'கத்திரிக்காய்' சண்டை-மோதும் மத்திய அமைச்சர்கள்!
8:33 AM செய்திகள் 0 கருத்துரைகள் Admin
பி.டி கத்தரி எனப்படும் மரபணு மாற்றப்பட்ட கத்தரிக்காய் விதைகளை இந்திய விவசாய துறையில் அனுமதிப்பது குறித்து மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இதற்கு விவசாயிகள் சங்கம், விஞ்ஞானிகளில் ஒரு பிரிவினர் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் உள்ளிட்டோரிடம் இருந்த கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
பி.டி கத்தரி உடல் நலனுக்கு கேடு விளைவிக்கக்கூடியது என்றும், மரபணு மாற்றப்பட்ட பருத்தி விதைகளால் ஏற்கனவே இந்தியா கசப்பான அனுபவங்களை சந்தித்துள்ள நிலையில் உணவுப்பொருளில் விஷப்பரிட்சை நடத்துவது ஆபத்து என கூறப்படுகிறது.
ஆனால், மரபணு மாற்றப்பட்ட கத்தரி பயிரிட்டால் அமோக விளைச்சல் கிடைக்கும். பூச்சி தாக்காது என்று வெளிநாட்டு நிறுவனங்களால் பிரசாரம் செய்யப்படுகிறது.
இதில் ஒருமித்த கருத்து ஏற்படாதாதால் பொது விவாதம் நடத்தி, அதன் அடிப்படையிலேயே மத்திய அரசு முடிவெடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது.
இதற்கிடையே, பி.டி கத்தரி விதைகள் அறிமுகப்படுத்துவதன் மூலம் சிலருக்கு ஆதாயம் இருப்பதாகவும், இதனால் மத்திய விவசாயத் துறை இதில் அதிக ஆர்வம் காட்டுவதாகவும் குற்றச்சாட்டு உள்ளது.
இந்நிலையில், மரபணு மாற்றப்பட்ட கத்தரிக்காயை வர்த்தக ரீதியில் பயன்படுத்துவது பற்றி நிபுணர்கள் குழு எடுக்கும் முடிவே இறுதியானது. இதில் மத்திய அரசு செய்வதற்கு ஒன்றுமில்லை என்று வேளாண் அமைச்சர் சரத்பவார் கடந்த புதன்கிழமை கூறியிருந்தார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மத்திய வேளாண் அமைச்சர் பவாருக்கு சுற்றுச்சூழல் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் எழுதியுள்ள கடிதத்தில்,
மரபணு மாற்ற உணவுப் பொருள்களுக்கு ஒப்புதல் அளிக்கும் நிபுணர் குழு சட்ட ரீதியான அமைப்பாக இருக்கலாம். ஆனால் பொது மக்களின் உடல் நலம் குறித்து கேள்வி எழுப்பப்படும்போது அதில் இறுதி முடிவு எடுக்க மத்திய அரசுக்கு முழு உரிமை உண்டு.
மரபணு மாற்றப்பட்ட கத்தரி, நமது நாட்டின் முதல் மரபணு மாற்ற உணவுப் பயிர். எனவே இது குறித்து எழுப்பப்பட்டுள்ள சந்தேகங்கள், கவலைகளை கவனத்தில் கொண்டாக வேண்டும்.
இதுதொடர்பான கருத்துகளை தெரிவிக்குமாறு மாநில முதல்வர்கள், விவசாய விஞ்ஞானிகள் மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த 50 விஞ்ஞானிகளிடமும் கேட்டுள்ளேன்.
தற்போது நடந்து வரும் பொது விவாதம் வரும் ஜனவரி இறுதிவாக்கில் முடிந்துவிடும். பின்னர் நிபுணர்களின் கருத்துக்களையும் கேட்டு பிப்ரவரி 20ம் தேதிக்குள் இறுதி முடிவுக்கு வர முடியும்.
அதன் பிறகு எனது அறிக்கையை பிரதமர் மன்மோகன் சிங்கிடம் சமர்ப்பிப்பேன். அதுபோல் உங்களிடமும் சுகாதாரத் துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத்திடமும் எனது அறிக்கையை சமர்ப்பிக்கிறேன். அதன் பிறகு இதில் இறுதி முடிவு எடுக்கலாம் கூறியுள்ளார்.
குறிச்சொற்கள்: செய்திகள்
பகிர்தல் மிக எளிமையானது,அழகானது