இந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....

சந்தைக்கு வருமா பி.டி. கத்தரிக்காய்?

Swine Flu
வேளாண் ஆராய்ச்சியின் பரிணாம வளர்ச்சியாக கருதப்படும் பி.டி. கத்தரிக்காய் வேண்டுமா, வேண்டாமா என்ற சர்ச்சை தேசிய விவாதமாக மாறியிருக்கிறது. விவசாயிகள் மத்தியில் எதிர்ப்பையும், வேளாண் விஞ்ஞானிகள் மத்தியில் ஆதரவையும் பெற்றுள்ளதால், இந்த கத்தரிக்காய் விவகாரம் காரசாரமாகி இருக்கிறது. ‘கத்தரிக்காய் முற்றினால் கடைத்தெருவுக்கு வரும்’ என்பது நம்மூர் பழமொழி. ஆனால், இந்த விஷயத்தில் சர்ச்சை முற்றி முடிவுக்கு வந்தால்தான் இந்த நவீன கத்தரிக்காய் கடைத்தெருவுக்கு வரும் என்பது உறுதி.

‘பேஸ்லெஸ் துரிஞ்சீயஸ்’ என்ற மரபணுவை கொண்டு, உயிர் தொழில்நுட்ப அடிப்படையில் கத்தரிக்காயில் நடத்தப்பட்ட ஆராய்ச்சியின் பலன்தான் பி.டி.கத்தரிக்காய். அமெரிக்காவில் முதன்முதலாக இந்த ஆராய்ச்சி மூலம் பருத்தி, மக்காச்சோளம், சோயா மொச்சை போன்றவற்றில் புதிய ரகங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. பி.டி.பருத்தியில் காய்ப்புழுக்கள் கட்டுப்படுத்தப்பட்டு, மகசூல் பன்மடங்கு பெருகியது.

இந்தியாவில் பி.டி.பருத்திக்கான ஆராய்ச்சி 1996ம் ஆண்டில் தொடங்கியபோதே எதிர்ப்பும் கிளம்பியது. ஆனாலும், மத்திய அரசு அனுமதி அளித்தது. இந்த ஆராயச்சியின் முடிவை, மத்திய அரசின் மரபணு தொழில்நுட்ப அங்கீகாரக் குழு ஆய்வு செய்தது. எந்த சுகாதாரக் கேடும் இல்லை, ஆடு மாடுகள் சாகவில்லை என்பதை உறுதி செய்தது. பின்னர் 2002ல் வர்த்தக பயன்பாட்டிற்கு அனுமதி தந்தது.

பழைய பருத்தி ரகத்தை பயிரிட்டால், காய்ப்புழுக்களை கட்டுப்படுத்த 10 முதல் 12 தடவை பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்க வேண்டும். பி.டி.ரகத்தில், 2 முறை மருந்து அடித்தால் போதும். விவசாயிகளுக்கு செலவு மிச்சம். பழைய ரக பருத்தி ஆறு முறை வெடிக்கும். உடனடியாக அறுவடை செய்யாவிட்டால் வீணாகி விடும். பி.டி.ரகத்திற்கு அந்த பிரச்னை இல்லை. ஒரே முறைதான் வெடிக்கும். அறுவடை எளிதாக முடிந்து விடும். இந்த நன்மைகள் காரணமாக, 7 ஆண்டுகளில் ஒட்டுமொத்த பருத்தி சாகுபடி பகுதிகளில் 80 சதவீதத்தை பி.டி.பருத்தி பிடித்துக் கொண்டது.

இதுகுறித்து தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தர் முருகேசபூபதி கூறுகையில், ‘2002க்கு முன்னர் இந்தியாவின் தேவை 24 மில்லியன் பேல் பருத்தி. ஆனால், 16 மில்லியன் பேல்கள்தான் உற்பத்தி செய்யப்பட்டன. மீதியை இறக்குமதி செய்தோம். பி.டி.ரகத்திற்கு மாறிய பின்னர், 32 மில்லியன் பேல் உற்பத்தி செய்கிறோம். தேவைக்கு போக மீதியை ஏற்றுமதி செய்கிறோம். இதுதான் அறிவியல் வளர்ச்சியின் பயன். விவசாயிகள் இதை முழுமையாக ஏற்றுக் கொண்டதும் முக்கிய காரணம். அதிலும், பொள்ளாச்சி அருகே வடக்கிபாளையம் கிராமத்து விவசாயிகள் மழையை நம்பி மானாவாரி சாகுபடி செய்து, ஏக்கருக்கு 12 குவிண்டால் மகசூல் பார்க்கின்றனர்’ என்றார்.

