இந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....

உழவர் சந்தையில் வாழைச்சாறு விற்பனை : அசத்தும் ராஜபாளையம் விவசாயி


ராஜபாளையத்தை சேர்ந்த விவசாயி ஒருவர், உழவர் சந்தையில் வாழைச்சாறு விற்பனையில் ஈடுபட்டு வருகிறார். ராஜபாளையம் விவசாயி ராஜேந்திரன்(50). 5ம் வகுப்பு வரை படித்துள்ள இவருக்கு கீழராஜகுலராமன் கிராமத்தில் 2 ஏக்கர் நிலம் உள்ளது. ராஜேந்திரன், ராஜபாளையம் உழவர் சந்தையில் காய்கறி விற்பனையில் இறங்கினார்.

காய்கறி பயிரிடுவதற்கான சாகுபடி செலவுகள் அதிகரித்ததை தொடர்ந்து, அதிளவில் வாழை பயிரிடத் துவங்கினார். உழவர் சந்தையில் வாழைப்பூ, தண்டு, இலை, காய்களை விற்று வந்த நிலையில், இவரது வாடிக்கையாளர்கள் பலர், வாழைச்சாறு எங்கு கிடைக்கும் என தொடர்ந்து விசாரிக்க துவங்கினர். இதையடுத்து தானே தினமும் வாழைச்சாறு விற்பனையை துவக்கிவிட்டார். 100 மி.லி. வாழைச்சாறு 10 ரூபாய்க்கு வழங்குகிறார். நாளொன்றுக்கு குறைந்தபட்சம் 6 லிட்டர் விற்கிறார்.
ராஜேந்திரன் கூறியதாவது: சிறுநீரகக் கல்லால் பாதிக்கப்பட்டவர்கள் வாழைச்சாறு அருந்தினால் விரைவில் குணமாகும். எனவே, வாழைச்சாறு விற்பனையை செய்து வருகிறேன். எதிர்பார்த்ததைவிட நல்ல லாபம் கிடைக்கிறது.தினமும் உழவர் சந்தைக்கு வர முடியாதவர்கள், பாட்டிலில் வாழைச்சாறை வாங்கிச் சென்று, "பிரிட்ஜில்' வைத்து பின் பயன்படுத்துகின்றனர், என்றார்.
மருத்துவம் கூறுவது என்ன: ராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரி சித்த மருத்துவ பிரிவு உதவி மருத்துவ அலுவலர் டி.கீதா கூறியதாவது: சிறுநீரகத்தில் உள்ள கல்லின் தன்மை ஒவ்வொருவருக்கும் மாறுபடும். அதற்கேற்ப சிகிச்சை வழங்க வேண்டும். சித்த மருத்துவத்தில் இதற்கென, நெருஞ்சிக் குடிநீர், நன்டுக்கல்பற்பம், அமுக்கிரா சூரணம் போன்றவற்றை தருகிறோம்.
சிறுநீரக் கல் நோயால் பாதிக்கப் பட்டோரை, வாழைச்சாறு அருந்துமாறு நாங்கள் ஆலோசனை வழங்குவதில்லை. எனினும், அதை குடித்தாலும் தவறில்லை. பொதுவாக வாழைப்பூ, வாழைத் தண்டு போன்றவற்றை சமைத்து சாப்பிடுமாறு அறிவுறுத்துகிறோம். வாழை சார்ந்த பொருட்களை சாப்பிடுவதன் மூலம், சிறுநீர் அதிகளவில் பிரிவதுடன், எளிதாகவும் வெளியேறும். அதனுடன் சிறிய கற்களும் சேர்ந்து எளிதாக வெளியேறிவிட வாய்ப்புள்ளது. சுத்தமான முறையில் சேகரிக்கப்பட்ட வாழைச்சாறை காலை வேளைகளில் அளவோடு குடிப்பது நல்லது, என்றார்.
விவசாயத்தில் அதிக லாபம் பெற மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்களை விற்பனை செய்யுங்கள் என விவசாய அறிஞர்கள் பலர் வலியுறுத்துகின்றனர். அதாவது, மாம்பழமாக விற்காதீர்கள், மாம்பழக் கூழ் தயாரியுங்கள். அதே போல், பசும் பாலை பால்கோவாகவும், கொய்யாப்பழத்திலிருந்து ஜூஸ் தயாரித்தும், வெங்காயம், பூண்டு உள்ளிட்டவற்றை ஊறுகாயாகவும் மாற்றி விற்பனை செய்தால் கூடுதல் லாபம் பெறலாம் என அறிவுறுத்துகின்றனர்.
அந்த வகையில் வழக்கமான முறையில் இருந்து மாறி, வாழைச்சாறைக்கூட வணிகப் பொருளாக மாற்றி விற்பனை செய்து வருகிறார் ராஜேந்திரன்.

குறிச்சொற்கள்: ,

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..

Post a Comment