இந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....

அகதியானவர்கள் மீண்டும் சொந்த மண்ணில் : இலங்கை தமிழர் பகுதிகளில் விவசாய உற்பத்தி துவக்கம்





Front page news and headlines todayஉள்நாட்டுப்போரில் பாதிக்கப்பட்டு, இலங்கையில் இடம் பெயர்ந்து அகதிகளாக வாழ்ந்த குடும்பங்கள் மீண்டும் தங்கள் சொந்த பகுதிகளில் குடியேறி புதிய வாழ்க்கையைத் துவங்கியுள்ளனர்.



இலங்கை உள்நாட்டுப் போர், தமிழர்கள் அதிகம் வசிக்கும் கிழக்கு மாகாணப்பகுதிகளிலும் உக்கிரமடைந்திருந்தது. மாவிலா தண்ணீர் தொடர்பான மோதலை அடுத்து, கிழக்குப் பகுதியில் போர் உக்கிரமடைந்திருந்தது. புலிகளை ஒடுக்க, ராணுவம் கடும் தாக்குதல் நடத்தியதால், அங்கு வசித்தோர் வீடுகளை விட்டு ஓடினர். பலர் மட்டக்களப்புக்கும், பலர் கடல் வழியாக தமிழகத்துக்கும் அகதியாகச் சென்றனர். 2006ம் ஆண்டு, கிழக்கு மாகாணத்தை புலிகளிடம் இருந்து ராணுவம் மீட்டது.



உள்நாட்டுப் போர் முடிந்து, இலங்கையில் அமைதி திரும்பியுள்ள நிலையில், அகதிகளாக சென்ற பலர், சொந்த மண்ணில் புனர் வாழ்வைத் துவங்கியுள்ளனர். கொழும்பு - திரிகோணமலைச் சாலையில் கந்தளாய் நகரம் உள்ளது. கிழக்கு மாகாணத்தில் மிகப்பெரிய ஏரி இங்குள்ளது. இந்த ஏரி நீர், திரிகோணமலை மாவட்டம் மற் றும் முல்லைத்தீவு மாவட்ட எல்லையான புல்மோட்டை வரை பாய்கிறது. வண்டலும் செவ்வலும் நிறைந்த செழிப் பான படுகை பூமி. நெல், சோளம், வெங்காயம், காய்கறிகள் அதிகம் விளைந்த பகுதி. உள்நாட்டுப் போரால் உற்பத்தி முழுமையாக முடங்கியது. புலி முகாம்கள் இருந்ததால், ராணுவம் தொடர் தாக்குதல்களை நடத்தி வந்தது. அந்த பகுதியில் மக்களையும் குடியேற அனுமதிக்கவில்லை.



கடந்த ஆண்டு போர் ஓய்ந்ததால், மீண்டும் தங்கள் சொந்த பூமிக்கு வரத்துவங்கியுள்ளனர் அகதிகளாக சென்ற தமிழர்கள். வாழ்வை மறு சீரமைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போரில் தகர்ந்த வீடுகளுக்கு பதிலாக சர்வதேச தொண்டு நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் ஓடு வேய்ந்த புதிய வீடுகள் அமைக்கப்பட்டுள்ளன. அகதிகளாக சென்றவர்கள், தங்கள் சொந்த நிலங்களில், ஏற்கனவே இருந்த வீட்டு பகுதியிலே கட்டப்பட்ட வீடுகளில் குடியேறியுள்ளனர். குடியேறியுள்ளவர்கள், நிலங்களைச் சுற்றி வேலி அமைப்பதை காண முடிந்தது. மதில் சுவருக்கு பதிலாக, பனை மர மட்டைகளை குறுக்கும் நெடுக்குமாக நாட்டி வேலிகளை அமைக்கின்றனர். சில இடங்களில் தென்னை மட்டை பயன்படுத்தப்பட்டிருந்தது. வேலி இருந் தால்தான் வீட்டைச் சுற்றி தோட்டம் அமைக்க முடியும் என்று கிராமப் பெண்கள் கூறினர்.



