பி.ஏ.பி., வாய்க்காலில் விதிமுறை மீறல்: ஷட்டரை திறந்ததால் நீர் வெளியேறியது: 30 வீடுகளை தண்ணீர் சூழ்ந்தது
9:13 PM செய்திகள், பி.ஏ.பி., வாய்க்காலில் விதிமுறை மீறல்: ஷட்டரை திறந்ததால் நீர் வெளியேறியது: 0 கருத்துரைகள் Admin
உடுமலை: விதிமுறைகளை பின்பற்றாமல் பி.ஏ.பி., வாய்க்காலில் இருந்து ஷட்டரை பாசன சங்க நிர்வாகிகள் தனிச்சையாக திறந்து விட்டதால் 30க்கும் அதிகமான வீடுகள் தண்ணீரில் மூழ்கியதுடன், துங்காவி ரோட்டில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பி.ஏ.பி., நான்காம் மண்டல பாசனத்தில் உடுமலை அருகேயுள்ள கோட்டமங்கலம் பகுதியில் பல நூறு ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. உடுமலை கிளை கால்வாய் ஷட்டரிலிருந்து கோட்டமங்கலம் பகுதிக்கு 17 ம் எண் பகிர்மான வாய்க்கால் மூலம் தண்ணீர் கொண்டு வரப்படுகிறது. மழை மற்றும் அறுவடை தருணம் காரணமாக விவசாயிகள் கடந்த சில நாட்களாக தங்களுக்கு கிடைக்கும் தண்ணீரை பயன்படுத்தாமல் இருந்தனர். கசிவு நீர் கோட்டமங்கலம் குடியிருப்பு பகுதியை ஒட்டியுள்ள வழித்தடத்தில் சென்று வந்தது. இதனால், எஸ்.சி., காலனியில் இருந்த பல வீடுகள் சேறும், சகதியுமாக மாறியிருந்தது. நேற்று முன்தினம் இரவு கிளை கால்வாயில் இருந்து வரும் ஒட்டுமொத்த தண்ணீரையும் பாசன சங்க நிர்வாகிகள் குடியிருப்பு பகுதி அருகில் இருக்கும் தடுப்பணைக்கு திருப்பி விட்டனர். பல மடங்கு தண்ணீர் சிறிய தடுப்பணைக்கு சென்றதால் குறுகிய நேரத்தில் நிரம்பி எஸ்.சி., காலனியை ஒட்டியுள்ள சாக்கடையில் வெள்ளமாக சென்றது. பல்லடம் ரோட்டில் இருந்து துங்காவி ரோடு பிரியும் இடத்திலுள்ள பாலத்தில் தண்ணீர் செல்ல முடியாமல் தேங்கியது. இதில், பாலம் உடைந்து தண்ணீர் அனைத்தும் எஸ்.சி., காலனி வீடுகளுக்குள் புக துவங்கியது.
இது குறித்து குடியிருப்புவாசிகள் பாசன சங்க நிர்வாகிகளிடம் புகார் தெரிவித்தும் ஷட்டரை அடைக்க முன்வரவில்லை. இதனால், ஒட்டு மொத்த தண்ணீரும் காலனி குடியிருப்பு வீடுகளுக்குள் புகுந்தது. தாழ்வான பகுதியில் இருந்த 30க்கும் அதிகமான வீடுகளில் தண்ணீர் புகுந்ததால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். பாலம் உடைந்ததால் துங்காவி ரோட்டில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பல கன அடி தண்ணீர் தடுப்பணை வழியாக குடியிருப்பு பகுதிக்குள் சென்றது. தண்ணீரை தனிச்சையாக திருப்பி விட்ட விவசாயிகள் மற்றும் பாசன சங்க நிர்வாகிகள் சம்பவ இடத்திற்கு வரவில்லை. அதிருப்தியடைந்த அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் பாலத்தில் இருந்த அடைப்பை போராடி சீரமைத்தனர். தண்ணீரை பல்லடம் ரோட்டிலுள்ள குளத்திற்கு திருப்பி விட்டனர். இதனால், குடியிருப்பு பகுதியில் புகுந்த தண்ணீர் மெதுவாக வடிந்தது.
இது குறித்து கிராம மக்கள் கூறியதாவது: வாய்க்காலில் இருந்து எந்த அறிவிப்பும் இல்லாமல் பொறுப்பற்ற முறையில் தண்ணீரை திறந்து விட்டு பாசன சங்க பாதிப்பு ஏற்படுத்தியுள்ளனர். இது குறித்து மாவட்ட நிர்வாகம் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
கோட்டமங்கலம் ஊராட்சி நிர்வாகிகள் கூறியதாவது: யாரிடமும் தகவல் அளிக்காமல் ஷட்டரை தனிச்சையாக திறந்து விட்டதால் இந்த பிரச்னை ஏற்பட்டுள்ளது. தண்ணீர் தேவை நிறைவடைந்ததும் பாசன சங்க நிர்வாகிகள் உடுமலை கிளை கால்வாய் ஷட்டரை அடைத்திருக்க வேண்டும். இது குறித்து மாவட்ட நிர்வாகத்தில் புகார் அளிக்கப் பட்டுள்ளது, இவ்வாறு ஊராட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.
குறிச்சொற்கள்: செய்திகள், பி.ஏ.பி., வாய்க்காலில் விதிமுறை மீறல்: ஷட்டரை திறந்ததால் நீர் வெளியேறியது:
பகிர்தல் மிக எளிமையானது,அழகானது