உளுந்து சாகுபடிக்கு தேவை 3 நாள் காவிரி நீர்: விவசாயிகள் எதிர்பார்ப்பு
7:26 AM உளுந்து சாகுபடிக்கு தேவை 3 நாள் காவிரி நீர், சிறப்பு, செய்திகள், தலைப்பு 0 கருத்துரைகள் Admin
3 நாள்கள் காவிரி நீர் கிடைத்தால் போதும், 40 ஆயிரம் ஏக்கரில் உளுந்து சாகுபடி செய்ய முடியும் என்று, கடலூர் மாவட்ட டெல்டா விவசாயிகள் தெரிவிக்கிறார்கள். கடலூர் மாவட்டத்தில் ஆண்டு தோறும் சுமார் 1.50 லட்சம் ஏக்கரில் உளுந்து சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.ஆனால், கடந்த 3 ஆண்டுகளாக காவிரி டெல்டா பாசனப் பகுதிகளில் வடகிழக்குப் பருவ மழையாலும், ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்காலும் உளுந்து சாகுபடி முற்றிலும் பாதிக்கப்பட்டு, விவசாயிகளிடம் விதை உளுந்துகூட இல்லாமல் போயிற்று.இந்த ஆண்டு கடலூர் மாவட்ட டெல்டா பாசனப் பகுதிகளுக்கு கால தாமதமாகவே தண்ணீர் விடப்பட்டதாலும், விதை உளுந்து உரிய நேரத்தில் கிடைக்காததாலும், அண்மையில் அரசு தருவித்து இருக்கும் விதை உளுந்து விலை அதிகமாக இருப்பதாலும், உளுந்து சாகுபடி எதிர்பார்த்தபடி நடைபெறவில்லை என்று விவசாயிகள் தெரிவிக்கிறார்கள்.இதனால் டெல்டா பாசனப் பகுதிகளில் 1 லட்சம் ஏக்கரில் நடைபெற்று இருக்க வேண்டிய உளுந்து சாகுபடி, சுமார் 50 ஆயிரம் ஏக்கருடன் நின்று போய்விட்டதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கிறார்கள். இந்த நிலையில் மேட்டூர் அணை ஜனவரி 28-ம் தேதியுடன் மூடப்பட்டு விட்டது.கடலூர் மாவட்டத்தில் வீராணம் ஏரிப் பாசன வாய்க்கால்களும், இதர காவிரிப் பாசன வாய்க்கால்களும் மூடப்பட்டுவிட்டன.ஆனால், சென்னைக்குக் குடிநீர் கொண்டு செல்வதற்காக, வீராணம் ஏரியின் முழுக் கொள்ளளவான 47.5 அடிக்கு தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டு இருக்கிறது. வீராணத்துக்கு காவிரி நீரை விநியோகிக்கும் கொள்ளிடம் கீழணையிலும் தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் கடலூர் காவிரி பாசனப் பகுதிகளில் 15 நாள்களுக்கு ஒரு முறை என, 3 தினங்கள் மட்டும் தண்ணீர் திறந்து விட்டால் போதும், சுமார் 40 ஆயிரம் ஏக்கரில் உளுந்து சாகுபடியை முடித்துவிடலாம் என்று விவசாயிகள் கூறுகிறார்கள்.வீராணம் ஏரியை மராமத்து செய்ய இருப்பதால், தண்ணீர் முழுவதையம் விரைவில் வெளியேற்ற இருப்பதால், இதில் சிரமம் இருக்காது என்றும் விவசாயிகள் கருதுகிறார்கள். இதுகுறித்து பாசிமுத்தான் ஓடை விவசாயிகள் சங்கத் தலைவர் பி.ரவீந்திரன் கூறியது: இந்த ஆண்டு காவிரி நீர் தாமதமாகக் கிடைத்தது. விவசாயிகளிடம் விதை உளுந்து இல்லை. வேளாண்துறை தாமதமாக தருவித்து இருக்கும் விதை உளுந்து, விலை அதிகமாக இருக்கிறது. பனி தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்த நிலையில் காவிரி நீர் 15 நாள்களுக்கு ஒருமுறை என 3 தினங்கள் மட்டும் கொடுத்தால், உளுந்து சாகுபடியை முடித்துவிடலாம் என்ற நம்பிக்கை இருக்கிறது.மராமத்துப் பணிகளுக்காக வீராணம் ஏரி நீரை திறந்து விட இருக்கிறார்கள். அதை உளுந்து பாசனத்துக்கு ஏன் அளிக்கக் கூடாது? பயறு வகைகள் சாகுபடி இந்த ஆண்டு வெகுவாகக் குறைந்து விட்டதாகக் கவலைப்படும் தமிழக அரசு, மேட்டூர் அணையிலும், கல்லணையிலும் கொள்ளிடம் கீழணையிலும், வீராணம் ஏரியிலும் தேக்கி வைத்து இருக்கும் காவிரி நீரில் கொஞ்சம் இந்த ஏழை விவசாயிகளுக்கு ஏன் வழங்கக் கூடாது?வீராணம் ஏரியில் இருந்து மொத்தம் 2 அடி நீரை மட்டும் விவசாயிகளுக்குக் கொடுத்தால் போதும். 40 ஆயிரம் ஏக்கரில் இருந்து குறைந்தபட்சம் 60 ஆயிரம் டன் உளுந்தை விளைவிக்க முடியும்.விவசாயிகளிடம் இருந்து தற்போது உளுந்து கிலோ ரூ.40-க்குக் கொள்முதல் செய்யப் படுகிறது. சந்தையில் ரூ.60-க்கு விற்பனை செய்யப்படுகிறது என்றார் ரவீந்திரன்.

குறிச்சொற்கள்: உளுந்து சாகுபடிக்கு தேவை 3 நாள் காவிரி நீர், சிறப்பு, செய்திகள், தலைப்பு
பகிர்தல் மிக எளிமையானது,அழகானது