திரிகோணமலை மாவட்டம் இலங்கைத் துறை கிராமத்தில் 157 குடும்பங்கள் மறுவாழ்க்கையைத் துவக்கியுள்ளனர். இங்கு மக்கள் வசித்த இடங்களில் காடு பின்னிவிட்டதால், அருகிலேயே தனியாக காலனி அமைக்கப் பட்டுள்ளது. அதில் தனித்தனியே வீடுகள் கட்டப்பட்டு வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இங்கு வசிக்கும் மயில்வாகனன் சுதாகர் கூறியதாவது: போரின் போது எல்லாவற்றையும் விட்டு ஓடினோம். சிலர் கடல் வழியாக தப்பினர். நாங்கள் பூநகரில் உள்ள எங்கள் உறவினர் வீட்டுக்குப் போனோம். அங்குள் போர் தீவிரம் அடைந்ததால், மட்டக் களப்பு அகதிகள் முகாமுக்கு சென்றோம். நீண்ட நாட்கள் அங்குதான் தங்கியிருந்தோம். இப்போது நிலமை சீரடைந் துள்ளது. பழைய வீடுகள் இடிந்து தரைமட்டமாகிவிட்டன. விளை நிலங்களில் மரங்கள், கொடிகள் அடர்ந்து காடாகக் கிடக்கின்றன. அவற்றை சீரமைத்துக் கொண்டிருக்கிறோம். வீடும், அதில் புழங்குவதற்கு அத்தியாவசிய பொருட்களும் கொடுத்துள்ளனர். எல்லாமே வித்தியாசமாக உள்ளது. விவசாய நிலங்களில் வளர்ந்துள்ள மரங்களை, புல்டோசரால் பிடுங்கி, நிலத்தை சமன்படுத்தி தருகின்றனர். சில இடங்களில் சாகுபடியைத் துவங்கியுள்ளோம். முதல் அறுவடை முடிந்துவிட்டால், அடுத்து தானாகவே எல்லாம் நடக்கும். அதுவரை சிரமம்தான். இவ்வாறு மயில்வாகனன் சுதாகர் கூறினார்.



இந்த கிராமத்தில் முக்கியத் தொழில் விவசாயமும் மீன்பிடிப்பும்தான். பலர் இப்போதுதான் மீன்பிடித் தொழிலுக்கு செல்ல துவங்கியுள்ளனர். பிடிபடும் மீனை நகரத்துக்கு கொண்டு செல்வதற்கான வழிமுறைகள் இன்னும் உருவாக்கப்படவில்லை. வீடுகளில் வீட்டுத்தோடம் அமைக்க, பெண்கள் தீவிரம் காட்டுகின்றனர். கப்பல் துறை என்ற பகுதியில் காடாக மாறிவிட்ட விளைநிலங்களை சீரமைத்து, கந்தளாய் ஏரியில் இருந்து தண்ணீர் பாய கால்வாய் அமைத்து மீண்டும் விவசாயம் நடக்கிறது. முதல் போக நெல் சாகுபடி இப்போது பொதிப் பருவத்தில் உள்ளது. தண்ணீர் பாய முடியாத இடங்களில் சோளமும், வெங்காயமும் சாகுபடி செய்யப்பட்டிருந்தது. மண்டியுள்ள மரங்கள் அழியாமல் ஆங்காங்கே திட்டுக்களாய் நிற்கின்றன.



