இந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....

வியாழன், 17 டிசம்பர், 2009 டெல்டாவில் கொட்டித்தீர்க்கும் மழை : பூக்கும், அறுவடை பருவ நெற்பயிர் பாதிப்பு

தஞ்சாவூர்: டெல்டா மாவட்டத்தில் தொடர் மழையால் அறுவடை பருவ பயிரும், பூக்கும் பருவத்தில் உள்ள பயிர்களும் பாதிப்படைந்துள்ளது. நாகை, திருவாரூர் மாவட்டத்தில் முறையாக தூர்வாராத காணத்தால் நீர் வடிவதில் தாமதம் ஏற்படுகிறது.


வங்கக்கடலின் காற்றழுத்த தாழ்வு நிலையால் டெல்டாவில் கடந்த ஒரு வாரமாக தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. 50 மணி நேரத்துக்கு மேலாக பெய்யும் தொடர் மழையால், அனைத்து தரப்பு நெற்பயிர்களும் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுபற்றி, வேளாண் துறையினர் கூறியதாவது: தஞ்சை மாவட்டத்தில் சம்பா, தாளடி சேர்ந்து ஒரு லட்சத்து 26 ஆயிரத்து 847 ஹெக்டேர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. சேதுபாவாசத்திரம், செங்கிப்பட்டி பகுதியில் ஆறாயிரம் ஹெக்டேர் தற்போது நடவு முடிந்துள்ளது. 90 முதல் 100 நாள் கொண்ட நெற்பயிர்கள் பூக்கும் நிலையில் உள்ளவையும், அறுவடை செய்ய தயார் நிலையில் உள்ளவையும், நீர் வடிய வழியில்லாத இடங்களில் உள்ள பயிர்களையும் பாதிக்கலாம். மேலும், மழை தொடர்ந்தால் பாதிப்பு அதிகமாகும். தஞ்சை மாவட்டத்தில் தண்ணீர் தொடர்ந்து வடிவதால் குறிப்பிடும்படியான பதிப்பில்லை. முன்னதாக பயிர் செய்யப்பட்ட ஒரத்தநாடு போன்ற பகுதிகளில் வயல்களில் அறுவடை செய்ய முடியாத நிலை உள்ளது. மேட்டூர் மூடப்பட்டதால் நீர் வடிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.


நாகை, திருவாரூர் மாவட்டத்தில் முழுமையாக தூர்வாராததால் நீர் வடிவதில் பிரச்னை நீடிக்கிறது. இதனால், பெரும்பாலான வயல்களில் நீர் தேங்கி அனைத்து நிலை பயிர்கள் கீழ்புறத்திலும், அறுவடைக்கு தயாராக உள்ள நெற்கதிர்கள் நீரில் மூழ்கி அழுகியும், நீரில் மூழ்காமல் மழையில் நனைந்தவை முளைத்தும் காணப்படுகிறது. திருத்துறைப்பூண்டி பகுதியில் கடந்த ஒரு வாரகால தொடர் மழையால் அறுவடைக்கு தயாரான நெற்கதிர்கள் நீரில் மூழ்கி முளைத்துவிட்டன. கடந்த நவம்பர் மாதத்தில் வடகிழக்கு பருவமழை துவங்கி பெய்த மழையால் கட்டிமேடு, வடபாதி, பிச்சன்கோட்டகம், நெடும்பலம், மங்களநாயகிபுரம், தோத்ரியம் ஆகிய பகுதிகளில் இரண்டாயிரம் ஏக்கரில் நடவு செய்யப்பட்டிருந்த சம்பா நடவு நீரில் மூழ்கி பாதிப்பு ஏற்பட்டது. தற்போது, ஒரு வாரமாக பெய்து வரும் மழையால் அப்பகுதியில் உள்ள பயிர்கள் முற்றிலும் அழுகி நாசமாகிவிட்டது. தற்போது, அறுவடைக்கு தயாராகி இருந்த நெற்பயிர்கள் சிதம்பர கோட்டகம், சிதம்பரகொத்தமங்கலம், ஆட்டூர் ரோடு, அம்மனூர் ஆகிய பகுதிகளில் நீரில் மூழ்கி உள்ளது. இதனால், நெற்கதிர்கள் முளைக்கத்துவங்கிவிட்டதால், விவசாயிகள் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.


