இந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....

டெல்டாவில் ரயில் சிறைபிடிப்பு : பயிர் காப்பீடு இழப்பீட்டில் மத்திய அரசின் பங்குத்தொகை வழங்க விவசாயிகள் ஆவேசம்


தஞ்சாவூர்: பயிர் காப்பீடு இழப்பீட்டுத்தொகையில் மத்திய அரசின் பங்குத்தொகையை வழங்கக்கோரி டெல்டா மாவட்டத்தில் ரயில் மறியல் மற்றும் சிறைப்பிடிப்பு நடந்தது. கடந்த 2008ம் ஆண்டு டெல்டா மாவட்டத்தில் பலத்த மழை, வெள்ளம், நிஷா புயலால் நெற்பயிர்கள், வாழை, கரும்பு போன்றவை முழுமையாக சேதமடைந்தது.
இதில், பயிர் காப்பீடு செய்திருந்த பயிர்களுக்கு இழப்பீட்டுத் தொகையை மத்திய, மாநில அரசுகள் தலா 50 சதவீதம் வழங்க வேண்டும். இதில், மாநில அரசின் பங்குத்தொகையை முழுமையாக கடந்த சில மாதங்களுக்கு முன் தமிழக அரசு வழங்கி, விவசாயிகளின் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்பட்டது. மத்திய அரசின் பங்குத்தொகை 50 சதவீதத்தை வழங்கவில்லை. இதற்கிடையில் 25 சதவீதம் மட்டும் வழங்குவதாக அறிவித்தது. இதனால், பாதிக்கப்படும் விவசாயிகள் முழுத்தொகையையும் வழங்க வேண்டுமென வலியுறுத்தி வருகின்றனர்.
இக்கோரிக்கையை வலியுறுத்தி நேற்று தஞ்சாவூர், திருவாரூர், நாகை மாவட்டங்களில் இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் இதன் சார்புடைய விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர் சங்கம் சார்பில் ரயில் மறியல் மற்றும் சிறை பிடிப்பு போராட்டம் நடந்தது. தஞ்சாவூர் ரயில்வே ஸ்டேஷனில் நாகூரில் இருந்து திருச்சி சென்ற பயணிகள் ரயிலை தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் காமராஜ், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் பக்கிரிசாமி ஆகியோர் தலைமையில் மறித்தனர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்டக்குழு உறுப்பினர் ஜீவகுமார், பழனியப்பா, நம்பிராஜன், இந்திய கம்யூனிஸ்ட் விவசாய சங்க மாவட்ட செயலாளர் பன்னீர்செல்வம், மாவட்ட தலைவர் பாலசுந்தரம் உட்பட 22 பேரை போலீஸார் கைது செய்தனர்.
* திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அடுத்த பாண்டி ரயில்வே ஸ்டேஷனில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் பக்கிரிசாமி தலைமையில் காரைக்குடியில் இருந்து திருவாரூர் சென்ற பயணிகள் ரயிலையும், திருத்துறைப்பூண்டி அடுத்த ஆலத்தம்பாடியில் திருவாரூரில் இருந்து காரைக்குடி சென்ற ரயிலை விவசாய சங்க ஒன்றிய செயலாளர் காமராஜ், அகில இந்திய விவசாயிகள் சங்க ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன் ஆகியோர் தலைமையிலும் சிறை பிடித்தனர்.
இவ்விரு இடங்களிலும் யூனியன் தலைவர் தமிழ்செல்விராஜா, இந்திய கம்யூனிஸ்ட் வக்கீல் வையாபுரி, மார்க்சிஸ்ட் காம்யூனிஸ்ட் ஒன்றிய செயலாளர் ஜோதிபாசு, நகர செயலாளர் பாண்டியன், மாவட்ட பொறுப்பாளர் தங்கராசு, அகில இந்திய இளைஞர் பெருமன்றம் மாவட்ட செயலாளர் ராஜா, தமிழக இயற்கை உழவர் இயக்க மாநில செயலாளர் ஜெயராமன், துணைத்தலைவர் ராமதாஸ் உட்பட 300க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். இவ்விரு இடங்களிலும் ரயில்களை மூன்று மணி நேரத்துக்கும் மேல் சிறைபிடித்ததால் பயணிகள் சிரமப்பட்டனர்.
* மன்னார்குடி அருகே நீடாமங்கலத்தில் நாகூரில் இருந்து திருச்சி சென்ற ரயிலை திருவாரூர் மாவட்ட முன்னாள் பஞ்சாயத்து தலைவர் செல்வராஜ் தலைமையில் மறித்தனர். நீடாமங்கலம் ரயில்வே கேட்டில் மறித்ததால் ரயில் மற்றும் பஸ்கள் ஒரு மணி நேரம் வரை நிறுத்தப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்ட நிர்வாகி நாவலன், விவசாய சங்க மாவட்ட செயலாளர் சுந்தரம் உட்பட 60 பேர் கைது செய்யப்பட்டனர்.
* திருவாரூர் ரயில்வே ஸ்டேஷனில் நாகூர் - திருச்சி பயணிகள் ரயிலை இந்திய கம்யூனிஸ்ட் விவசாய சங்க மாவட்ட செயலாளர் மாசிலாமணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் விவசாய சங்க மாவட்ட செயலாளர் பழனியப்பன் ஆகியோர் தலைமையில் மறித்தனர். காவிரி பாசன விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் கண்ணப்பன் உட்பட 300 பேர் கைது செய்யப்பட்டனர்.

குறிச்சொற்கள்: ,

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..

Post a Comment