முறைப்பாசனம்: பொதுப் பணித் துறையினர் மீது விவசாயிகள் புகார்
8:37 PM செய்திகள், முறைப்பாசனம்: பொதுப் பணித் துறையினர் மீது விவசாயிகள் புகார் 0 கருத்துரைகள் Admin
பெரியாறு பிரதான கால்வாய் மூலம் முறைப்பாசனத்தை நடைமுறைப்படுத்தியது தொடர்பாக விவசாயிகளுக்கு உரிய முறையில் தகவல் தெரிவிக்கவில்லை என மதுரை ஆட்சியர் வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் புகார் எழுப்பப்பட்டது.
மதுரை மாவட்டத்தில் ஆட்சியர் ந.மதிவாணன் தலைமையிலும், மாவட்ட வருவாய் அலுவலர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் முன்னிலையிலும் இந்தக் குறைதீர்க் கூட்டம் நடைபெற்றது. இதில், மதுரை கருப்பாயூரணியைச் சேர்ந்த நீரினை பயன்படுத்துவோர் சங்கத் தலைவர் புத்திசிகாமணி பேசியது:
பெரியாறு பிரதான கால்வாய் மூலம் பாசன வசதி பெரும் இருபோக பாசன நிலங்களில் 2-ம் போகத்துக்கும், ஒருபோக பாசன நிலங்களுக்கும் கடந்த 10}ம் தேதி முதல் முறைப்பாசனம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து விவசாயிகளுக்கு உரிய முறையில் பொதுப் பணித் துறையினரால் தகவல் அளிக்கப்படவில்லை.
இதனால், கடைமடைப் பகுதியில் உள்ள ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. இப்பகுதிகளில் நாற்றுப் பாவ முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும், மேட்டுப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் மோட்டார் மூலம் பாசன நீர் திருடப்பட்டு வருகிறது எனத் தெரிவித்தார்.
இதற்கு, சம்பந்தப்பட்ட விவசாயிகளை அழைத்து பேச்சு வார்த்தை நடத்துமாறு பொதுப் பணித் துறை அதிகாரிகளுக்கு ஆட்சியர் ந.மதிவாணன் உத்தரவிட்டார்.
அதேபோல் மேலூர் விவசாயிகள் பேசுகையில், பெரியாறு பிரதான கால்வாயில் நீர் வரத்துப் பகுதியில் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுகளும், நகராட்சி மருத்துவமனையின் பிரசவ வார்டில் இருந்து வெளியேறும் கழிவுகளும் கலந்து சுகாதாரக்கேடு ஏற்படுகிறது.
இதுகுறித்து பொதுப் பணித் துறை மற்றும் நகராட்சி சார்பில் சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டனர்.
தமிழ்நாடு விவசாயச் சங்க மாவட்டச் செயலர் கே.தேவராஜ் பேசுகையில், உரங்கள் குறித்த பட்டியல் உரக்கடைகளில் தெரிவிக்கப்பட்டிருந்தாலும், உரங்கள் இருப்புக் குறித்து எவ்விதத் தகவல்களும் தெரிவிக்கப்படவில்லை.
உரக் கடைகளில் சோதனை மேற்கொள்ள வரும் வேளாண் அதிகாரிகள் குறித்து முன்கூட்டியே கடைக்காரர்களுக்குத் தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பாக கருமாத்தூர் பகுதியில் சில தினங்களுக்கு முன் நடைபெற்ற சோதனையில் முன்கூட்டியே தகவல் தெரிந்ததால் பல கடைகள் அடைக்கப்பட்டுவிட்டன என்றார்.
அதேபோல், நெல் கொள்முதல் உள்ளதுபோல் கொப்பரைத் தேங்காய்க்கான நேரடி கொள்முதல் மையம் ஏற்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் விவசாயிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்தக் கூட்டத்தில், வேளாண்மைத் துறை இணை இயக்குநர் சேவுகப்பெருமாள், மின்சாரத் துறை, பொதுப் பணித் துறை உள்ளிட்டஅதிகாரிகள் பங்கேற்றனர்.

குறிச்சொற்கள்: செய்திகள், முறைப்பாசனம்: பொதுப் பணித் துறையினர் மீது விவசாயிகள் புகார்
பகிர்தல் மிக எளிமையானது,அழகானது