மூலிகை சாகுபடியை அதிகரிக்க தேனி மாவட்ட தோட்டக்கலைத்துறையினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.மருத்துவத்தில் மூலிகைகள் பயன்பாடு அதிகரித்து வருகிறது. ஆங்கில முறை வைத்தியம் உடனடி பலன் தரும் என்ற போதிலும், மூலிகை மருத்துவத்தில் நிரந்தரமாக தீர்வு கிடைப்பதுடன், பக்க விளைவுகள் இருக்காது என்பதால் மூலிகை பயன்பாடு அதிகரித்து வருகிறது. பெரும்பாலான மூலிகைகள் வனப்பகுதியில் இருந்து தான் பறிக்கப்படுகிறது.
இதனால் பல அரிய வகை மூலிகைகள் அழிந்து வருகிறது. எனவே மூலிகைகளை சாகுபடி செய்ய விவசாயிகளுக்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் பல உதவிகளை செய்து வருகிறது. பல மானிய திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. சாகுபடி செய்யும் மூலிகைகளை கொள்முதல் செய்யவும் அரசு நடவடிக்கைள் எடுத்துள்ளது. தோட்டக்கலைத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்,"" நாட்டில் மூலிகை தேவை 3.20 லட்சம் டன்னாக உள்ளது. உலக மார்க்கெட்டில் மூலிகை வர்த்தகம் 3 ஆயிரம் கோடிக்கு மேல் நடக்கிறது. இந்தியாவில் இருந்து ஆயிரத்து 250 கோடிக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. தமிழகத்தில் அதிக பரப்பில் மூலிகை சாகுபடி செய்ய திட்டமிடப்பட் டுள்ளது. தோட்டக்கலைத் துறை அதற்கான பணிகளில் இறங்கியுள்ளது,'' என்றார்.