'கள்' இறக்கும் போராட்டம் விவசாயிகள் இன்று ஆலோசனை
11:10 AM 'கள்' இறக்கும் போராட்டம் விவசாயிகள் இன்று ஆலோசனை, செய்திகள் 0 கருத்துரைகள் Admin
தடை மீறி "கள்' இறக்கும் போராட்டம் நடத்துவது குறித்த விவசாயிகளின் ஆலோசனை கூட்டம் இன்று நடக்கிறது. தமிழகம் முழுவதும் கடந்தாண்டு ஜன., 21ல் விவசாயிகள் மற்றும் மரம் ஏறும் தொழிலாளர்கள் "கள்' இறக்கும் போராட்டம் நடத்தினர். அதன் பின், "கள்'ளுக்கு ஆதரவு, எதிர்ப்பு என தமிழக அரசியல் களம் பரபரப்பானது. போராட்டம், பேரணி என மாநிலம் முழுவதும் அமைப்புகள் தீவிரமாக செயல்பட்டன.
விவசாயிகளின் கோரிக்கையை பரிசீலித்த அரசு, மாநிலம் முழுவதும் முழுமையாக ஆய்வு நடத்தி அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்க கமிட்டி அமைத்தது. இக்கமிட்டி, பல்வேறு பகுதிகளில் விவசாயிகள், மரம் ஏறும் தொழிலாளர்கள் உள்பட தரப்பையும் சந்தித்து ஆய்வு நடத்தியது. இந்நிலையில், மாநிலம் முழுவதும் உள்ள பல்வேறு அமைப்புகளை ஒன்றிணைத்து "தமிழக கள் இயக்கம்' துவங்கப்பட்டது.
இந்த அமைப்பு தொடர்ந்து பகுதி வாரியாக விவசாயிகளின் ஆலோசனை கூட்டங்களை நடத்தியது. மேலும், இந்த கூட்டங்களில், வரும் 21ம் தேதி முதல் மீண்டும் "கள்' இறக்கும் போராட்டம் நடத்தவும் அறிவிப்பு வெளியிட்டது. இந்நிலையில், இந்த அமைப்பின் ஆலோசனைக் கூட்டம் இன்று, கோவை ரயில்வே ஸ்டேஷன் எதிரேயுள்ள அண்ணாமலை ஓட்டலில் காலை 10.00 மணிக்கு நடக்கிறது. இக்கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என கூறப்படுகிறது.
போலீஸ் கண்காணிப்பு: "கள்' இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டம் மற்றும் "கள்' இறக்கும் போராட்ட அறிவிப்பு குறித்து மது விலக்கு மற்றும் தனிப்பிரிவு போலீசார் தீவிரமாக தகவல் திரட்டி வருகின்றனர். சூலூர் சுற்றுப்பகுதியில் சில நாட்களுக்கு முன் மது விலக்கு பிரிவு ஏ.டி.எஸ்.பி.,ஜெயபாண்டியன் தலைமையிலான போலீசார் தோட்டங்களுக்கு சென்று சோதனை நடத்தினர். "கள்' இறக்கிய விவசாயிகளிடம், பதநீராக மாற்றிக்கொள்ள அறிவுறுத்தி சென்றனர். பதநீர் இறக்க உரிமம் பெறாதவர்களிடம், அதற்கான உரிமத்தை பெற்றுக் கொள்ளுமாறும் தெரிவித்தனர். "கள்' இறக்கும் போராட்டம் தொடர்பாக போலீசார் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தியுள்ளனர்.
குறிச்சொற்கள்: 'கள்' இறக்கும் போராட்டம் விவசாயிகள் இன்று ஆலோசனை, செய்திகள்
பகிர்தல் மிக எளிமையானது,அழகானது