இந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....

கால்நடை வளர்க்க சந்தேகமா '1551'க்கு 'டயல்' செய்யுங்க

""கால்நடைகளை நாம் வளர்த்தால், கால்நடைகள் நம்மை வளர்க்கும் என்பதை எடுத்துச் சொல்வதற்காகவே, கால்நடை வளர்ப்பு பயிற்சி முகாம்கள் நடத்தப்படுகின்றன,'' என்று திருப்பூர் கால்நடை மருத்துவ பல்கலை பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத் தலைவர் செல்வராஜ் தெரிவித்தார்.

அவர் கூறியதாவது: கால்நடை வளர்ப்பை ஊக்கப்படுத்துவதற்காக, திருப்பூர் கால்நடை மருத்துவ பல்கலை மற்றும் ஆராய்ச்சி மையம் சார்பில், கறவை மாடுகள், காடை, ஆடு, கோழி வளர்ப்பு பற்றி பயிற்சி அளிக்கப்படுகிறது. கடந்த 27, 28ம் தேதிகளில் கறவை மாடு, ஜப்பானிய காடை வளர்ப்பு பற்றி பயிற்சி அளிக்கப்பட்டது. இம்முகாம்களில், கோவை, திருப்பூர், பல்லடம், தாராபுரம் பகுதி விவசாயிகள், தொழில் ஆர்வலர்கள் பங்கேற்றனர். அடுத்த மாதம் ஆடு, நாட்டுக்கோழி வளர்ப்பு பற்றி பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
விவசாயிகள் மட்டுமின்றி தொழில் ஆர்வலர்கள் மற்றும் படித்த பட்டதாரிகளும் கால்நடை வளர்ப்பு பயிற்சிக்கு வருகின்றனர். முதலில் பால், இறைச்சி, முட்டை போன்ற கால்நடை உற்பத்தி பொருட்களுக்கான விற்பனை வாய்ப்பை ஆராயவும், அதிகப்படுத்துவது பற்றியும் அறிவுறுத்தப்படுகிறது. பின், கால்நடை வளர்ப்புக்கு இடம் தேர்வு செய்வது; கால்நடைகளை பராமரிப்பது; தடுப்பு ஊசிகள் போட வேண்டியதன் அவசியம்; தீவனம் வழங்கும் முறை தொடர்பான ஆலோசனை வழங்கப்படுகிறது. ஆலோசனை பெற 1551 என்ற இலவச தொலைபேசியிலும் தொடர்பு கொள்ளலாம்.
திருப்பூர் சுற்றுப்பகுதியில் கறவை மாடுகள், ஆடுகள் மற்றும் கோழி வளர்ப்பு அதிகம் உள்ளது. இவற்றை வளர்ப்பவர்களின் சந்தேகங்களுக்கு முறைப்படி விளக்கமும், ஆலோசனைகளும் வழங்கப்படுகிறது. கால்நடைகளை நாம் வளர்த்தால், கால்நடைகள் நம்மை வளர்க்கும் என்பதை எடுத்துச் சொல்வதற்காக, இத்தகைய பயிற்சி முகாம்கள் தொடர்ந்து நடத்தப்படுகின்றன.
பல்லடம், குண்டடம் உள்ளிட்ட பகுதிகளில் காடை வளர்ப்பு அதிகம் உள்ளது. 500க்கும் மேற்பட்ட பண்ணைகளில் காடைகள் வளர்க்கப்படுகின்றன. நம் நாட்டில் ஜப்பானிய காடை இனத்தை மட்டுமே அதிக அளவில் வளர்க்கலாம். ஆழ்கூள முறை, கூண்டு முறையில் காடைகள் வளர்க்கப்படுகின்றன.
விற்பனை பருவத்தில் ஆண் காடை 190 கிராம் வரையும், பெண் காடை 210 கிராம் வரையும் எடை இருக்க வேண்டும். 500 பெண் காடைகளை கொண்டு, வாரத்திற்கு 1,500 காடை குஞ்சுகளை உற்பத்தி செய்ய முடியும். மிகவும் சுவையாக இருப்பதால், ஓட்டல்களில் காடை இறைச்சிக்கு அதிக வரவேற்பு உள்ளது. அதிக புரதமும், குறைந்த கொழுப்பும் இருப்பதால், குழந்தைகள், முதியவர்களுக்கு ஏற்ற அசைவ உணவாக கருதப்படுகிறது. இவ்வாறு, செல்வராஜ் கூறினார்.

குறிச்சொற்கள்: ,

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..

Post a Comment