இந்த ஆராய்ச்சியின் அடுத்த கட்டம்தான் கத்தரிக்காய். நாட்டில் அதிகம் பேர் பயன்படுத்தக் கூடியது. கத்தரிக்காய் மகசூலுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்தவை இரு வகையான காய்ப்புழுக்கள். கத்தரிக்காயில் கிட்டத்தட்ட 70 சதவீதம் அளவுக்கு இந்த நோய் தாக்குதலால் சேதம் ஏற்பட்டது. மருந்து அடித்தாலும் இப்புழுக்கள் சாவதில்லை. அப்படியே செத்தாலும் கத்தரிக்காயில் விழும் சொத்தை நீங்குவதில்லை. இந்த குறைபாட்டை போக்க வந்ததுதான் பி.டி.கத்தரிக்காய். மரபணு மாற்றம் செய்யப்பட்டது.

அதற்கான ஆராய்ச்சியில் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் ஈடுபட்டு, நான்கு பி.டி.ரக கத்தரிக்காய்களை கண்டுபிடித்தது.இது பற்றி துணைவேந்தர் முருகேசபூபதி கூறுகையில், ‘காய்ப்புழுக்களை கட்டுப்படுத்தக்கூடிய மரபணுக்களை கொண்டது இந்த ரகம். கோவை, மதுரை, கிள்ளிகுளம், பாலூர் ஆகிய இடங்களில் இந்த ரகங்கள் அறிமுகம் செய்யப்பட்டன. இதனால் எந்த பக்க விளைவுகளும் இல்லை என்பதை ஆய்வு மூலம் உறுதி செய்து, மத்திய அரசின் அங்கீகாரமும் பெறப்பட்டுள்ளது. எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதால், பொதுமக்கள் கருத்து கேட்டறிந்த பின்னர் வெளியிடலாம் என்று வைத்துள்ளோம். மக்கள் விருப்பத்தின் அடிப்படையில் இவை வர்த்தக பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்’ என்றார்.

காய்ப்புழுக்கள் எப்படி உருவாகும்?

கத்தரிக்காய் செடிகள் காய்விட்டதும் அதன்மீது வண்ணத்துப்பூச்சிகள் முட்டையிடுகின்றன. அதிலிருந்து 3 நாளுக்கு பிறகு, லார்வா என்ற புழு உருவாகும். உருவான 4 மணி நேரத்திற்குள் அதை மருந்தடித்து அழிக்க வேண்டும். இல்லையேல் காய்க்குள் புகுந்துவிடும். அப்புறம் அழிக்க முடியாது. காய்க்குள் ஊடுருவக்கூடிய மருந்து உள்ளது. அதை அடித்தால் புழு சாகலாம். ஆனால், சொத்தை ஏற்படுவதை தவிர்க்க முடியாது.
பி.டி.ரக கத்தரிக்காயில் இந்த புழு உள்ளே போனதும் இறந்து விடும். அதற்கான மரபணு கத்தரிக்காய்க்குள் இருக்கிறது. அந்த மரபணு புழுக்களுக்குதான் விஷமாகுமே தவிர, மனிதருக்கு அல்ல. ஏனெனில் எலி, பூனை போன்ற பிராணிகளிடம் சோதனை நடத்திய பின்னர்தான் அந்த மரபணு ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது என்கின்றனர் வேளாண் விஞ்ஞானிகள்.

கத்தரிக்காய் உற்பத்தி

தமிழகத்தில் 7676 ஹெக்டேர் பரப்பில் கத்தரிக்காய் பயிரிடப்படுகிறது. 82,049 மெட்ரிக் டன் உற்பத்தி செய்யப்படுகிறது. ஒரு ஹெக்டேருக்கு 10.6 டன் மகசூல் கிடைக்கும். இதில் 70 சதவீதம் அளவுக்கு காய்ப்புழுக்களால் சேதம் அடைகின்றன. தமிழகத்தில் 1.2 லட்சம் ஹெக்டேரில் பருத்தி சாகுபடி செய்யப்படுகிறது. இதில் 90 ஆயிரம் ஹெக்டேர் வரை பி.டி.ரக பருத்திதான் பயிரிடப்படுகிறது என்பது வேளாண் பல்கலை. கூறும் புள்ளிவிவரம்.

விவசாயிகள் எதிர்ப்பு ஏன்?

