இந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....

ஆமை வேகத்தில் இரட்டை வாய்க்கால் புனரமைப்பு பணி

கரூர்: கரூர் நகராட்சியின் இரட்டை வாய்க்கால் புனரமைப்பு பணி ஓராண்டில் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, இரண்டு ஆண்டு முடிந்தும் முடிக்கப்படாமல் ஆமை வேகத்தில் பணி நடக்கிறது.


கரூரில் 20 ஆண்டுக்கு முன் இரண்டு வாய்க்கால்களாக நகர் பகுதிக்குள் நுழைந்து சென்ற பாசன வாய்க்காலான இரட்டை வாய்க்கால் தற்போது ஆக்கிரமிப்புகள் போக, மீதமுள்ள ஒற் றை வாய்க்காலாக சிறுத்துபோயுள்ளது. அந்த வாய்க்காலிலும் கரையோர ஆக்கிரமிப்பு காரணமாகவும், கழிவு நீர் வாய்க்காலாக மாறிப்போனதாலும் ஆங்காங்கே அடைப்பு ஏற்பட்டு நகராட்சியின் ஒட்டுமொத்த கொசு உற்பத்தி கேந்திரமாக இரட்டை வாய்க்கால் மாறிவிட்டது.


இந்நிலையில், 3.5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நகரின் மையப்பகுதியில் உள்ள இரட்டை வாய்க்கால் புனரமைப்பு பணி மேற்கொள்ள அரசாணை 2006 நவம்பரில் வழங்கப்பட்டது. கண்காணிப்பு பொறியாளர் 2007 மே மாதம் தொழில்நுட்ப அனுமதியும் வழங்கியுள்ளார். வாய்க்கால் புனரமைப்பு பணிக்கு ஐந்து முறை ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு சேலத்தை சேர்ந்த தவமணி என்பவருக்கு தொழில்நுட்ப தகுதி உள்ளதாக கூறி ஒப்பந்த கூர்ந்தாய்வு குழு பரிந்துரைத்தது. ஒப்பந்தப்புள்ளி மதிப்பீட்டு தொகையைவிட 31.08 சதவீதம் அதிகமாக கேட்டிருந்தாலும், அப்போதைய மார்க்கெட் மதி ப்பு அடிப்படையிலும், பணி முடிவு காலம் ஓராண்டு என்பதாலும் சேலம் தவமணி ஒப்பந்தப்புள்ளியை ஏற்றுக்கொள்ள, மாநில ஒப்பந்தப்புள்ளி ஊர்ஜித குழுவுக்கு கவுன்சிலர்கள் பரிந்துரைத்தனர். இரட்டை வாய்க்கால் புனரமைப்பு முதற்கட்ட பணி 3.5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடத்துவதற்கான ஒப்புதலுக்கு மாநில ஒப்பந்தப்புள்ளி ஊர்ஜித குழுவுக்கு பரிந்துரைத்து நகராட்சி கூட்டத்தில் கடந்த 2007 டிச., 12ம் தேதி அனுமதிக்கப்பட்டது. பின்னர் புனரமைப்பு பணியானது தவமணிக்கே வழங்கப்பட்டது. இடையே, ஐகோர்ட் உத்தரவுப்படி நீர்நிலை ஆக்கிரமிப்பு அகற்ற பிறப்பிக்கப்பட்ட உத்தரவு அடிப்படையில், இரட்டை வாய்க்காலின் அமைவு குறித்த அளவிடும் பணி துவங்கப்பட்டு, ஆக்கிரமிப்புகளும் பெரும்பாலும் அகற்றப்பட்டது.


ஆனால், அதற்கு பிறகு பணி துவங்கினாலும், ஒராண்டில் முடிக்க வேண்டிய பணியானது, இரண்டு ஆண்டுகளாகியும் முடிக்கப்படாமல் உள்ளது. மொத்தம் 8.4 கி.மீ., நீளமுள்ள இரட்டை வாய்க்காலில், கரூர் நகராட்சி எல்லைக்குள் மட்டும் நான்கு கி.மீ., தூரம் உள்ளது. இவற்றுள், சின்னாண்டாங்கோயில் அங்காளம்மன் கோவில் அருகில் இருந்து கரூர் லைட்ஹவுஸ் கார்னர் வரையிலான இரண்டு கி.மீ., தொலைவுக்கான முதற்கட்டப்பணி மட்டுமே 3.5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தற்போது நடக்கிறது. மீதமுள்ள இரண்டு கி.மீ., தொலைவுக்கான புனரமைப்பு பணி பின்னர்தான் நடக்கவுள்ளது. திட்டத்துக்கான மொத்த மதிப்பீட்டு தொகை 5.5 கோடி ரூபாய். 80 சதவீத தொகை மத்திய அரசு மானியமாகவும், 10 சதவீதம் மாநில அரசு மானியமாகவும், மீதமுள்ள 10 சதவீதம் நகராட்சியின் நிதியில் இருந்து செலவிடப்படுகிறது. 10 அடி ஆழம், 16 அடி அகலத்தில் அடிப்பகுதி மற்றும் 30 அடி அகலத்தில் மேற்பகுதி என ரிவான கரைகளுடன் வாய்க்கால் புனரமைக்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது. கரையோரம் முற்றிலும் சிமென்ட் சிலாபுகள் அமைத்து சீரமைக்கப்படவுள்ளது. ஆனால், பணி முடிக்க ஓராண்டு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, கூடுதலாக ஓராண்டு ஆன நிலையிலும் 30 சதவீத பணி பாக்கியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.


கரூர் நகராட்சி கமிஷனர்(பொ) ராஜா கூறியதாவது: இரட்டை வாய்க்கால் பணி தாமதம் குறித்து ஒப்பந்ததாரருக்கு "மெமோ' அளித்தோம். மழை உள்ளிட்ட காரணங்களை கூறினர். ஆனால், விரைந்து பணி முடிக்க கூறியுள்ளோம். வாய்க்காலில் அமையும் ஐந்து பாலங்களில் மூன்று முடிக்கப்பட்டது. வரும் 2010 மார்ச்சில் பணி முடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

குறிச்சொற்கள்: ,

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..

Post a Comment