இந்த பகுதியில் விவசாய பணியில் ஈடுபட்டிருந்த நவரத்தினம் கூறியதாவது: போரில் பாதிக்கப்பட்டு நாங்கள் ஊரைவிட்டு சென்று விட்டோம். அமைதி திரும்பியுள்ள நிலையில் மீண்டும், எங்கள் ஊருக்கு வந்துள் ளோம். இப்போது புதிதாக வாழ்க்கையைத் துவங்க வேண் டியுள்ளது. பராமரிப்பும், ஆள்நடமாட்டமும் இன்றி பல ஆண்டுகளாக கிடந்த நிலம், ஓரளவு செம்மைப்படுத்தப்பட்டு எங்களிடம் ஒப்படைக்கப் பட்டுள்ளது. சிங்களவர்களுக்கும், இஸ்லாமியர்களுக்கும் கூட இங்கு நிலம் உள்ளது. அவையும் சீரமைக் கப்பட்டு, உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அவர்களும் புனரமைக்கப் பட்ட முதல் சாகுபடியை துவங்கியுள்ளனர். இங்கு உழைக்கும் போதுதான், நான் இருப்பதையே உணர்கிறேன். இந்த அமைதி நீடிக்க வேண் டும் என்பதுதான் எங்கள் பிரார்த்தனை. இவ்வாறு நவரத்தினம் கூறினார்.



இந்த பகுதியில் கப்பல் துறை, சேரன்நுவா, பூநகரி, ஈச்சலம்பற்றை, பூமரத்தடிசேனை, விநாயகபுரம், தர்காமுனை போன்ற கிராமங்களில் முழுமையாக நெல் விவசாயம் துவங்கியுள்ளது. கந்தளாய் ஏரித் தண்ணீருடன், மாபலி கங்கை தண்ணீரும் பாய்கிறது. முறையான பாசன வசதியின்மையால் தண்ணீர் கடலில் வீணாகிறது. காடுகள் அடர்ந்து எங்கும் பசுமை படர்ந்துள்ளது. மறு குடியேற்றப் பகுதியிலும் ராணுவ முகாம்கள் அமைத்து புதியவர்களைக் கண்காணிக்கின்றனர். கடலோரப் பகுதி முழுவதும் கடற்படைக் கட்டுப்பாட்டில் உள் ளது. கடற்படை சோதனைச் சாவடிகள் அமைத்துள்ளனர். இலங்கைத்துறை கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் மறுபடியும் குடியேறியுள்ளனர். இலங்கையில் முறையான ரேஷன் வினியோகம் இல்லை. ஆனால், ரேஷன் கார்டுகள் உள்ளன. அதற்கு சமுர்த்தி கார்டு என்று பெயர். அவ்வப்போது, ரேஷன் வினியோகம் செய்வதாக இலங்கைத்துறை சுகன்யா கூறினார். அன்று ரேஷன் பொருட் கள் வினியோகிப்பதாக தகவல் கிடைத்ததால், பக்கத்து கிராமத்துக்கு ரேஷன் கார்டுடன் சென்று கொண்டிருந்தார். இந்த கிராமத்தை அடுத்த வாழைத்தோட்டத்தில் 184 குடும்பங்கள் மறுபடியும் குடியேறி வாழ்க்கையைத் துவங்கியுள்ளனர்.



இங்கு வசிக்கும் புஷ்பமலர் கூறியதாவது: போரின் போது, உயிர் பிழைத்தால் போதும் என்று குழந்தைகளுடன் ஓடினோம். எந்தப் பக்கம் குண்டு வந்து விழும் என்று தெரியாது. உயிர் தப்பி, மட்டக்களப்பு முகாமுக்கு சென்று விட்டோம். அப்போது, வீட்டில் 120 மூட்டை நெல் இருந்தது. அமைதி திரும்பியதால் திரும்பி வந்துள்ளோம். வீட் டில் இருந்த பொருட்கள் எதுவும் இல்லை. ஊரில் யாரும் இல்லாததால், காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்துள்ளன. அவை வீடுகளில் புகுந்து நெல்லை தின்று துவம்சம் செய்துள்ளன. வீட்டைச் சுற்றி நின்ற தென் னை மரங்களை முறித்து நாசம் செய்துள்ளன. குண்டுகள் விழுந்து வீட் டின் பெரும் பகுதி சிதைந்து கிடந்தது. வீட்டருகே சிறிய ரைஸ்மில் ஒன்றை உருவாக்கியிருந் தோம். அது அப்படியே இருக் கிறது. இப்போது முடிந்த அளவு செம்மைப்படுத்தி குடியேறியுள்ளோம். யானைகள் அழித்த இடங்களில் தென்னங் கன்றுகளை நட்டு வளர்க்கிறோம். எங்கள் வீடு முழுவதும் அழியாததால், புதிய வீடு கட்டித்தரவில்லை. இப்படியே விட்டால் போதும், முன்னேறி விடுவோம். இவ்வாறு புஷ்பமலர் கூறினார்.



