கிருஷ்ணகிரிமாவட்டத்தில் பூத்து குலுங்கும் மா மரங்கள் : அதிக உற்பத்திக்கு விவசாயிகள் எதிர்பார்ப்பு
6:43 AM கிருஷ்ணகிரிமாவட்டத்தில் பூத்து குலுங்கும் மா மரங்கள், செய்திகள் 0 கருத்துரைகள் Admin
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 40 ஆயிரம் ஹெக்டேருக்கு மேல் மா சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இங்கு நிலவும் சீதோஷ்ணநிலை வெப்ப மண்டல பழங்கள் சாகுபடி செய்ய சாதகமாக உள்ளன. இதில், மா சாகுபடி முக்கிய பங்கு வகிக்கிறது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அல்போன்ஸா, தோதாபுரி பங்கனப்பள்ளி, நீலம், செந்தூரா, மல்கோவா, பீத்தர் ஆகிய ரகங்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இதில், தோத்தாபுரி ரகம் 60 சதமும், செந்தூரா மற்றும் நீலம் ரகங்கள் 30 சதம், அல்போன்ஸா ஐந்து சதம் சாகுபடி செய்யப்படுகிறது. பீத்தர், மல்கோவா, ருமானி, பங்கனப்பள்ளி, காலப்பாடு உள்ளிட்ட ரகங்கள் ஐந்து சதம் சாகுபடி செய்யப்படுகிறது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தற்போது முன்பருவ ரகங்களான செந்தூரா, பீத்தர், பையூர்-1, நீலம் ஆகியவற்றில் பூ பூத்து பிஞ்சுகள் விட ஆரம்பித்துள்ளது. இதே வேளையில் மத்திய பருவ ரகங்களான பெங்களூரா, பங்கனப்பள்ளி, அல்போன்சா, சேலம் பெங்களூரா, ஜஹாங்கீர், இமாம்பசந்த், குதாதாத் போன்ற ரகங்களில் பூக்கள் பூக்க ஆரம்பித்துள்ளது. பின் பருவ ரகங்களான நீலம், மல்கோவா போன்றவற்றில் இலைகளில் துளிர் விட்டு பூக்கள் பூக்க தயார் நிலையில் உள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிருஷ்ணகிரி, சந்தூர், ஜெகதேவி, பர்கூர், தொகரப்பள்ளி, வேலம்பட்டி, நாகரசம்பட்டி, கரடியூர், பாலிநாயனப்பள்ளி, மத்தூர், ஊத்தங்கரை, ஆலப்பட்டி, ராயக்கோட்டை, வேப்பனப்பள்ளி ஆகிய பகுதிகளில் மத்திய பருவ ரகங்களில் அதிக அளவு பூ பூத்துள்ளது.
வழக்கமாக டிசம்பர் முதல் மார்ச் மாதம் வரை மாவில் சாம்பல் நோய் தாக்குதல் இருக்கும். தற்போது, பூத்துள்ள பூக்களில் சாம்பல் நோய் தாக்குதல் அதிகம் இல்லாத நிலையில் விவசாயிகள் மற்றும் மா குத்தகை வியாபாரிகள் மா பூக்களுக்கு சாம்பல் நோய் வருவதை தடுக்க முன்கூட்டியே மருந்துகளை தெளித்து வருகின்றனர். பூக்கள் அதிகம் பூத்திருப்பதால், அதிக உற்பத்தி கிடைக்கும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
இது குறித்து ஆலப்பட்டியை சேர்ந்த மா விவசாயி முருகன்(40) கூறியதாவது: ஆலப்பட்டி பகுதியில் கடந்த இரு ஆண்டுடாக மாவில் பூக்கள் பூத்து பிஞ்சுகள் விடும் பருவத்தில் சாம்பல் நோய் தாக்குதல் அதிகரித்திருந்தது. ஆனால், இந்தாண்டு மா பூக்கள் பூப்பது ஒரு வாரம் கால தாமதம் ஆனாலும் மத்திய பருவ ரகங்களில் அதிகம் பூக்கள் பூத்துள்ளது. முன்பருவ ரகங்களில் பூக்கம் பூத்து பிஞ்சுகள் விட ஆரம்பித்துள்ளது.
அதிக அளவில் பூத்துள்ள மத்திய பருவரகங்களில் சாம்பல் நோய் தாக்குதல் இருக்கும் என்பதால் விவசாயிகள் ஒருங்கிணைந்து தங்கள் தோப்பில் உள்ள மா செடிகளுக்கு மருந்துகளை தெளித்து வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மா தோப்புகளுக்கு அருகில் அதிக அளவில் செங்கல் சூளைகள் அமைத்திருப்பதால் அதில் இருந்து வெளிப்படும் அதிக வெப்பத்திறனாலும் பூக்கள் கருக வாய்ப்புள்ளது.
எங்கள் பகுதியில் மா தோட்டங்களுக்கு அருகில் செங்கல் சூளைகள் உள்ளதை மா அறுவடை வரை மூட கோரியுள்ளோம். செங்கல் சூளை உரிமையாளர்களும் இதற்கு சம்மதம் தெரிவித்துள்ளனர். மாவட்டத்தில் தற்போது நிலவும் சீதோஷ்ண நிலை மா சாகுபடிக்கு உகந்தமாக உள்ளது. அதனால், கடந்த ஆண்டை காட்டிலும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இந்த ஆண்டு மா சாகுபடி அதிகரிக்கும் என்று நம்பியுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
குறிச்சொற்கள்: கிருஷ்ணகிரிமாவட்டத்தில் பூத்து குலுங்கும் மா மரங்கள், செய்திகள்
பகிர்தல் மிக எளிமையானது,அழகானது