பி.டி.ரகம் எனும் மரபணு மாற்றம் செய்யப்பட்ட கத்தரிக்காய்க்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதுபற்றி, தமிழ்நாடு இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அரச்சலூர் செல்வம் கூறியதாவது:

பி.டி.ரகம் என்பது முற்றிலும் செயற்கையானது. விளைச்சலை அதிகப்படுத்தக் கூடிய ரகமும் அல்ல. கத்தரிக்காயை தாக்கக் கூடிய பூச்சிகள் என்பது பலவகை. அதில் ஒரு வகை பூச்சிகளை மட்டுமே இந்த மரபணு கட்டுப்படுத்துகிறது. இதனால் மற்ற பூச்சிகளின் வளர்ச்சி அதிகரிக்கிறது. அதை கட்டுப்படுத்த பூச்சிக்கொல்லி மருந்து தெளித்துதான் ஆக வேண்டும்.

காய்ப்புழுக்களை கட்டுப்படுத்த மரபணு மாற்றம்தான் அவசியம் என்றில்லை. ஏற்கனவே வேளாண் பல்கலைக்கழகம் பரிந்துரைத்துள்ள ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகள் உள்ளன. இந்த முறைப்படியும், இயற்கை விவசாய முறைப்படியும் ஆந்திராவில் 18 மாவட்டங்களில் பயிர் செய்யப்படுகிறது. பருத்தி, கத்தரி, நெல் என 35 வகை பயிர்களை பயிரிடுகின்றனர். பயிரிட்டுள்ள பரப்பில் 10 சதவீத பரப்பில் பூச்சிகளை கட்டுப்படுத்தியுள்ளனர். எனவே, மாற்று வழி இல்லை என்பதல்ல.

பி.டி. தொழில்நுட்பம் முழுமையான சோதனைக்கு உட்பட்டதல்ல. வெறும் 90 நாட்கள்தான் சோதனை செய்துள்ளனர். எனவே, இது மரபணு மாற்றமல்ல; மரபணு திணிப்பு தொழில்நுட்பம். இதன் பாதுகாப்பு தன்மை பற்றி யாருக்குமே தெரியாது. வெளிநாடுகளில் நடத்தப்பட்ட சோதனையில் இதனால் மலட்டுத்தன்மை அதிகரிப்பதாகவும், நோய் எதிர்ப்பு சக்தி குறைவதாகவும் கண்டுபிடித்துள்ளனர். விலங்குகளுக்கு நடத்தப்பட்ட ஆய்வில் உள்ளுறுப்புகளில் பாதிப்பு ஏற்படுவதையும் கண்டுபிடித்துள்ளனர். மனிதர்களுக்கு என்ன பாதிப்பு வருமோ?

இந்தியாவில் எந்த மூலையிலும் விவசாயிகள் இதை கேட்கவில்லை. கத்தரிக்காயை விட கரும்பு, தென்னை போன்ற பயிர்கள்தான் அதிக நோய்த்தாக்குதலுக்கு உள்ளாகின்றன. அதற்கு மாற்று வழி காணலாம். பருத்தி, கத்தரிக்காய் ஏற்கனவே அதிகமாக விளையக்கூடிய பொருள். அதிக விளைச்சல் தராத பயிர்களுக்கு மாற்று பயிர் கண்டுபிடித்தால் ஏற்கலாம்.

பி.டி. ரகம் என்பதால் பருத்தி அதிக விளைச்சலை தரவில்லை. ஒட்டு ரகத்திற்கே உரிய பலன்தான் அது. எல்லா விவசாயிகளும் பி.டி.பருத்திக்கு மாறியதற்கு காரணம், சாதாரண விதைகள் கிடைப்பதில்லை என்பதுதான். பி.டி. ரகத்தினால் பயிர்களுக்கு புதுவித நோய்கள் உருவாகின்றன.
மக்கள் கருத்து கேட்பு கூட்டம் இந்தியாவில் 7 இடங்களில்தான் நடத்தப்படுகின்றன. இதுவரை, கொல்கத்தா, புவனேஸ்வர், அகமதாபாத் ஆகிய இடங்களில் நடந்த கூட்டங்களில் எதிர்ப்புதான் அதிகம். மேற்கு வங்கம், ஒரிசா, பீகார், மத்திய பிரதேசம், கேரளா, கர்நாடகா, சட்டீஸ்கர் போன்ற மாநிலங்களில் பி.டி.கத்தரிக்காய்க்கு தடை விதித்துள்ளனர். இதில், மேற்கு வங்கம், பீகார், ஒரிசாவில்தான் 75 சதவீத கத்தரிக்காய் விளைகிறது. இவ்வாறு அரச்சலூர் செல்வம் தெரிவித்தார்.

குறிச்சொற்கள்: ,

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..

Post a Comment