சம்பா நெல்லுக்கு ரூ. 1800 விலை நிர்ணயிக்க வேண்டும்
8:36 PM சம்பா நெல்லுக்கு ரூ. 1800 விலை நிர்ணயிக்க வேண்டும், செய்திகள் 0 கருத்துரைகள் Admin
திருச்சி, சம்பா நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ. 1,800 ஆக உயர்த்தி விலை நிர்ணயிக்க வேண்டும் என, திருச்சியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறை தீர் நாள் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
ஆட்சியரக வளாகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியர் தா. சவுண்டையா தலைமை வகித்தார்.
காவிரி டெல்டா பாசன விவசாயிகள் நலச் சங்கத் தலைவர் ஜி. கனகசபை பேசியது: "குறுவை சாகுபடிக்கு காவிரி நீர் உரிய அளவில் கிடைக்கவில்லை. தற்போது, அதிக அளவில் பெய்த மழையால் சம்பா பயிர்கள் சாய்ந்துவிட்டன. மேலும், பூச்சித் தாக்குதலும் ஏற்பட்டுள்ளதால், விவசாயிகள் நஷ்டமடையும் நிலை உள்ளது. எனவே, சம்பா நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ. 1,800 விலை நிர்ணயிக்க வேண்டும்' என்றார் கனகசபை.
காங்கிரஸ் விவசாயிகள் பிரிவு மாவட்டத் தலைவர் புலியூர் அ. நாகராஜன் பேசியது:
"தொடர் மழை காரணமாக சம்பா பயிர்களில் நோய்த் தாக்குதல் ஏற்படும் அபாயம் உள்ளது. இதைத் தடுப்பதற்கான யோசனைகளை விவசாயிகளுக்கு அளிக்க வேண்டும்' என்றார்.
பாரதிய கிசான் சங்க மாநிலப் பொதுச் செயலர் பி. அய்யாக்கண்ணு பேசியது:
"வங்கியில் விவசாயக் கடன் பெறுவதில் இடைத்தரகர்கள் பணத்தைப் பெற்று விவசாயிகளை ஏமாற்றிவிடுகின்றனர். இதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மழை நின்றுவிட்டதால், வாய்க்கால்களில் தண்ணீர் விட நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார் அவர்.
இதற்குப் பதிலளித்து மாவட்ட ஆட்சியர் பேசியது:
"மோசடி செய்தால் காவல் நிலையத்தில் புகார் கொடுங்கள். உரிய நடவடிக்கை எடுக்குமாறு காவல் கண்காணிப்பாளரிடமும் அறிவுறுத்துகிறேன்.
டிச. 30}ம் தேதி வங்கியாளர்கள் கூட்டம் நடைபெறவுள்ளது. இதில், ரிசர்வ் வங்கி உதவிப் பொது மேலாளர் பங்கேற்கிறார். எனவே, ஏதேனும் குறைகள் இருந்தால், விவசாயிகள் கலந்து கொண்டு தெரிவிக்கலாம்' என்றார்.
தமிழக விவசாயிகள் சங்க மாநிலச் செயலர் ஆர். ராஜா சிதம்பரம் பேசியது:
"விவசாயக் கடன்களுக்கு 7 சதம் வட்டி என மத்திய அரசு அறிவித்தது. கடனை சரியான முறையில் கட்டினால் அதில் ஒரு சதம் குறைக்கப்படும் எனவும் அரசு குறிப்பிட்டிருந்தது. ஆனால், தற்போது வங்கிகளில் 10 சதம் வட்டி விதிக்கப்படுகிறது. ஒவ்வொரு வங்கியிலும் வட்டி விகிதம் வித்தியாசப்படுகிறது. ஒரே வட்டி விகிதம் நிர்ணயிக்க அரசுக்குப் பரிந்துரை செய்ய வேண்டும்' என்றார் ராஜா சிதம்பரம்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சார்ந்த தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் அயிலை சிவ. சூரியன் பேசியது:
"காந்தி சந்தையில் விவசாயிகள் கொண்டு செல்லும் வாழைத் தாரை ஏலம் விடும்போது வியாபாரிகள் தர்மக் காசு பிடிக்கின்றனர். இதை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், தார் அடிப்படையில் ஏலம் விடுவதைத் தவிர்த்து எடை அளவில் விற்பனை செய்யும் நிலையை ஏற்படுத்த வேண்டும்' என்றார் அவர்.
இதற்குப் பதிலளித்து மாவட்ட ஆட்சியர் பேசியது:
"இந்த பிரச்னை தொடர்பாக கமிட்டி அமைத்து கூட்டம் நடத்தப்பட்டது. இதில், தர்மக் காசு பிடிக்கக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. எடை அடிப்படையில் ஏலம் விடுவது தொடர்பாக படிப்படியாக நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், பிரச்னைகள் இருந்தால், இந்த கமிட்டியிடம் தெரிவித்து தீர்வு காணலாம்' என்றார். அய்யன் வாய்க்கால் பாசனதாரர் சங்க ஒருங்கிணைப்பாளர் என். வீரசேகரன் பேசியது:
"கூட்டுறவுத் துறையில் பயிர் கடன் பெறும்போது, இதர வங்கிகளில் கடன் இல்லா சான்று வாங்கி வருமாறு வற்புறுத்தப்படுகிறது. இதைத் தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கரும்பு குறித்து மத்திய அரசின் தற்போதைய நிலை என்ன என்பதையும், புதிதாக அறிவித்துள்ள சட்ட வரைவு ஷரத்துகளையும் விவசாயிகளுக்குத் தெரிவிக்க வேண்டும்' என்றார். மாவட்ட வருவாய் அலுவலர் வ. தட்சிணாமூர்த்தி, வேளாண் இணை இயக்குநர் ந. பொன்னுசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
குறிச்சொற்கள்: சம்பா நெல்லுக்கு ரூ. 1800 விலை நிர்ணயிக்க வேண்டும், செய்திகள்
பகிர்தல் மிக எளிமையானது,அழகானது