இந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....

மதுரையில் தென்னை மரங்கள் அழிப்பு : விவசாயத்தில் நஷ்டம் எதிரொலி

மதுரை அருகே விரகனூர் பகுதியில், தென்னை சாகுபடியில் கடும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதால், விவசாயிகள் மரங்களை வெட்டி சாய்த்து வருகின்றனர்.

விரகனூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நூறு ஏக்கருக்கும் அதிகமாக தென்னந் தோப்புகள் உள்ளன. விரகனூர் அணைப் பாசனத்தால், இப்பகுதியில் விவசாயிகள் சில ஆண்டுகளுக்கு முன், தென்னை சாகுபடிக்கு ஆர்வம் காட்டினர். மகசூல் கிடைக்கும் பருவத்தில் தென்னை மரத்தில் சிலந்தி நோய் தாக்குதல், பாசனத்திற்கு தண்ணீர் தட்டுப்பாடு, பராமரிப்பு செலவு அதிகரிப்பு போன்ற காரணங்களால் தென்னை விவசாயிகள் நஷ்டத்திற்குள்ளாகினர்.
தோப்புகளில் வந்து தேங்காய் பெற்றுச் செல்லும் வியாபாரிகள் மிகவும் குறைவான விலையை நிர்ணயம் செய்து வருவதால், இனிமேல் இத்தொழிலில் முன்னேற்றம் காணமுடியாது, என்ற விரக்தியில், மாற்றுத் தொழிலையும் தேர்வு செய்யாமல், மரங்களை விவசாயிகள் அழிக்கத் துவங்கியுள்ளனர்.
தென்னை விவசாயி பிரான்மலை கூறியதாவது: இப்பகுதியில், 40 ஆயிரம் தேங்காய் கிடைத்த தோப்புகளில் மகசூல் குறைந்து, தற்போது 9 ஆயிரம் தேங்காய் மட்டும் கிடைக்கிறது. விவசாய, தோட்டக்கலைத்துறை உதவியுடன் பல முயற்சிகள் எடுத்தும், எதிர்பார்த்த மகசூலை பெற முடியவில்லை. நோய்தாக்குதல் தொடர்ந்து அதிகரித்தும், இப்பகுதியில் தண்ணீர் தட்டுப்பாடு உள்ளதாலும், தென்னை விவசாயத்தை கைவிடும் நிலை விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ளது, என்றார்.
தோட்ட பராமரிப்பாளர் மாயாண்டி கூறியதாவது: இளநீர் விற்பனைக்கும் பயனில்லாத வகையில், சிலந்திபூச்சி தாக்குதல் இப்பகுதியில் அதிகம். தோட்டங்களில் மொத்த வியாபாரிகளிடம், ஆயிரம் தேங்காய் விற்பனை செய்யும் போது 125 தேங்காய் கூடுதலாக கொடுக்க வேண்டும். இவை தவிர ஒரு மரத்தில் தேங்காய் பறிப்பதற்கு ஏழு ரூபாய் கூலி கொடுக்க வேண்டும். ஒரு மரத்தில் குறைந்தது 20 தேங்காய் கிடைத்தால் தான் சிறு லாபமாவது கிடைக்கும். கூலியாட்கள் கிடைப்பதும் சிரமம். அப்படியே கிடைத்தாலும், பெரிய மரங்களாக இருந்தால் அவர்கள் அதில் ஏறுவது இல்லை. இதனால் தோட்டத்தை பராமரிக்க முடியாமல், இத்தொழிலை கைவிடத் துவக்கியுள்ளனர், என்றார்.
விரகனூர் தென்னந்தோப்புகளில், நோய் தாக்குதலை கட்டுப்படுத்த விவசாயத்துறையும், தேவையான தண்ணீர் கிடைக்க பொதுப்பணித்துறையும் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே தென்னையை காப்பாற்ற முடியும். இல்லை எனில் இந்த விவசாய நிலங்கள் எல்லாம் விரைவில் "பிளாட்கள்" ஆக மாறக்கூடும்.

குறிச்சொற்கள்: ,

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..

Post a Comment