கடற்கரையை ஒட்டியுள்ள 15 கிராமங்களில் பள்ளிக்கூடமும், மருத்துவமனையும் தரமானக் கட்டடத்தில் அமைக் கப்பட்டுள்ளன. தகர்ந்து போன அரசு கட்டடங்களும் புதிதாக கட்டப்பட்டு, இயங்கத்துவங்கியுள்ளன. இங்கு போக்குவரத்து வசதி இல்லை. இந்த கிராமங்களின் அருகே முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் மூதூர் துறைமுக நகரம் உள்ளது. அத்தியாவசியப் பொருட்களை வாங்க, இங்கிருந்து கப்பலில் திரிகோணமலை சென்று வருகின்றனர்.



டிராக்டர்கள் பற்றாக்குறை: சொந்த கிராமங்களில் மறுபடியும் குடியேறியவர்களில் தமிழகத்தில் அகதிகளாக வசித்த குடும்பத்தினரும் அடங்குவர். போரின் போது, உயிர் தப்பி தமிழகத்துக்கு அகதியாக வந்த பலர் தங்கள் சொந்த இடங்களுக்கு செல்லத் துவங்கியுள்ளனர். புதுக்கோட்டை, திருச்சி மாவட்டங்களில் அகதிகளாக தங்கியிருந்த 30க்கும் மேற்பட்ட குடும்பத்தினர், இலங்கை துறை பகுதியில் மீண்டும் குடியேறியுள்ளனர். மறு குடியேற்றப்பகுதியில் நிலங்களை சீர்திருத்தும் பணி நடப்பதால், டிராக்டர்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.



புலிகளின் வானொலி கோபுரத்தில் ராணுவ பாதுகாப்புடன் புத்தர் சிலை: புலிகளின் வானொலி கோபுரத்தில் புத்தர் சிலையை நிறுவி இலங்கை ராணுவம் காவல் புரிகிறது. திரிகோணமலை - மட்டக்களப்பு இடையே கடற்கரையில் இலங்கைத் துறை என்ற கிராமம் உள்ளது. சிறிய குன்றைச் சுற்றி அழகான சூழ்நிலையில் கிராமம் அமைந் துள்ளது. இங்குள்ள குன்று வரலாற்று பழமை வாய்ந்ததாகக் கூறப்படுகிறது. குன்றின் அடியில் சிவன் கோவில் உள்ளது. குன்றின் ஒரு பகுதியில் புத்த பகோடா இருந்ததற் கான அடையாளம் உள்ளது. கல்வெட்டுகளும் உள்ளன. கடற்கரையில் ரம்மியமாக அமைந்துள்ள இந்த குன்றில், புலிகள் தங்கள் வானொலி கோபுரத்தை அமைத்திருந்தனர். அந்த கோபுரம் இப்போதும் உள்ளது. கோபுரத்தின் உச்சியில் புத்தர் அமர்ந்திருக்கிறார். குன்றைச் சுற்றி போரில் சிதைந்து போன வாகனங்கள் கிடக்கின்றன. இப்போது குன்று, புத்த மதகுருவின் கட்டுப்பாட்டில் உள்ளது. சுற்றிலும் ராணுவம் நிறுத்தப்பட்டுள்ளது.



- தினமலர்

குறிச்சொற்கள்: ,

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..

Post a Comment