காய்கறி விளைச்சலை அதிகரிக்க 'பசுமை குடில்' விவசாயம் தீவிரம்
7:23 AM காய்கறி விளைச்சலை அதிகரிக்க 'பசுமை குடில்' விவசாயம் தீவிரம், செய்திகள் 0 கருத்துரைகள் Admin
திறந்தவெளியில் விளையும் காய்கறிகளை விட, மூன்று மடங்கு மகசூல் அதிகரிக்கும், "பசுமை குடில்' விவசாயம் தற்போது மலைப்பகுதியில் தீவிரமடைந்து வருகிறது. கொடைக்கானலில் நிலவும் குளிர்ந்த சூழ்நிலைக்கேற்ப கேரட், உருளை, பூண்டு, பீன்ஸ், பட்டாணி விவசாயம் மேற்கொள்ளப்படுகிறது. தொடர்மழை, தட்பவெப்ப மாற்றத்தால் ஒவ்வொரு ஆண்டும் விவசாயிகள் நஷ்டத்தை சந்தித்து வந்தனர். தற்போது காய்கறி விளைச்சலை அதிகரிக்க, "பசுமை குடில்' அமைத்து, சாகுபடியில் மூன்று மடங்கு மகசூல் எடுப்பது பற்றிய விழிப்புணர்வு, ஆலோசனையை விவசாயிகளுக்கு தோட்டக்கலைத் துறையினர் வழங்கி வருகின்றனர். தற்போது கவுஞ்சியில் 3,000, கே.சி.பட்டியில் 2,000 சதுர அடியில் "பசுமை குடில்' அமைத்து காய்கறி செடிகள் நடவு செய்யப்பட்டுள்ளன.
தோட்டக்கலைத் துறை உதவி இயக்குனர் கிஷோர் கூறியதாவது: குறைந்த இடத்தில் அதிக மகசூல் பெறுவதே இதன் முக்கிய நோக்கம். 1,000 சதுரடியில் பசுமை குடில் அமைத்து, மலைப்பகுதியில் விளையும் அனைத்து வகையான காய்கறிகளையும் (உருளை தவிர்த்து) பயிரிட்டு, நான்கு மாதத்திலேயே மூன்று மடங்கு மகசூல் பெற முடியும். குடிலின் உட்பகுதியில் பராமரிப்பு, ஈரப்பதம் சரியான அளவில் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். எல்லா மாதங்களிலும் பருவ நிலை பற்றி கவலைப்படாமல் மகசூல் எடுத்துக்கொண்டே இருக்கலாம். குடில் அமைப்பதற்கு ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மானியமாக வழங்கப்படுகிறது. இவ்வாறு கிஷோர் கூறினார்.

குறிச்சொற்கள்: காய்கறி விளைச்சலை அதிகரிக்க 'பசுமை குடில்' விவசாயம் தீவிரம், செய்திகள்
பகிர்தல் மிக எளிமையானது,அழகானது