இந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....

கூலி ஆட்கள் பற்றாக்குறையால் குண்டுவெல்லம் உற்பத்தி குறைவு

ஈரோடு மாவட்டம் கோபி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் ஏற்பட்டுள்ள கூலி ஆட்கள் பற்றாக்குறையால் குண்டு வெல்லம் உற்பத்தி குறைந்துள்ளது. மாறாக அச்சு வெல்லம் உற்பத்தி அதிகரித்துள்ளது. ஈரோடு மாவட்டத்தில் அரக்கன்கோட்டை, தடப்பள்ளி மற்றும் கீழ்பவானி பாசன பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் கரும்பு பயிரிடப்படுகிறது. பெரும்பாலான கரும்பு பயிரிடும் விவசாயிகள் சர்க்கரை ஆலைகளோடு ஒப்பந்தம் செய்து கொள்கின்றனர். சர்க்கரை ஆலைகளோடு ஒப்பந்தம் செய்து கொள்ளாமல் கரும்பை சாகுபடி செய்யும் விவசாயிகளிடம் இருந்து கரும்பை விலைக்கு வாங்கி, குண்டு வெல்லம் தயாரிக்கப்படுகிறது. கரும்பின் சாறை பிழிந்து எடுத்து, மெகா சைஸ் கொப்பரையில் பதமாக காய்ச்சி எடுக்கப்படுகிறது. காய்ச்சிய கரும்பு சாறை உலர்த்தி குண்டு வெல்லம் தயாரிக்கப்படுகிறது. குண்டு வெல்லம் தாயாரிக்க 15 முதல் 20 கூலி ஆட்கள் வரை தேவைப்படுகிறது.



கடந்த பத்து ஆண்டாக கோபி பகுதியில் விவசாயம் மற்றும் அதன் தொடர்பான பணிகளுக்கு போதிய ஆட்கள் கிடைப்பது இல்லை. நெல் நாற்று நடுவது முதல் அறுவடை செய்வது வரை விவசாய கூலி ஆட்களுக்கு வெளி மாவட்டத்தையே நம்பியிருக்க வேண்டிய நிலை உள்ளது. குண்டு வெல்லம் தயாரிப்பு பணிகளுக்கு அதிகளவில் ஆட்கள் கிடைப்பது இல்லை. இதனால் கோபி பகுதியில் குண்டு வெல்லம் தயாரிப்பு நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. அச்சு வெல்லம் தயாரிப்பு பணிக்கு நான்கு பேர் இருந்தால் போதும் என்பதால், விவசாயிகள் அச்சு வெல்லம் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.


கடந்த வார நிலவரப்படி 60 கிலோ மூட்டை குண்டு வெல்லம் முதல் தரத்திற்கு 1,690 ரூபாய், இரண்டாம் தரம் 1,580 ரூபாய், மூன்றாம் 1,550 ரூபாய்க்கு விற்றது. ஆனால், 30 கிலோ எடை கொண்ட அச்சு வெல்லம் மூட்டை 900 முதல் 1,000 ரூபாய் வரை விற்பனையானது.



அச்சு வெல்லம் உற்பத்தியாளர்கள் கூறியதாவது:குண்டு வெல்லத்தை விட அச்சு வெல்லம் பல வகைகளில் உணவாக, மருந்தாக பயன்படுத்தப்படுகிறது. தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படும் அச்சு வெல்லத்துக்கு கேரளாவில் மவுசு உண்டு. அச்சு வெல்லம் தயாரிக்க குறைந்தபட்சம் நான்கு பேர் இருந்தால் போதும். காய்ச்சப்பட்ட கரும்பு சாறை ஊற்ற தேவையான மரத்தால் செய்யப்பட்ட அச்சுகள் 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் ரூபாய் வரை கிடைக்கிறது.ஒரே நேரத்தில் 1,000 அச்சு வெல்லங்களை வேகமாக உற்பத்தி செய்ய முடியும். ஆனால் குண்டு வெல்லத்தை ஒன்றன் பின் ஒன்றாகதான் பிடிக்க வேண்டும். உற்பத்தி செலவு குறைவு, கூலி ஆட்கள் பற்றாக்குறையால் குண்டு வெல்லம் தயாரிக்க முடியவில்லை. அச்சு வெல்லம் தயாரிப்பில் விவசாயிகளுக்கு ஓரளவுக்கு லாபம் கிடைக்கிறது. இதனால் குண்டு வெல்லம் தயாரிப்பில் ஈடுப்பட்ட உற்பத்தியாளர்கள் தற்போது அச்சு வெல்லம் தயாரிப்புக்கு மாறி வருகின்றனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

குறிச்சொற்கள்: , , ,

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..

Post a Comment