இந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....

நவீன வேளாண் கருவி உருவாக்க வேண்டும்: சந்திராயன் திட்ட இயக்குனர்

"விவசாயத்துக்கு ஏற்பட்டுள்ள ஆள் பற்றாக்குறையை சரி செய்ய நவீன கருவிகளை உருவாக்க வேண்டும்' என, சந்திராயன் திட்ட இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை கூறினார். திருச்செங்கோடு கே.எஸ்.ஆர்., இன்ஜினியரிங் கல்லூரியில் மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறை, மின்னணு தகவல் தொடர்புத்துறை சார்பில், "மின்னியல் அறிவியலின் தற்போதைய முன்னேற்றங்கள்' என்ற தலைப்பில் இரண்டு நாள் சர்வதேச கருத்தரங்கு மாநாடு நடந்தது. நிறைவு விழாவுக்கு, கல்வி நிறுவன தாளாளர் ரங்கசாமி தலைமை வகித்தார்.

அறக்கட்டளை செயலாளர் சீனிவாசன், இணைச் செயலாளர் கவிதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். சந்திராயன் திட்ட இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை, சந்திரயான் 1 திட்டத்தின் செயல் குறித்து மாணவர்களுக்கு விளக்கினார். கருத்தரங்கில், மாணவ, மாணவியர் 195 ஆய்வுகட்டுரைகள் சமர்பித்தனர். பலநாடுகளை சேர்ந்த மின்னியல், மின்னணுவியல், மின்னணு தகவல்தொடர்பியல் துறை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட ஆராயச்சித்துறை மாணவ, மாணவியர் பங்கேற்று 195 ஆய்வு கட்டுரைகளை சமர்ப்பித்தனர். தேர்ந்தெடுக்கப்பட்ட ஆய்வு கட்டுரைகளுக்கு பரிசும், சான்றிதழும் வழங்கப்பட்டது.



தொடர்ந்து மயில்சாமி அண்ணாதுரை நிருபர்களிடம் கூறியதாவது: இந்தியாவில் அனைத்து துறைகளிலும் நல்ல வாய்ப்பும், எதிர்காலமும் உள்ளது. மாணவர்கள் ஒவ்வொருவரும் தங்களுக்குப் பிடித்த துறையைத் தேர்ந்தெடுத்து திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். பிடித்தது கிடைக்காவிட்டால் கிடைத்ததை விரும்பி ஏற்றுக்கொள்ள வேண்டும். அதில் தொடர்ந்து உழைத்தால் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் பிரகாசமாக கிடைக்கும். சந்திரனுக்கு செல்வது, மருந்துகள் கண்டுபிடிப்பது மட்டும் அறிவியல் அல்ல. இயற்கை வழங்கியதை பாதுகாத்து கொள்வதும் அறிவியல் தான். விவசாயம் ஒழுங்காக நடந்தால் தான் உலகம் செழிக்கும். விவசாயத்தை ஊக்குவித்தால் விவசாயம் பெருகும்.



இயற்கை வேளாண் குறித்த விழிப்புணர்வு மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. நவீன தொழில்நுட்ப வசதிகள் விவசாயிகளுக்கு கிடைக்க வேண்டும். விவசாயிகள் விளைவிக்கின்ற உணவுப்பொருட்கள் துளிகூட சேதாரமில்லாமல் அனைத்தும் பயன்படுத்தக் கூடியதாக இருக்கும் வகையில், தொழில்நுட்ப அறிவு பெறவேண்டும். விவசாயத்துக்கு ஏற்பட்டுள்ள ஆள் பற்றாகுறையை சரி செய்ய நவீன கருவிகளை உருவாக்க வேண்டும். வெளிநாடுகளில் பலநூறு ஏக்கர் நிலத்தை 2 பேர் விவசாயம் செய்து வருவதைபோல், இந்திய விவசாயத்திலும் மாற்றம் வர வேண்டும்.



கேரளாவில் இஸ்ரோ நடத்தும் கல்லூரியில் 300 மாணவர்களுக்கு விண்வெளி ஆய்வு குறித்து கல்வி கற்பிக்கப்படுகிறது. விமான பயணத்தைப்போல், விண்வெளிப்பயணமும் எளிதாகிவிடும். விண்வெளிக்கு மனிதர்கள் சுற்றுலா செல்வதுபோல சுற்றிபார்க்க சென்று வரலாம். இந்தியா அனைத்து துறைகளிலும் முன்னேற்றமடையும். கார்களை இறக்குமதி செய்தோம்; தற்போது ஏற்றுமதி செய்கின்றோம். அதுபோல் அனைத்துதுறைகளிலும் முன்னேற்றமடைந்து ஏற்றுமதி செய்கின்ற அளவுக்கு இந்தியா வளர்ந்துவிடும். இவ்வாறு அவர் கூறினார்.

குறிச்சொற்கள்: ,

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..

Post a Comment