கடும் வீழ்ச்சி விலையும், விளைச்சலும்... கடலை விவசாயிகள் கவலை
9:30 PM கடும் வீழ்ச்சி விலையும், செய்திகள், விளைச்சலும்... கடலை விவசாயிகள் கவலை 0 கருத்துரைகள் Admin
நாமக்கல்: சாகுபடி செலவு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், விளைச்சலும், விலையும் குறைந்து போனதால், நிலைக்கடலை பயிரிட்டுள்ள விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் பரவலாக கடலை பயிர் செய்யப்பட்டு வருகிறது. ஆண்டு தோறும் கோடை காலத்தில் பருவமழை பொழிய துவங்கியதும் விவசாயிகள் கடலை விதைக்க துவங்குவர். மானாவாரி பயிராகவும், இறைவை பயிராகவும் கடலை சாகுபடி செய்யப்படுகிறது.
மாவட்டத்தில் சாகுபடி செய்யப்பட்ட பல்வேறு பயிர் பரப்பளவில் 37 சதவீதம் எண்ணெய் வித்து பயிர் பயிரிடப் டுகிறது. அவற்றில் 22 சதவீதம் நிலக்கடலை பயிரும், 10 சதவீதம் சூரியகாந்தி போன்ற பயிர்களும், 5 சதவீதம் ஆமணக்கு மற்றும் இதர பயிர்களும் பயிர் செய்யப்படுகிறது. கடலை சாகுபடியில் பெருவாரியான பரப்பளவு மானாவாரி பயிராகவும், ஐந்து சதவீதம் முதல் ஏழு சதவீதம் வரை இறவை பயிராகவும் பயிர் செய்யப்படுகிறது.
அதன்படி மாவட்டத்தில் 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பில் கடலை பயிர்செய்யப்படுகிறது. இந்த ஆண்டு ஆடி, ஆவணி மாதத்தில் கிடைக்கக் கூடிய மழையில் மானாவாரி சாகுபடி தீவிர மடைந்துள்ளது. தமிழகத்தில் கோடை பருவத்தில் பயிரிடப்பட்டுள்ள கடலை பயிர்களில் தற்போது அறுவடை முடிந்துள்ளது. பருவமழை இந்தாண்டு சரியாக நேரத்தில் கிடைக்காததால், விளைச்சல் குறைந்தது.
அதனால், விவசாயிகளுக்கு கட்டுபடியாகக்கூடிய விலை கிடைக்காததால், செய்வதறி யாமல் தவிக்கின்றனர். தற்போது சந்தை விலையான ஒரு மூட்டை 1,210 ரூபாய்க்கு விற்பனையாவதால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இந்தாண்டு பின் மழையால் காய்பிடிக்கும் பருவத்தில் சரியான சீதோஷன நிலை இல்லாமல் போனது. இது குறித்து விவசாயி சங்க பிரதிநிதி ஒருவர் கூறியதாவது: மாவட்டம் முழுவதும் கடலை சாகுபடி என்பது தற்போது அதிகளவில் நடந்து வருகிறது.
இங்கு வி.ஆர்.ஐ., 1, 2, 3, கொடிக்காய், குத்துக்காய் என்ற ரகம் பயிரிடப்பட்டு வருகிறது. பல்வேறு பகுதிகளில் வி.ஆர்.ஐ., 1, 2, 3, ரக நிலக்கடலை பயிரிடப்பட்டுள்ளது. கோடை மழை பருவம் தப்பி பொழிந்ததால், எதிர்பார்த்த விளைச்சல் கிடைக்கவில்லை. உற்பத்தி செலவு அதிகரித்தும், விளைச்சல் குறைந்தும் உள்ளது. தற்போது இயற்கை மாசுபட்டுள்ளதால், பூச்சி தாக்குதலால் மகசூல் குறைந்து விவசாயிகள் தடுமாறுகின்றனர். வேலைக்கு ஆட்கள் கிடைக்காமல் விவசாயிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர்.
தற்போது தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் நாள் ஒன்றுக்கு 80 ரூபாய் கூலி வழங்குவதை அடுத்து, பெரும்பாலானவர்கள் சென்று விட்டனர். அதனால் மூன்று களை எடுக்க முடியாமல் தவிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அதிக கூலி கொடுத்து களை எடுக்க வேண்டிய நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.
அப்படி இருந்தும் ஆட்கள் கிடைக்காமல் விழி பிதுங்கி உள்ளனர். இந்நிலையில், உற்பத்தி செலவு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. செலவுக்கு தகுந்தாற்போல் விளைச்சல் இல்லாமல் போனதால் முதலுக்கே மோசமாகி விடுமோ என்ற அச்சத்தில் விவசாயிகள் உள்ளனர்.
குறிச்சொற்கள்: கடும் வீழ்ச்சி விலையும், செய்திகள், விளைச்சலும்... கடலை விவசாயிகள் கவலை
பகிர்தல் மிக எளிமையானது,அழகானது