இந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....

சொட்டு நீர் பாசன நிறுவனங்கள் அலட்சியம் குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் புகார்

கிருஷ்ணகிரி: "கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சொட்டு நீர் பாசனம் அமைக்கும் நிறுவனங்கள் அலட்சியமாக செயல்படுவதால், மேட்டுப்பாங்கான நிலங்களில் தண்ணீர் பாசனம் இல்லாமல் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது' என, குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடந்தது. கலெக்டர் சண்முகம் தலைமை வகித்தார். டி.ஆர்.ஓ., பிரபாகர், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) நாச்சியப்பன், வேளாண் உதவி இயக்குனர் பச்சையப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு:துரை ராமச்சந்திரன்: மானியத்துடன் கூடிய மழை நீர் சேகரிப்பு திட்டத்தை செயல்படுத்த அதிகாரிகள், விவசாயிகளுக்கு போதிய பயிற்சி அளிக்க வேண்டும். கலெக்டர் சண்முகம்: கிணற்று பாசன விவசாயிகள், தங்களது கிணற்றுக்கு அருகே 5 அடி ஆழம், 5 அடி அகலம் கொண்ட குழியை வெட்டி, அதில் மழை நீரை சேகரித்து, மீண்டும் தண்ணீரை கிணற்றுக்குள் விட அரசு 4,000 ரூபாய் இலவசமாக தருகிறது. அதை செயல்படுத்த விவசாயிகள் முன்வருவதில்லை.

இதுவரை 200 பேர் மட்டுமே மழை நீர் சேகரிப்பு குழியை வெட்டியுள்ளனர். மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் அனைவரும் இத்திட்டத்தை செயல்படுத்தி அரசு வழங்கும் நிதியை பெற்று கொள்ளலாம்.செந்தில்குமார்: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மானியத்துடன் சொட்டு நீர் பாசனம் அமைக்கும் நிறுவனங்கள் சரிவர செயல்படுவதில்லை. அவர்களுடைய அலட்சியத்தால் விவசாயிகளுக்கு நிதி விரயம் ஆவதுடன், பல மாதங்களாக அவர்கள் திட்டத்தை செயல்படுத்தாமல் காலதாமதம் செய்து வருகின்றனர். மேட்டுப்பாங்கான நிலங்களில் தண்ணீர் இல்லாமல் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.கலெக்டர் சண்முகம்: சொட்டு நீர் பாசனத்தை அமைக்கும் நிறுவனங்களின் பிரதிநிதிகளின் கூட்டத்தை கூட்டி விளக்கம் கேட்டு, உடனடியாக சொட்டு நீர் பாசனம் அமைக்க உத்தரவிடப்படும்.
கிருஷ்ணன்: மாந்தோட்டங்களை பராமரிக்க தோட்டக்கலை துறை சார்பில் 6,500 ரூபாய் மட்டுமே வழங்கப்படுகிறது. அதன் மூலம் மாந்தோட்டத்தை சரிவர பராமரிக்க முடியவில்லை. பராமரிப்பு நிதியை 15 ஆயிரம் ரூபாயாக உயர்த்த வேண்டும்.
கலெக்டர் சண்முகம்: மாவட்ட நிதி ஒதுக்கீடு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு, பாரமரிப்பு நிதி 20 சதவீதம் உயர்த்தி 10 ஆயிரம் ரூபாய் வழங்க அரசின் வழிகாட்டுதல் படி உத்தரவிடப்பட்டுள்ளது.



ராமகவுண்டர்: மானியத்துடன் பழைய மின்மோட்டார் மாற்றும் திட்டத்தில் குறைந்த அளவே பயனாளிகள் தேர்வு செய்யப்படுகின்றனர். 70 ஆயிரம் பம்புசெட்டுகள் உள்ள இடத்தில் குறைந்தது, 10 ஆயிரம் பேரையாவது திட்டத்தில் சேர்க்க வேண்டும்.நடராஜன் (வேளாண் பொறியில் துறை செயற்பொறியாளர்): பழைய மின் மோட்டாரை மானிய விலையில் மாற்றிட இதுவரை பொதுப்பிரிவில் 240 பேரும், தாழ்த்தப்பட்டோர் பிரிவில் 41 பேரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அரசு வழங்கும் ஒதுக்கீட்டின்படி மானியம் வழங்கப்படுகிறது. வருங்காலங்களில் அதிகம் பேருக்கு மானியம் வழங்க பரிந்துரை செய்யப்படும்.சக்கரவர்த்தி: செல்லம்பட்டியில் இருந்து அரசம்பட்டி வழியாக புலியூர் வரை செல்லும் சாலையை செப்பணிட கடந்த 3 மாதம் முன் டெண்டர் விடப்பட்டது. ஒப்பந்ததாரர் சாலை போடாமல் காலம் தாழ்த்தி வருகிறார்.கலெக்டர் சண்முகம்: சம்மந்தப்பட்ட ஒப்பந்ததாரரிடம் பேசி உடனடியாக பணியை துவங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
விவேகானந்தன்: ஊத்தங்கரை, பர்கூர், போச்சம்பள்ளியில் வறட்சி காரணமாக காய்ந்து போன பயிர்களுக்கு இன்ஷூரன்ஸ் வழங்க வேண்டும்.
கலெக்டர் சண்முகம்: மாவட்டத்தில் போதிய மழை பெய்து விட்டதால் வறட்சி மாவட்டமாக அறிவிக்க முடியாது. இருப்பினும் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நஷ்டஈடு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு விவாதம் நடந்தது.

குறிச்சொற்கள்: ,

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..

Post a Comment