நெல் அறுவடைக்கு தென் மாவட்ட கூலியாட்கள் கோபி வட்டாரத்தில் நூற்றுக்கணக்கானோர் முகாம்
11:21 AM செய்திகள், நெல் அறுவடைக்கு தென் மாவட்ட கூலியாட்கள் கோபி வட்டாரத்தில் 0 கருத்துரைகள் Admin
நெற்பயிர் தற்போது அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளது. வழக்கமாக கோபி பகுதியில் தை மாதத்துக்கு முன் 50 சதவீத அறுவடைப் பணி முடிந்து விடும். விவசாய கூலியாட்கள் பற்றாக்குறையால் பொங்கல் பண்டிகை முடிந்த நிலையில் தற்போதுதான் நெல் அறுவடைப் பணிகள் தாமதமாக துவங்கியுள்ளது. வழக்கமாக கோபிக்கு சேலம், தர்மபுரி, நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் இருந்து அதிகளவில் விவசாய கூலியாட்கள் கோபிக்கு வருவர். தென்மாவட்டங்களில் சென்றாண்டு எதிர்பார்த்த மழை பெய்யவில்லை. இதனால் மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் விவசாயப் பணிகள் பெரியளவில் இல்லை. அங்கிருந்து கோபிக்கு விவசாய கூலியாட்கள் வந்த வண்ணம் உள்ளனர். விவசாய கூலியாட்களுக்கு ஒரு ஏக்கருக்கு ஆறு மூட்டை நெல் (தலா 66 கிலோ) கூலியாக வழங்கப்படுகிறது. நிலத்தில் ஈரப்பதம் மற்றும் சேறு அதிகம் இருந்தால், ஏழு மூட்டைகள் கூலியாக வழங்கப்படுகிறது.
விவசாய கூலியாட்கள் பற்றாக்குறையால் நெல் அறுவடை எந்திரங்களுக்கான வாடகையும் நடப்பாண்டு உயர்ந்துள்ளது. பெல்ட் ரக எந்திரத்துக்கு 1,500 ரூபாயில் இருந்து 2,000 ரூபாய் வரையிலும், டயர் ரக எந்திரத்துக்கு 1,000 ரூபாயில் இருந்து 1,500 ரூபாயாகவும் உயர்ந்துள்ளது. எந்திரங்கள் மூலம் அறுவடை செய்யப்படும் ஆறு கிலோ வைக்கோல் மூன்று ரூபாய்க்கும், விவசாய கூலியாட்கள் மூலம் அறுவடை செய்யப்படும் ஆறு கிலோ வைக்கோல் ஏழு ரூபாய்க்கும் விலை கிடைக்கிறது. நெல் மற்றும் வைக்கோலுக்கு கூடுதல் விலை கிடைப்பதால், விவசாய கூலியாட்கள் மூலம் அறுவடை செய்யவே, கோபி பகுதியை சேர்ந்த விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
குறிச்சொற்கள்: செய்திகள், நெல் அறுவடைக்கு தென் மாவட்ட கூலியாட்கள் கோபி வட்டாரத்தில்
பகிர்தல் மிக எளிமையானது,அழகானது