கள் இறக்கும் போராட்டத்துக்கு ஆதரவு இல்லை :நாடார் பேரவை மாநில தலைவர் அறிவிப்பு
5:54 AM கள் இறக்கும் போராட்டத்துக்கு ஆதரவு இல்லை :நாடார் பேரவை, செய்திகள் 0 கருத்துரைகள் Admin
கரூர்: ""ஆய்வுக்கமிட்டி அறிக்கையைத் தொடர்ந்து நல்ல முடிவு கிடைக்கும் என்று எதிர்பார்த்து அரசுக்கு காலஅவகாசம் அளிக்க நினைத்துள்ளோம். இதனால் கள் இயக்கம் மற்றும் விவசாய சங்கங்கள் அறிவித்துள்ள கள் இறக்கும் போராட்டத்துக்கு நாங்கள் ஆதரவு தரவில்லை,'' என, தமிழ்நாடு நாடார் பேரவை மாநில தலைவர் தனபாலன் கூறினார்.
தமிழ்நாடு நாடார் பேரவை மற்றும் நாடார் மகாஜன சங்க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் கரூரில் நடந்தது. தமிழ்நாடு நாடார் பேரவை மாவட்ட செயலாளர் துரைசாமி தலைமை வகித்தார்.நாடார் பேரவை மாநில தலைவர் தனபாலன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: வரும் ஜனவரி 21ம் தேதி சென்னையில் எங்களுடைய கோரிக்கை விளக்க மாநாடு நடக்கிறது. மாநாட்டில் அமைச்சர்கள் ராமச்சந்திரன், பூங்கோதை, கீதாஜீவன் மற்றும் காங்கிரஸ் மாநில தலைவர் தங்கபாலு பங்கேற்கின்றனர். தமிழகத்தில் 10 லட்சம் பனை, தென்னை தொழிலாளர் உள்ளனர். 60 லட்சம் விவசாய குடும்பம் தென்னையை நம்பியுள்ளது. கடந்த 25 ஆண்டாக தென்னை உற்பத்தி பொருளின் விலை உயரவேயில்லை. அதே சமயம் விவசாய கூலி, உரம் உள்ளிட்ட அனைத்து விலையும் பலமடங்கு கூடிவிட்டது.
கள் இறக்க அனுமதிப்பதால் 60 லட்சம் விவசாய குடும்பம், 10 லட்சம் பனை தொழிலாளர் நலன் பாதுகாக்கப்படும். 10 கோடி தென்னை, ஐந்து கோடி பனை மரம் வெட்டப்படுவது தவிர்க்கப்படும். அரசின் சின்னமாக உள்ள பனை முற்றிலும் அழியும் நிலை மாறும். கள்ளை மதுபான பட்டியலில் இருந்து நீக்கி, உணவு பட்டியலில் சேர்த்து அனுமதிக்க கோரியுள்ளோம். கள் உற்பத்தி செய்து மதிப்பு கூட்டப்பட்டு ஏற்றமதிக்கான வாய்ப்பையும் ஏற்படுத்த வேண்டும். கடந்த ஜனவரியில் நடத்தப்பட்ட கள் இறக்கும் போராட்டத்தை தொடர்ந்து, முன்னாள் நீதிபதி சிவசுப்பிரமணியன் கமிட்டி அமைக்கப்பட்டு தற்போது ஆய்வு முடிந்துள்ளது. அரசு அறிவித்தபடி ஆய்வு அறிக்கை ஆறு மாதகாலத்தில் சமர்ப்பிக்கப்பட்டு நல்ல முடிவு கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.இதற்கான காலஅவகாசத்தை அரசுக்கு அளிக்க நினைத்துள்ளோம். கள் இயக்கம் மற்றும் பல்வேறு விவசாய சங்கங்கள் தற்போது அறிவித்துள்ள கள் இறக்கும் போராட்டத்துக்கு நாங்கள் ஆதரவு அளிக்கவில்லை.
பல ஆண்டாக நீடித்த எங்கள் கோரிக்கையான காமராஜர் நினைவு தினத்தை கல்வி வளர்ச்சி நாளாக மாநில அரசு தற்போது அறிவித்தது. அதே போல், 12 ஆண்டாக தொடரும் கள் இறக்கும் உரிமை கோரிக்கைக்கும் அரசு நல்ல முடிவு அறிவிக்கும் என்று எதிர்பார்க்கிறோம். மாநிலத்தில் அதிகம் படித்தவர் பட்டியலில் நாடார் சமுதாயத்தினர் இல்லை. எனவே, நாடார் சமுதாயத்தை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இணைக்க வேண்டும். குறைந்தபட்சம் பனை தொழிலாளர்களையாவது இப்பட்டியலில் சேர்க்க வேண்டும் அல்லது ஜாதி வாரியாக கணக்கெடுத்து இடஒதுக்கீடு முடிவெடுக்க வேண்டும்.எங்களுடைய கோரிக்கைக்கு தீர்வு காணப்படாவிட்டால், 2011ல் நடக்கும் சட்டசபை தேர்தலில் எங்களோடு கருத்து உடன்பாடு ஏற்படும் கட்சிகளுடன் இணைந்து 60 தொகுதிகளில் போட்டியிட முடிவு செய்துள்ளோம். மாவட்ட வாரியாக நடக்கும் தற்போதை கூட்டத்தில், "பூத் கமிட்டி' அமைக்கும் பணியையும் துவக்கிவிட்டோம். இவ்வாறு அவர் கூறினார்.பேட்டியின் போது, மாநில கொள்கை பரப்பு செயலாளர் காமராஜ், தலைமை நிலைய செயலாளர் சிவகுமார் உடனிருந்தனர்.
குறிச்சொற்கள்: கள் இறக்கும் போராட்டத்துக்கு ஆதரவு இல்லை :நாடார் பேரவை, செய்திகள்
பகிர்தல் மிக எளிமையானது,அழகானது