துவங்கியது மக்காச்சோளம் அறுவடை!
5:23 PM செய்திகள், துவங்கியது மக்காச்சோளம் அறுவடை 0 கருத்துரைகள் Admin
உடுமலை,ஜன.7: உடுமலை வட்டத்தில் மக்காச்சோளம் அறுவடை பணிகள் தீவிரம் அடைந்து வருகிறது. 100 கிலோ கொண்ட ஒரு மூட்டை ரூ.900 ற்கு விற்கும் நிலையில் ரூ.1000 மாக உயருமா என விவசாயிகள் எதிர்பார்த்து வருகின்றனர்.உடுமலையில் நடப்பாண்டில் சுமார் 40 முதல் 50 ஆயிரம் ஏக்கர்கள் வரை விவசாயிகள் மக்காச்சோளத்தை பயிரிட்டுள்ளனர். 120 நாட்கள் பயிரான மக்காச்சோளத்தை கடந்த செப்டம்பர் மாதம் தொடக்கத்தில் விவசாயிகள் பயிரிட்டிருந்தனர். கடந்த மாதம் பெய்த தொடர்மழையால் மக்காச்சோளத்தில் புழுக்கள் தோன்றியதாலும், ஒரு சில தோட்டங்களில் ஒரே செடியில் 5,6 கதிர்கள் முளைத்ததாலும் விவசாயிகள் எதிர்பார்த்த மகசூல் கிடைக்குமா என அச்சம் அடைந்திருந்தனர்.பொதுவாக உடுமலை, பல்லடம், திருப்பூர், பொங்கலூர் உள்ளிட்ட பகுதிகளில் அமைந்துள்ள தனியார் கோழிப்பண்ணைகளுக்கும் மற்றும் கால்நடை தீவன உபயோகத்திற்கும் ஆண்டு முழுவதும் மக்காச்சோளம் தேவை இருந்து வருகிறது. இந்நிலையில், ஜனவரி முதல் வாரத்தில் விவசாயிகள் பலத்த எதிர்பார்ப்புகளுடன் மக்காச்சோள அறுவடையை துவக்கி உள்ளனர். ஒரு ஏக்கருக்கு சராசரியாக 35 முதல் 40 மூட்டை கள் (ஒரு மூட்டைக்கு 100 கிலோ) அறுவடையாகி வரும் நிலையில் நல்ல விலை கிடைக்கும் என விவசாயிகளிடையே பலத்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. உடுமலை ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் வியாழக்கிழமை நிலவரப்படி ஒரு மூட்டை 880-910 வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு இந்த பருவத்தில் விலை ஏறுமுகமாக இருந்ததால் மக்காச்சோளத்திற்கு இந்த ஆண்டும் ஏறுமுகமாக இருக்கலாம் என்ற எதிர்பார்ப்பில் ஒரு சில விவசாயிகள் அறுவடையை தள்ளிப்போட்டு வருகின்றனர். மேலும், நூறு நாள் வேலைத் திட்டத்தில் ஒரு நாள் ஊதியம் ரூ.100 ஆக உயர்த்தப்பட்டு விட்டதால் கூலியாட்கள் பற்றாக்குறையும் நிலவி வருகிறது.இது குறித்து உடுமலை ஒழுங்கு முறை விற்பனைக் கூட கண்காணிப்பாளர் ஜி.நஞ்சப்பன் வியாழக்கிழமை கூறியது:பொதுவாக ஜனவரி, பிப்ரவரி மாதங்கள் மக்காச்சோள சீசன் ஆகும். கூலி ஆட்கள் பற்றாக்குறையாலும், விலை ஏறும் என விவசாயிகள் எதிர்பார்த்து வருவதாலும் பொங்கலுக்குப் பிறகு தீவிர அறுவடை பணிகள் நடக்கும் எதிர்பார்க்கிறோம். ஆனாலும் புதன்கிழமை ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்திற்கு 480 மூட்டை வந்துள்ளது. இந்த சீசனில் இதுவரை 2500 மூட்டைகள் இங்கு வந்துள்ளது. வியாழக்கிழமை நிலவரப்படி 100 கிலோ கொண்ட ஒரு மூட்டைக்கு ரூ.900 வரை விலை போனது. பொதுவாக கோழிப்பண்ணைகளுக்கு ஆண்டுதோறும் தேவைகள் இருப்பதால் விவசாயிகளுக்கு உறுதியாக இந்த விலை கிடைக்கும். இந்த விலை போதாது என்று நினைக்கும் விவசாயிகளுக்கு ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் இருப்பு வைத்துக் கொள்ள பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளது. ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் உள்ள 10 குடோன்களில் 4500 மூட்டைகள் வைத்துக் கொள்ள வசதி உள்ளது. விவசாயி கள் ஸ்டாக் வைக்கும் மக்காச்சோள மதிப்பில் 50 சதவிகித கடன் தொகை வெறும் 5 சதவிகித வட்டிக்கு வழங்கப்படுóம. இதில் முதல் 15 நாட்கள் இலவசமாக ஸ்டாக் வைத்துக் கொள்ளலாம். இந்த திட்டம் விவசாயிகளுக்கு பிடிக்கவில்லை என்றால் மக்காச்சோளம் இருப்பு வைத்துக் கொள்ள ஒரு குவிண்டாலுக்கு வெறும் 5 பைசா கொடுத்தால் போதும். எவ்வளவு மக்காச்சோளம் கொண்டு வந்தாலும் இருப்பு வைத்துக் கொள்ளலாம். அதற்கு இலவசமாக காப்பீடும் செய்து தரப்படும் என்றார்
குறிச்சொற்கள்: செய்திகள், துவங்கியது மக்காச்சோளம் அறுவடை
பகிர்தல் மிக எளிமையானது,அழகானது