100 நாள் வேலை திட்டத்தால் விவசாயிகள் பாதிப்பு
7:13 AM 100 நாள் வேலை திட்டத்தால் விவசாயிகள் பாதிப்பு, செய்திகள் 0 கருத்துரைகள் Admin
கடலூர் மாவட்டத்தில் குறிப்பாக சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் தாலுகாக்களில் 100 நாள் வேலைத் திட்டத்தால் ஆள்கள் கிடைக்காமல் விவசாயிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.காவிரி டெல்டா கடைமடைப் பகுதியான சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் தாலுகாக்களில் சுமார் 1.25 லட்சம் ஏக்கரில் சம்பா நெல் சாகுபடி செய்துள்ளனர். மேட்டூரிலிருந்து தண்ணீர் தாமதமாக திறக்கப்பட்டதால் சாகுபடியை தாமதமாக தொடங்கினர். இந்நிலையில் இந்த ஆண்டு வெள்ளப் பாதிப்பு இல்லாவிட்டாலும் புகையான், இலை சுருட்டுப் புழு உள்ளிட்ட நோய்கள் தாக்குதலில் பாதிக்கப்பட்டு விளைச்சல் பாதியாக குறைந்துள்ளது.தற்போது மழையில் தலைசாய்ந்துள்ள நிலையில் உள்ள பயிரை இயந்திரம் மூலம் அறுவடை செய்ய முடியாது. ஆள்களை கொண்டுதான் அறுவடை செய்ய முடியும். தற்போது சம்பா நெல் சாகுபடி அறுவடை செய்து வேளையில் சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் தாலுக்காக்களில் 100 நாள் வேலைத் திட்டத்தை கடலூர் மாவட்ட நிர்வாகம் தொடங்கியுள்ளது.கடலூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் அனைத்து ஊராட்சி மன்றத் தலைவர்களையும் 100 நாள் வேலைத் திட்டப் பணிகளை தொடங்க வற்புறுத்தி நெருக்கடி செய்வதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.பல கிராமங்களில் குறிப்பாக ஒரத்தூர் வட்டத்தில் 100 நாள் வேலைத் திட்டப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இதனால் அறுவடைக்கு ஆள் கிடைக்காமல் ஏற்கெனவே தவித்து வரும் விவசாயிகள் தற்போது கொஞ்சம், நஞ்சம் இருந்த ஆள்களையும் 100 நாள் வேலைத் திட்டத்துக்கு கொண்டு சென்று விட்டதால் விவசாயிகள் அறுவடை செய்ய முடியாமல் திணறி வருகின்றனர்.உளுந்து விதைத்த ஒரு வாரத்துக்குள் சம்பா நெல் அறுவடை செய்ய வேண்டும். தற்போது உளுந்து விதைத்து 15 தினங்களுக்கு மேலாகியும் ஆள்கள் கிடைக்கவில்லை. இதனால் உளுந்து பயிர் சாகுபடியும் விவசாயிகளை பாதிக்கும் நிலை உருவாகியுள்ளது. இயந்திரமும் கிடைக்காமல், ஆள்களும் கிடைக்காமல் நெல் அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.வேளாண்மை நடைபெறும் காலத்தில் 100 நாள் வேலைத் திட்டத்தை செயல்படுத்தக் கூடாது. வேளாண்மை வேலை இல்லாத காலங்களில்தான் அத்திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்ற அரசின் விதிமுறை உள்ளது.எனவே விவசாயிகளின் அறுவடையைப் பாதிக்கும் 100 நாள் வேலைத் திட்டத்தை உடனே நிறுத்தி வைக்குமாறு தமிழக உழவர் முன்னணி மாவட்டத் தலைவர் சி.ஆறுமுகம் கோரிக்கை விடுத்து ஆட்சியருக்கு தந்தி அனுப்பியுள்ளார்.
குறிச்சொற்கள்: 100 நாள் வேலை திட்டத்தால் விவசாயிகள் பாதிப்பு, செய்திகள்
பகிர்தல் மிக எளிமையானது,அழகானது