இந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....

பால், முட்டை, இறைச்சி தரத்தை அதிகரிக்க ஆடு, கோழிகளுக்கு அசோலா வழங்க யோசனை

நாகை மாவட்டத்தில் பால், முட்டை, இறைச்சி ஆகியவற்றின் தரம் மற்றும் மதிப்பை கூட்ட ஆடுகள், கோழி மற்றும் மீன்களுக்கு "அசோலா'வை உணவாக வழங்கலாம் என்று சிக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தலைவர் கவுமதன் தெரிவித்துள்ளார்.இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:"அசோலா' பெரணி வகையைச் சார்ந்த நீரில் மிதக்கும் தாவரமாகும். இது மிகவும் வேகமாக வளரக்கூடிய அனாபீனா அசோலே எனப்படும் நீலப்பச்சை பாசி வகையை சேர்ந்தது. இந்த பாசி காற்றிலுள்ள தழைச்சத்தை ஈர்த்து நிலத்தில் சேர்த்து வளம் கொடுக்க வல்லது.இதனால் அசோலா ஒரு சிறந்த உயிர் உரமாக தழை உரம் போல் வயல்களில் பயன்படுத்தப்படுகிறது.அசோலா 35 முதல் 38 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையில் வளரக்கூடியது. ஒரு ஆண்டில் 1 ச.மீ பரப்பில் சுமார் 400 கிலோ வளரும். அசோலாவில் 25 முதல் 35 சதம் (உலர் எடையில்) புரதச்சத்து உள்ளது. மேலும் உடல் வளர்ச்சிக்கேற்ற அமினோ அமிலங்கள் மற்றும் வைட்டமின்கள் அதிகமுள்ளது.இத்தகைய சத்துக்கள் நிறைந்த அசோலாவை கால்நடைகள், கோழிகள், ஆடுகள் மற்றும் மீன்களுக்கு உணவாக அளிப்பதன் மூலம் முட்டை, பால், இறைச்சி ஆகியவற்றின் தரம், மதிப்பு கூடுவதாக கண்டறியப்பட்டுள்ளது. "ராங் பிங்' எனப்படும் வீரிய ஒட்டு ரகமான அசோலா சிறந்த வாய்ப்பை விவசாயிகளுக்கு அளித்துள்ளது.தினமும் கறவை பசு மற்றும் எருதுவுக்கு 1.5-2 கிலோ, முட்டைக்கோழி, கறிக்கோழிக்கு 20–30 கிராம், ஆடுகளுக்கு 300– 500 கிராம், வெண்பன்றிக்கு 1.5 – 2 கிலோ, முயலுக்கு 100 கிராம் என்ற அளவில் அசோலாவை உணவாக கொடுக்கலாம். கால்நடைகள், கோழிகள், ஆடுகள் போன்றவற்றின் எண்ணிக்கைக்கு ஏற்ப அசோலாவை பண்ணையிலேயே பாத்திகளில் உற்பத்தி செய்து கொள்ளலாம்.உற்பத்தி முறை: நிலத்தில் சுமார் ஒரு அடி ஆழத்திற்கு மண்ணை எடுத்து கரைகளாக்கி பாத்தி அமைக்கலாம். பாத்திகளின் அகலம் 2 அடி மற்றும் நீளம் தேவைக்கேற்ப அமைத்துக்கொள்ளலாம். ஒரு சதுர மீட்டர் பரப்பிற்கு ஒரு கிலோ அசோலாவை விதை அசோலாவாக விடுவிக்கலாம். இந்த பாத்திகளில் விதை அசோலாவை விடுவிக்கும் முன்பு வயல் மண்ணை சுமார் 2 செ.மீ உயரத்திற்கு பரப்பி சாணம் 2 கிலோ அல்லது மண்புழு உரம் மற்றும் 1 ச.மீ பரப்பிற்கு சுமார் 50 கிராம் அளவிற்கு சூப்பர் பாஸ்பேட் உரம் இடவேண்டும். அசோலா நன்கு வளர்வதற்கு 10 நாட்களுக்கு ஒரு முறை சாண கரைசலை பாத்திகளில் தெளிக்கலாம்.அசோலா விதைத்த 10–15 நாட்களில் பெருக்கம் அடைந்து பாத்தி முழுவதும் படர்ந்து இருக்கும். அசோலாவை அறுவடை செய்து நன்னீரில் கழுவிய பிறகு கால்நடைகளுக்கு உணவாக அளிக்கலாம். 15 நாட்களுக்கு பிறகு 2 முதல் 3 நாட்களுக்கு ஒருமுறை அசோலாவை அறுவடை செய்யலாம். அசோலா நன்கு வளர்வதற்கு நீரைப்பாத்திகளில் எப்பொழுதும் உள்ளவாறு கவனிக்க வேண்டும். ஒவ்வொரு முறையும் அசோலாவை பாத்தியிலிருந்து சேகரிக்கும் போது 3ல் 1 பங்கு அசோலாவை பாத்தியிலேயே விட்டு விடவேண்டும்.விவசாயிகளுக்கும் வேளாண் தொழிலில் சார்பு தொழிலாக கோழி, வாத்து, வான்கோழி வளர்ப்பு சிறந்த தொழிலாகவும், குறைவில்லாத வருவாய் கிடைக்க வழிபிறக்கும்.

குறிச்சொற்கள்: , , , ,

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..

Post a Comment