்னூர் பிராவிடன்ஸ் மகளிர் கல்லூரி பேராசிரியை டாக்டர் சுஜாதா பேசுகையில், நம் நாட்டிலுள்ள 250க்கும் மேற்பட்ட கத்திரிக்காய் இனங்கள், இந்த பி.டி. கத்திரிக்காயால் முற்றிலும் அழியுமெனவும், சுவையற்ற இந்த உணவுப்பொருளை நாம் அனுமதிக்கக்கூடாது எனவும் குறிப்பிட்டார். அறிவியல் இயக்க நீலகிரி மாவட்ட செயலர் ராஜூ பேசுகையில், பி.டி.கத்திரிக்காயை அனுமதிப்பது குறித்து முடிவெடுக்க மத்திய அரசு 30 விஞ்ஞானிகள் கொண்ட குழுவை அமைத்துள்ளது. உச்சநீதிமன்றமும் உஷா பார்கவா என்ற விஞ்ஞானியை பார்வையாளராக நியமித்துள்ளது. பி.டி. கத்திரிக்காயை அனுமதிக்கும் முன்னர் 30 விதமான சோதனைகள் செய்யப்பட வேண்டும். ஆனால், இதுவரை 12 விதமான சோதனைகள் மட்டுமே நடத்தப்பட்டுள்ளன. அதற்குள் சில மத்திய அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் பி.டி.கத்திரிக்காயை உடனடியாக அனுமதிக்க வேண்டுமென வற்புறுத்துகின்றனர். பன்னாட்டு நிறுவனங்கள் இந்திய மக்களின் நல்வாழ்வை வியாபாராமாக்கி பணம் சம்பாதிப்பதாகவும் குற்றம் சாட்டினார். குன்னூர் நுகர்வோர் பாதுகாப்பு சங்க தலைவர் மனோகரன் பேசுகையில், இதுபோன்ற விஷப் பொருட்களை சோதித்து பார்க்க இந்திய மக்கள் எலிகள் அல்ல எனவும், இந்தியா பிற நாடுகளின் குப்பைத் தொட்டியாக மாறி வருவதாகவும் குறிப்பிட்டார். பாஸ்டியர் ஆய்வக ஆராய்ச்சியாளர் ஜெகந்நாதன் பேசுகையில், இந்தியாவிலுள்ள குழந்தைகளில் 46 சதத்தினர் ஊட்டச்சத்து குறைந்தவர்களாக உள்ளதாக ஐ.நா. சபை அறிவித்துள்ளது. இதற்கு காரணம் நமது நாட்டில் ஊட்டச்சத்து மிக்க பொருட்கள் போதுமான அளவிற்கு இருந்தாலும் அதை வாங்கி உண்ணும் ஆற்றல் நமது மக்களில் பாதி பேருக்கு இல்லை எனவும் குறிப்பிட்டார். அறிவியல் இயக்க நீலகிரி மாவட்ட தலைவர் பெள்ளி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், தேசிய பசுமைப்படை திட்ட ஒருங்கிணைப்பாளர் லட்சுமிநாராயணன், அருவங்காடு கிராமிய அபிவிருத்து இயக்க கள நிர்வாகிகள், குன்னூர் பழங்குடியினர் மற்றும் மேம்பாட்டு அறக்கட்டளை அமைப்பினர் ஆகியோருடன் பொதுநல அமைப்பினரும், கல்லூரி மாணவியரும் திரளாக பங்கேற்று தங்கள் கருத்துகளை பரிமாறிக் கொண்டனர்.

குறிச்சொற்கள்: ,

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..

Post a Comment