நாமக்கல் மாவட்டம் விவசாயிகளிடம் விளைநிலம் அபகரிப்பு: ரியல் எஸ்டேட் அதிபர்கள் மீது குற்றச்சாட்டு
10:59 PM செய்திகள், நாமக்கல் மாவட்டம் விவசாயிகளிடம் விளைநிலம் அபகரிப்பு 0 கருத்துரைகள் Admin
ராசிபுரம்: புதுசத்திரம் அருகே கல்யாணி பஞ்சாயத்துக்கு உட்பட்ட விளைநிலங்கள் சமீபகாலமாக வீட்டுமனைகளாக மாறி வருகிறது. மேலும், விளைநிலங்களை வழங்க மறுக்கும் விவசாயிகளை ரியல் எஸ்டேட் அதிபர்கள் மிரட்டவும் செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ராசிபுரம் அருகே புதுசத்திரம் யூனியனுக்கு உட்பட்டது கல்யாணி பஞ்சாயத்து.
சேலம்- நாமக்கல் தேசிய நெடுஞ்சாலை ஓரம் அக்கிராமம் அமைந்துள்ளது. அப்பகுதியினர் விவசாயம், கால்நடை வளர்ப்பை நம்பி ஜீவனம் நடத்தி வருகின்றனர். சமீப காலமாக கல்யாணி அதன் சுற்றுவட்டாரத்தில் நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள விளைநிலங்கள் வீட்டுமனைகளாக மாறி வருகின்றன. விவசாயத் தொழில் நசிவு காரணமாக விளைநிலங்களை விவசாயிகள் ஒரு சிலர் தானாக வந்து விற்பனை செய்கின்றனர். இது ஒரு புறம் இருந்தாலும் ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபடும் சிலர் விவசாயிகளை மிரட்டி, அவர்களது விளை நிலங்களை விலைக்கு வாங்குவது அதிகரித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதன்படி கல்யாணி பஞ்சாயத்து அதன் சுற்றுவட்டாரத்தில் நாற்பதுக்கும் மேற்பட்ட விவசாயிகளிடம் இருந்து விளைநிலங்கள் சமீபத்தில் வாங்கப்பட்டு வீட்டு மனைகளாக மாற்றப்பட்டுள்ளன.
மேலும், பலரது நிலங்களை வாங்குவதற்கு முன் பணமும் கொடுக்கப்பட்டுள்ளது. அவ்வாறு அக்ரிமெண்ட் போடப்பட்ட விளைநிலங்களைச் சுற்றிலும் யாரும் செல்ல முடியதாபடி பள்ளம் தோண்டி வைத்துள்ளதாகவும் புகார் தெரிவிக்கப்படுகிறது. இது குறித்து அப்பகுதி விவசாயிகள் சிலர் கூறுகையில், ""கல்யாணி கிராமத்தில் உள்ள பலரது விளைநிலங்களை ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபடுவோர் விலைக்கு வாங்கி வருகின்றனர். நிலம் தர மறுக்கும் விவசாயிகளிடம் வலுக்கட்டாயமாக நிலம் வாங்கப்படுகிறது. அவ்வாறு வாங்கப்படும் நிலங்களை சுற்றி நான்குபுறமும், பெரிய பள்ளங்களை தோண்டி விடுகின்றனர். ""இதனால் அருகில் உள்ள விவசாயிகள் தங்களது வீடுகளுக்கு குடிநீர் கூட கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது.
இதுபோன்ற தொடர் இடர்பாடு காரணமாக பாதிக்கப்படும் விவசாயிகள் தங்களது நிலங்களை விற்பனை செய்ய வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்படும் நிலை ஏற்படுகிறது. ""இப்பிரச்னை சம்மந்தமாக கல்யாணி பஞ்சாயத்தை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் புதுசத்திரம் போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்துள்ளோம். அதுபோல் வருவாய் துறையினரிடம் புகார் செய்யப்பட்டுள்ளது. எனினும், இருதரப்பினரும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் மெத்தனப் போக்கை கடைபிடித்து வருகின்றனர். ""இந்நிலை நீடித்தால் விவசாயம் அடியோடு பாதிக்கும் நிலை ஏற்படும். போதிய மழைப்பொழிவு இல்லாததால் விவசாயம் நலிவடைந்து வரும் இச்சூழலில், விளைநிலங்களை ரியல் எஸ்டேட் அதிபர்கள் பெற்று வீட்டுமனைகளாக மாற்றி வருவது வருங்கால சந்ததியினருக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தும்,'' என்றனர்.
குறிச்சொற்கள்: செய்திகள், நாமக்கல் மாவட்டம் விவசாயிகளிடம் விளைநிலம் அபகரிப்பு
பகிர்தல் மிக எளிமையானது,அழகானது