இந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....

டெல்டா பாசன பகுதியாக கரூரையும் சேர்க்கணும் விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் கோரிக்கை



"கரூர் மாவட்டத்தை டெல்டா பாசன பகுதியாக அறிவிக்க அரசு ஆணை பிறப்பிக்க வேண்டும்' என்று மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது. கரூர் மாவட்ட அளவிலான விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் கரூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடந்தது. கலெக்டர் உமாமகேஸ்வரி தலைமை வகித்தார்.



"அனஞ்சனூரில் ரேஷன் கார்டுக்கு அரிசி, மண்ணெண்ணெய் உள்ளிட்ட அனைத்து பொருளும் வாங்க கிளை ரேஷன் கடை துவக்க' நங்கம் வாய்க்கால் பாசனதாரர்கள் சபை தலைவர் பரமசிவம் கோரிக்கை வைத்தார். "குளித்தலை தாலுகாவில் தொடக்க வேளாண்மை சங்கம் கீழ் செயல்படும் நங்கவரம் அங்காடியில் 936 கார்டுகள் உள்ளன. அனஞ்சனூர், கோவிந்தனூரில் 154 கார்டுகள் உள்ளன. இப்பகுதியில் பகுதி நேர ரேஷன் கடை துவங்கப்படுவது குறித்து தொடக்க வேளாண்மை சங்கத்தின் அறிக்கை கிடைத்ததும் அங்காடி துவங்கப்படும்' என்று குளித்தலை தாசில்தார் அறிவித்தார்.



மருதாண்டன் மேட்டுவாய்க்காலை வதியத்தில் இருந்து லாலாப்பேட்டை வரை எட்டு கி.மீ., தாரம் வெட்டுவது குறித்த கோரிக்கைக்கு, ஐந்து கி.மீ., தூரத்துக்கு தூர் வாரி நடவடிக்கை எடுக்க குளித்தலை ஆற்றுபாதுகாப்பு கோட்ட பொறியாளர் பதிலளித்தார்.



கரூரில் பொதுப்பணித்துறை கால்வாய் கடைமடையான கோவிந்தம்பாளையம் ரோட்டில் இருந்து முனியப்பன் கோவில் வரை தூர் வாரவும், பாதாள சாக்கடை தண்ணீரை கால்வாயில் விடுவதால் தூர்வாரப்படாமல் உள்ளதாகவும் பஞ்சமாதேவி பாசன வாய்க்கால் விவசாயிகள் சங்கம் சார்பில் குற்றச்சாட்டு வைக்கப்பட்டது.



கரூர் நகராட்சி சார்பில் பதிலளிக்கப்பட்டதாவது: இடதுகரை கால்வாய் தூர் வாரப்பட்டு கடைமடை பகுதிவரை தண்ணீர் செல்கிறது என்று அமராவதி ஆற்றுபாதுகாப்பு கோட்ட அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். கரூர் நகராட்சியில் தேசிய நதிநீர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 35 கோடி ரூபாய் மதிப்பீட்டில் காவிரி மற்றும் அமராவதி ஆறு மாசுபடுவதை தவிர்க்கும் வகையில் பாதாள சாக்கடை பணி மேற்கொள்ளப்பட்டது.



சேகரமாகும் கழிவுநீர் அரசு காலனியில் உள்ள சுத்திகரிப்பு நிலையத்தில் குடிநீர் வடிகால் வாரியத்தினால் கழிவு அகற்றப்பட்டு "பிஓடி' பரிசோதனை செய்யப்பட்டு கால்வாயில் விடப்படுகிறது. பஞ்சமாதேவி கால்வாய் தூர்வார உரிய நடவடிக்கை மேற்கொள்ள பொதுப்பணித்துறையிடம் கோரப்பட்டுள்ளது.



காவிரி ஆற்று பாசனம் பெறும் கரூர் மாவட்டத்தை டெல்டா மாவட்டத்துடன் இணைக்க நங்கம் வாய்க்கால் பாசனதாரர்கள் சபை சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆற்றுபாதுகாப்பு கோட்டம் கரூர் மற்றும் திருச்சி சார்பில் அறிவிக்கப்பட்டதாவது: காவிரி ஆற்றின் பாசன பகுதிகள் மேலணையில் இருந்து டெல்டா பாசன பகுதியாக அரசு அறிவித்துள்ளது. கரூர் மாவட்டத்தை டெல்டா பாசன பகுதியாக அறிவிக்க அரசு ஆணை பிறப்பிக்க வேண்டும்.



மேலும், காவிரி டெல்டா பாசனத்துக்கு ஆண்டுதோறும் மேட்டூர் அணையில் இருந்து ஜூன் முதல் ஜனவரி வரை தண்ணீர் வழங்கப்படுகிறது. இதர காலங்களில் பாசன வாய்க்கால்கள் அடைக்கப்படுகிறது. ஆனால், கரூர் மாவட்ட பாசன வாய்க்கால்களுக்கு ஒரு மாதம் மட்டும் அடைப்பு காலமாக கடைபிக்கப்பட்டு 11 மாதம் தண்ணீர் வழங்கப்படுகிறது.



வெள்ளம், புயல் போன்ற காலங்களில் விவசாயம் பாதிக்கப்படும் மாவட்டங்களுக்கு மட்டும் அரசு இழப்பீடு வழங்கப்படுகிறது. குளித்தலை அருகே பஞ்சப்பட்டி ஏரியை வெள்ள நீர் சேகரிக்க ஏற்பாடு செய்வது குறித்து குளித்தலை உழவர் ஆய்வுமன்ற அமைப்பாளர் கோபாலதேசிகன் கோரிக்கை வைத்தார். அரியாறு வடிவில பாசனப்பிரிவு செயற்பொறியாளர் அலுவலக தரப்பில் அறிவிக்கப்பட்டதாவது:



பஞ்சப்பட்டி ஏரி, அதற்கு மேல்புறம் உள்ள ஏரி மற்றும் குளத்தில் இருந்து பருவமழை காலத்தில் பெறப்படும் வெள்ளநீரை தேக்கி வைக்கும் வெள்ள மிதமாக்கியாகவே வடிவமைக்கப்பட்டது. காலப்போக்கில் பாசன ஏரியாக மாற்றப்பட்டது. தற்போது 165 கோடி செலவில் நடக்கும் மாயனூர் வெள்ளத்தடுப்பு அணையை தவிர்த்து, காவிரியில் மற்றொரு வெள்ளத்தடுப்பு அணை தேர்வு செய்து பஞ்சப்பட்டி ஏரிக்கு தண்ணீர் கொண்டு செல்வது தொழில்நுட்ப ரீதியாக சாத்தியம் இல்லை.



தோகமலையில் புதிய உழவர் சந்தை அமைக்க வளையப்பட்டி உழவர் ஆய்வுமன்ற அமைப்பாளர் சதீஷ் கோரினார். வேளாண் வணிகம் துணை இயக்குனர் அலுவலக தரப்பில் அறிவிக்கப்பட்டதாவது: கரூர் மாவட்டத்தில் தற்போது இரண்டு உழவர் சந்தை அமைக்க மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வெங்கமேடு மற்றும் சின்னதாராபுரத்தில் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், ஒரு உழவர் சந்தை அனுமதிக்கப்பட்டால் தோகமலை வட்டாரத்தில் துவங்க ஏற்பாடு செய்யப்படும். இவ்வாறு பல்வேறு கோரிக்கைகளுக்கு அரசு துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

குறிச்சொற்கள்: ,

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..

Post a Comment