இந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....

மலையோரமாக சுரண்டப்படும் மண்!

கோவை, டிச.20: கோவையை அடுத்த சின்னத்தடாகம் பகுதியில் செங்கல் உற்பத்திக்காக அதிகப்படியான களிமண் வெட்டி எடுக்கப்படுவதால், நிலத்தடி நீர் மட்டம் பாதாளத்தை நோக்கி சென்று, அப் பகுதியே பாலைவனமாக மாறும் சூழல் ஏற்பட்டுள்ளது.

÷கோவையில் ஆங்காங்கே வணிக நிறுவனங்களும், பெரிய வணிக வளாகங்களும் கட்டப்பட்டு வருகின்றன. அதே சமயம், முன் எப்போதும் இல்லாத அளவிற்கு புறநகர்ப் பகுதியில் புதிய வீடுகள் கட்டப்படுகின்றன. இதனால், நாளுக்கு நாள் கட்டுமானப் பொருள்களின் தேவை அதிகரித்து கொண்டே செல்கிறது. குறிப்பாக, செங்கல் தேவை பன்மடங்கு உயர்ந்துள்ளதாகக் கூறுகின்றனர் கட்டட பொறியாளர்கள்.செங்கலின் தேவை அதிகரிப்புக்கேற்ப உற்பத்தியை அதிகரிக்க வேண்டிய கட்டாயத்தில் செங்கல் சூளை உரிமையாளர்கள் உள்ளனர்.

சுரண்டப்படும் மண்: கோவையை அடுத்த ஆனைகட்டி பகுதியில் இயங்கும் 50 சிறிய மற்றும் பெரிய செங்கல் சூளைகள்தான் செங்கல் தேவையை பூர்த்தி செய்து வருகின்றன. இந்தச் சூளைகளில் இருந்து தினமும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட செங்கற்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.

÷மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் வெட்டி எடுக்கப்படும் களிமண்தான் செங்கல் உற்பத்திக்கு பிரதான மூலப் பொருள். மலையோரப் பகுதி மற்றும் பட்டா நிலங்களில் இருந்து களிமண் எடுக்க கனிம வளத் துறையிடம் அனுமதி வாங்க வேண்டும். இந்த அனுமதியை பெறும் செங்கல் சூளை உரிமையாளர்கள், அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிக ஆழத்துக்கு களிமண்ணை வெட்டி எடுத்து விடுகின்றனர். இதனால், சின்னத்தடாகம் ஊராட்சியையொட்டியுள்ள மலையோர பகுதிகளில் 20 அடி ஆழத்துக்கு ஏராளமான பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன.

பாதாளத்தில் நிலத்தடி நீர்: மேல்புறத்தில் உள்ள மண் தொடர்ந்து சுரண்டப்படுவதால், நிலத்தடி நீர்மட்டம் வெகுவாகக் குறையும் என எச்சரிக்கை செய்கின்றனர் நீரியல் விஞ்ஞானிகள்.

÷மழை பெய்யும்போது தேங்கும் நீரானது, நிலத்துக்குள் செல்கிறது. அந்த நீர், நிலத்துக்கு அடியில் ஓடையாக ஓடுகிறது. அந்த நிலத்தடி நீரைத்தான் நாம் ஆழ்துளைக் கிணறுகள் மூலம் வெளியே கொண்டு வந்து உபயோகப்படுத்துகிறோம்.

மேல்புறத்தில் இருக்கும் மண் தொடர்ந்து வெட்டி எடுக்கப்படுவதால், மழைநீர் நிலத்துக்கு அடியில் செல்வதற்கு பதில் வழிந்தோடிவிடுகிறது. இதே நிலை தொடர்ந்தால், நிலத்தடி நீர் மட்டம் நாளடைவில் பாதாளத்தை நோக்கி சென்றுவிடும் என்கிறார் மத்திய நிலத்தடி நீர் வாரிய விஞ்ஞானிகள்.

÷இந்த வாரியம் சார்பில் கோவையின் பல்வேறு பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் குறித்து அண்மையில் ஆய்வு செய்யப்பட்டது. தொண்டாமுத்தூர், தடாகம், சின்னத்தடாகம் பகுதிகளில் நிலத்தடி நீர் உபயோகம் அதிகரித்துள்ளதும், அதே சமயம், நிலத்தடி நீர் மட்டம் குறைந்து வருவதையும் அந்த ஆய்வு சுட்டிக்காட்டியுள்ளது.

"வனத்தையொட்டியுள்ள பகுதிகளில் மண் வெட்டி எடுக்கப்படுவதால், மண்ணில் உள்ள ஈரப்பதத்தின் அளவு குறைந்துவிடும். இது நேரடியாக வனப் பகுதிகளில் உள்ள மரங்கள் மற்றும் தாவரங்களின் வளர்ச்சியைப் பாதிக்கும். இதனால், அப் பகுதியே மரங்களற்று பாலைவானம் மாறும்' என்கின்றனர் நீரியல் நிபுணர்கள்.

÷உயிரினங்களின் அடிப்படை ஆதாரமாகத் திகழும் மண் தொடர்ந்து சுரண்டப்படுவதை மாவட்ட வருவாய்த் துறையினரும், கனிம வளத் துறையினரும் தடுக்க வேண்டும் என்பதே இயற்கையை நேசிப்போரின் கோரிக்கை.

குறிச்சொற்கள்: ,

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..

Post a Comment