வேதாரண்யம் பகுதியில் ஒரு வாரமாக பெய்து வரும் தொடர் மழையால் இப்பகுதியில் உள்ள நீர் நிலைகள் நிரம்பி வழிகிறது. வேதாரண்யம் பகுதியில் நேற்று காலை எட்டு மணி வரை 38 மி.மீட்டர் மழையும், தலைஞாயிறில் 138.8 மி.மீட்டர் மழையும் பெய்துள்ளது. இதனால், தலைஞாயிறு அரிச்சந்திரா நதி நிரம்பி வழிகிறது. இந்த நதியில் எந்த நேரமும் உடைப்பு எடுக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. வேதாரண்யம் கடல் பகுதியில் கடல் சீற்றம், கொந்தளிப்பால் கடந்த ஒரு வாரமாக மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. மீன்பிடித்தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதுபோல, உப்பு ஏற்றுமதியும் பாதிக்கப்பட்டுள்ளது. இத்தொடர் மழையால் வேதாரண்யம் தாலுகாவில் உள்ள மானாவாரி நிலத்தில் சாகுபடி செய்யப்பட்டிருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. இதனால், 20 ஆயிரம் ஏக்கரில் செய்யப்பட்டிருந்த நெல் சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது.


டெல்டா மாவட்டத்தில் நேற்று காலை எட்டு மணி நிலவரப்படி திருப்பூண்டி 170 மி.மீட்டர், வல்லம் 144, மணல்மேடு 143, முள்ளியாறு 141, தஞ்சை 140, தலைஞாயிறு 136, நீடாமங்கலம் 127, அணைக்கரை 125, திருத்துறைப்பூண்டி 122, நாகை 120, பொறையாறு 114, பாண்டவையாறு 109, ஒரத்தநாடு 107, திருவாரூர் 107, முத்துப்பேட்டை 105, நன்னிலம் 103, சீர்காழி 100, மன்னார்குடி 93, குடவாசல் 91, அதிராம்பட்டினம் 84.8, கொள்ளிடம் 85, நெய்வாசல் தென்பாதி 84, கோரையாறு 82, திருவிடைமருதூர் 78, மஞ்சளாறு 76, அய்யம்பேட்டை 74, கும்பகோணம் 72, வலங்கைமான் 71, குருங்குளம் 69, மதுக்கூர் 69, பட்டுக்கோட்டை 67, பாபநாசம் 65, பேராவூரணி 58, நாகுடி 55, ஆயங்குடி 54, வெட்டிக்காடு 53, திருக்காட்டுபள்ளி 49.2, ஈச்சன்விடுதி 47, பூதலூர் 46, வேதாரண்யம் 38.2, கல்லணை 23.2, திருவையாறு 8 மி.மீட்டர் மழை பதிவானது. தஞ்சை மாவட்டத்தின் டிசம்பர் மாத சராசரி மழை 167.95 மி.மீட்டர். நேற்று முன்தினம் பெய்த சராசரி மழை 30.6 மி.மீட்டர், நேற்று 76.74 மி.மீட்டர் சராசரி மழை பதிவாகியுள்ளது.


வாய்க்காலில் மூதாட்டி பலி: வேதாரண்யம் வேதாமிர்த ஏரி நிரம்பி வழிகிறது. இதனால், இங்கிருந்து கடலுக்கு செல்லும் ஏரிவாய்க்காலில் மழை நீர் அதிகமாக செல்கிறது. நேற்று காலை இந்த வாய்க்கால் அருகே காலைக்கடன் கழிக்கச் சென்ற வேதாரண்யம் வடக்கு வடம்போக்கித் தெருவைச் சேர்ந்த முன்னாள் ராணுவவீரர் கோவிந்தராசு மனைவி அபிராமி அம்மாள் (75) வாய்க்காலில் விழுந்து பலியானார். இவரது உடல் 100 மீட்டர் தூரம் நீரில் அடித்துச் செல்லப்பட்டு கருவைக்காட்டில் ஒதுங்கியது. வி.ஏ.ஓ., பாலசுப்பிரமணியன், தாசில்தார் கருணாகரன் ஆகியோர் வேதாரண்யம் போலீஸில் புகார் செய்தனர்.

குறிச்சொற்கள்: ,

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..

Post a Comment