இந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....

வீராணம் திறப்பு தாமதம்: விவசாயிகள் அதிருப்தி




வீராணம் ஏரியிலிருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால், ஏரிப்பாசனத்தை நம்பி 50 ஆயிரம் ஏக்கரில் சம்பா சாகுபடி
செய்ய காத்திருக்கும் விவசாயிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

வீராணம் ஏரிக்கு நீர்வரத்து குறைந்து வருவதால் ஏரியின் நீர்மட்டம் தற்போது நிரம்புவதற்கு வாய்ப்பில்லை என்றும் விவசாயிகள் கருதுகின்றனர்.

÷கடந்த ஆண்டு மேட்டூரிலிருந்து ஜூலை 20-ம் தேதியே நீர் திறக்கப்பட்டு ஆகஸ்ட் 3-ம் தேதி கீழணையிலிருந்து வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு நீர் திறக்கப்பட்டது. வீராணம் ஏரியில் நீர் நிரம்பிய பின்னர், ஆகஸ்ட் 26-ம் தேதி வேளாண் பாசனத்துக்கு தண்ணீர் விடப்பட்டது. தற்போது இந்த ஆண்டு கீழணையிலிருந்து ஆகஸ்ட் 11-ம் தேதிதான் நீர் திறந்துவிடப்பட்டது. அதுவும் குறைந்த அளவான 200 கனஅடி நீர்தான் வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு திறந்துவிடப்பட்டது. இதனால் வீராணம் ஏரி நிரம்பவில்லை.

÷தற்போது கீழணையிலிருந்து வடவாற்றில் ஆயிரம் கனஅடி நீர் திறந்துவிடப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் வடவாற்று பாசனத்துக்கு போக 250 கனஅடி நீர்தான் வீராணம் ஏரிக்கு வருகிறது. இதனால் ஏரியில் நீர் விரைந்து நிரம்பவில்லை. இருப்பினும் விவசாயிகளின் நலன் கருதி வருகிற செப்டம்பர் 5-ம் தேதி பாசனத்துக்கு தண்ணீர் திறந்துவிடுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

÷வீராணம் ஏரியிலிருந்து இந்த ஆண்டு ஆகஸ்ட் 30-ம் தேதியாகியும் வேளாண் பாசனத்துக்கு நீர் திறப்பதற்கான எவ்வித அறிகுறியும் இல்லை. தற்போது வீராணம் ஏரிக்கு கீழணையிலிருந்து குறைந்தளவு நீர் திறந்துவிடப்பட்டுள்ளதால் ஏரியின் நீர்மட்டம் திங்கள்கிழமை நிலவரப்படி 43.80 அடிதான் உள்ளது. ஏரியின் நீர்மட்டம் உயரவே இல்லை. ஏரியின் மொத்த கொள்ளளவு 47.50 அடியாகும். ஏரியிலிருந்து சென்னை குடிநீருக்கு திங்கள்கிழமை நிலவரப்படி விநாடிக்கு 73 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

÷இதுகுறித்து விவசாய சங்கத் தலைவர் கே.வி.இளங்கீரன் தெரிவித்தது: ஏரியில் நீர் நிரப்பப்படாததால் பாசனத்துக்கு தண்ணீர் திறப்பதில் தாமதம் ஏற்பட்டு ஏரிப் பாசனத்தை நம்பியுள்ள 50 ஆயிரம் ஏக்கர் நிலங்களில் சம்பா சாகுபடிப் பணிகளை மேற்கொள்ள முடியாமல் விவசாயிகள் விரக்தியில் உள்ளனர். மின்வெட்டு, வேளாண் இடு பொருள்களின் விலை உயர்வு, ஆள்பற்றாக்குறை, உரம் மற்றும் விதை பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை எதிர்கொள்ளும் விவசாயிகள் தற்போது தேவையான நேரத்தில் நீரின்றி விவசாய சாகுபடிப் பணிகளை மேற்கொள்ள முடியாமல் கடும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். எனவே கீழணையிலிருந்து ஏரிக்கு கூடுதலாக நீரை திறந்துவிட்டு வீராணம் ஏரியில் நிரப்பி பாசனத்துக்கு உடனடியாக திறந்துவிட பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

குறிச்சொற்கள்: ,

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..

Post a Comment