இந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....

பாசன விவசாயிகள் அச்சம்


"பாம்பாற்றின் குறுக்கே கேரள அரசு அணை கட்டினால், அமராவதி பகுதி பாலைவனமாக மாறி விடும்' என, உடுமலை பாசன விவசாயிகள் கூட்டத்தில் அச்சம் தெரிவித்தனர்.

உடுமலை அருகே உள்ள அமராவதி அணைக்கு பெருமளவு நீர்வரத்துள்ள பாம்பாற்றின் குறுக்கே 230 கோடி ரூபாய் செலவில் கேரள அரசு அணை கட்ட திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து விவாதிக்க, அமராவதி பாசன விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு கூட்டம் நடந்தது. அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை கரும்பு விவசாயிகள் சங்க தலைவர் வேலுசாமி தலைமை வகித்தார். பொது செயலாளர் சண்முகவேலு எம்.எல்.ஏ., முன்னிலை வகித்தார். உடுமலை, தாராபுரம், சின்ன தாராபுரம், கரூர் பகுதி, பழைய, புதிய ஆயக்கட்டு விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
கல்லாபுரம் ராமகுளம் வாய்க்கால் பாசன விவசாயிகள் சங்க தலைவர் மாரியப்பன் பேசியதாவது: அமராவதி அணைக்கு 60 சதவீதம் வரை நீர் வரத்து பாம்பாற்றின் மூலமே கிடைக்கிறது. அமராவதி அணையின் உப நதிகளாக உள்ள எட்டு ஆறுகளின் குறுக்கே அணை கட்டியதால், கரூர் வரை உள்ள பாசனம் மற்றும் குடிநீர் ஆதாரத்திற்கு அணையையே நம்பியிருக்க வேண்டியுள்ளது.
காவிரியின் துணை நதியாக உள்ளதால், நடுவர் மன்ற தீர்ப்பில் அமராவதியில் இருந்து மூன்று டி.எம்.சி., தண்ணீர் கொடுக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது. இதுகுறித்த வழக்கு, உச்சநீதிமன்றத்தில் உள்ள நிலையில், மூன்று டி.எம்.சி., நீர் தந்தால் அமராவதி பகுதிகள் கடுமையாக பாதிக்கும் என விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய நிலையிலும், தமிழக அரசு காவிரி நடுவர் மன்றத்தில் அமராவதி அணை குறித்து அப்பீல் செய்யவில்லை.
அமராவதி பழைய ஆயக்கட்டு பாசனத்திற்கு 16.5 டி.எம்.சி.,; புதிய ஆயக்கட்டு கட்டு பாசனத்திற்கு 4.97 டி.எம்.சி., மற்றும் குடிநீர், தொழிற்சாலை தேவைக்கு மொத்தம் 18.636 டி.எம்.சி., தண்ணீர் தேவை உள்ளது என தமிழக அரசு தொழில்நுட்ப ஆலோசகரே தெரிவித்துள்ளார். ஐந்தாண்டு சராசரியாக ஆண்டுக்கு எட்டு டி.எம்.சி., தண்ணீர் மட்டுமே அணைக்கு வந்துள்ளது.
பாம்பாற்றின் குறுக்கே கேரளா அரசு அணை கட்டுவதோடு, குளிர்பான நிறுவனங்களுக்கு தண்ணீர் பயன்படுத்தும் உரிமையை வழங்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இதனால், அமராவதி பாலைவனமாகி; செம்மறி ஆடு, கருவேலம் முள்பட்டியே அமராவதி விவசாயிகளின் வாழ்க்கையாக மாறி விடும் அபாயம் உள்ளது, என்றார்.
அமராவதி கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் ஈஸ்வரன் பேசுகையில், ""அமராவதி விவசாயிகள் அமைதியாக இருக்காமல் அரசின் கவனத்திற்கு இப்பிரச்னையை எடுத்துச் செல்லும் வகையில் போராட்டங்கள் நடத்த வேண்டும்,'' என்றார்.
புதிய ஆயக்கட்டு பாசன விவசாயிகள் சங்க தலைவர் பார்த்தசாரதி, ""விவசாயிகள் சார்பில், மாவட்ட அமைச்சர் மற்றும் முதல்வரிடம் நேரடியாக மனு அளிக்க வேண்டும். அதற்கு பின்னரும் நடவடிக்கை இல்லை என்றால், மத்திய, மாநில அரசுகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் போராட்டம் நடத்த வேண்டும்,'' என்றார்.
விவசாய சங்க பிரதிநிதிகளின் கருத்துக்களின் அடிப்படையில், "கலெக்டர் மற்றும் மாவட்ட அமைச்சர், தமிழக முதல்வர் ஆகியோரிடம் நேரில் மனு அளிப்பது எனவும், தொடர்ந்து அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் வழக்கமான போராட்ட வடிவில் இல்லாமல், மூன்று மையங்களில் மறியல் போராட்டம் மற்றும் தொடர் போராட்டங்கள் நடத்துவது' எனவும் முடிவு செய்யப்பட்டது. இதன்பின், கலெக்டர் சமயமூர்த்தியிடம் விவசாயிகள் மனு அளித்தனர்.

குறிச்சொற்கள்: ,

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..

Post a Comment