இந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....

செம்மை நெல் சாகுபடியில் ஏக்கருக்கு 61 மூட்டை வேளாண் உதவி இயக்குனர் தகவல்

நாமக்கல் : "நடப்பு ஆண்டில் செம்மை நெல் சாகுபடி திட்டத்தில் ஒரு ஏக்கருக்கு 61 மூட்டை அறுவடை செய்து விவசாயி ஒருவர் சாதனை படைத்துள்ளார்' என, வேளாண் உதவி இயக்குனர் முரளிதரன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:பள்ளிபாளையம் வட்டாரத்தில் நடப்பு ஆண்டில் 1,800 ஹெக்டேர் பரப்பில் செம்மை நெல் சாகுபடி திட்டத்தின் கீழ் ஒற்றை நாற்று நடவு முறையை விவசாயிகள் ஆர்வத்துடன் பின்பற்றுகின்றனர்.ஒரு ஏக்கருக்கு 3 கிலோ விதை மட்டுமே பயன்படுத்தி ஒரு நாற்றினை சதுர நடவு முறையில் மார்க்கர் என்ற நடவு அடையாளமிடும் கருவி மூலம் நடவு செய்தனர்.களைகளை கோனோவீடர் என்ற கருவி மூலம் நடவு செய்த 10ம் நாள் முதல் 4 முறை 10 நாட்கள் இடைவெளியில் வயலிலேயே மிதித்துவிட்டனர். ஒருங்கிணைந்த தானிய அபிவிருத்தி திட்டத்தின் கீழ், 50 இடங்களிலும், தேசிய அபிவிருத்தி திட்டத்தின் கீழ் 100 இடங்களிலும் செயல்விளக்கத் திடல்கள் அமைக்கப்பட்டன. மார்க்கர் கருவி 150, கோனோவீடர்கள் 150 மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டன.செம்மை நெல் சாகுபடி திடல்களில் உற்பத்தி தூர்கள் 60 முதல் 100 வரை இருந்தன. கதிர்களில் மணிகள் சராசரியாக 150 முதல் 250 மணிகள் இருந்தன. பூச்சி நோய் தாக்குதல் இதர வயல்களைவிட செம்மைநெல் சாகபடியில் மிகக்குறைவாகவே இருந்தது. நெல் அறுவடை துவங்கியுள்ள நிலையில், தெற்குபாளையம் தொலைபேசி ஆலோசனைக்குழு உறுப்பினரும், கிராம விவசாயியுமான நடனசபாபதி, தனது செம்மை நெல் சாகுபடி வயலில் ஒரு ஏக்கரில் 61 மூட்டை பெற்று சாதனை படைத்துள்ளார்.விவசாயி நடனசபாபதி கூறுகையில், "கடந்த ஆண்டு 25 சென்டில் மட்டுமே செம்மை நெல் சாகுபடி செய்தேன். நல்ல மகசூல் கிடைத்ததால், இந்த ஆண்டு ஒரு ஏக்கரில் ஒற்றை நாற்று நடவு முறையை பின்பற்றினேன். வேளாண் அதிகாரிகளின் ஆலோசனை கேட்டு மார்க்கர் நடவு அடையாளம் இடும் கருவியை வைத்து சதுர நடவு முறையில் நட்டேன். அதிக தூர் பிடித்தது. பூச்சி நோயும் குறைவாகவே இருந்தது.அரசின் திட்டங்களில் செம்மை நெல் சாகுபடி திட்டம் நல்ல திட்டமாகும். அதை அனைத்து விவசாயிகளும் பின்பற்றினால் அதிக மகசூல் பெறுவது உறுதி' என்றார். அவரை போலவே மற்ற செம்மை நெல் சாகுபடி விவசாயிகளும் அதிக மகசூல் பெற்று வருவதாக தெரிவிக்கின்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

குறிச்சொற்கள்: ,

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..

Post a Comment