செம்மை நெல் சாகுபடி தீவிரம்
11:13 PM செம்மை நெல் சாகுபடி தீவிரம், செய்திகள் 0 கருத்துரைகள் Admin
உத்தரமேரூர் வட்டாரத்தில் செம்மை நெல் சாகுபடி விவசாயிகளிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.பெரும்பாலான கிராம விவசாயிகள் ஏற்கெனவே நடைமுறையில் உள்ள நெல் சாகுபடியில் போதுமான லாபம் கிடைக்காத நிலையில் இருந்து வந்தனர். இந்நிலையில், வேளாண் துறை அறிமுகப்படுத்தியுள்ள செம்மை நெல் சாகுபடி முறை திட்டம் அம்மையப்பநல்லூர், பென்னல்லூர், மருத்தவான்பாடி, மணித்தோட்டம், மருதம், குண்ணவாக்கம், களியாம்பூண்டி, கிளக்காடி, பினாயூர், கரும்பாக்கம், சீத்தனஞ்சேரி, சாத்தனஞ்சேரி, குறுமஞ்சேரி கிராம விவசாயிகளிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதுகுறித்து 3 ஆண்டுகளாக செம்மை நெல் சாகுபடி செய்து வரும் அம்மையப்பநல்லூர் கிராம முன்னோடி விவசாயி சுப்பையா கூறியது:ஒரு ஏக்கர் நடவுக்கு 3 கிலோ விதை, ஒரு சென்ட் நாற்றங்கால் பரப்பு, குறைந்த தண்ணீர், 15 நாள் வயது நாற்று போதுமானது. நாற்றுகளை முக்கால் அடி இடைவெளியில், சதுர முறையில் நடவு செய்ய வேளாண் துறை வழங்கிய நடவு குறியிடும் மார்க்கர் கருவியால் நடவு செய்கிறேன். பிறகு குறைந்த அளவு தண்ணீர் நிறுத்தி காய்ச்சலும், பாய்ச்சலுமாக நீர் பாய்ச்சுகின்றேன்.நடவு செய்த 15-ம் நாள் வரிசைகளின் இடையே வேளாண் துறை வழங்கிய கோனோ வீடர் களை மிதி கருவியால் களைச் செடிகளை நிலத்திலேயே உழுது விடுகிறேன். இதே போல் 10 நாள் இடைவெளியில் 3 முறை செய்கிறேன். இதனால் மண் வளம் பெருகி புதிய வேர்கள் விட்டு 40 முதல் 45 தூர்களும், கதிர்களும் கிடைக்கின்றன.செம்மை நெல் சாகுபடியால் விதை, நாற்றங்கால் பராமரிப்பு, தண்ணீர் செலவு குறைகிறது. பூச்சிநோய் தாக்குதல், எலிவெட்டு குறைந்து பராமரிப்பு செலவு குறைகிறது.இதனால், சாதாரண முறை நெல் சாகுபடியை விட இம்முறையில் ஏக்கருக்கு 9 முதல் 10 மூட்டைகள் வரை கூடுதல் மகசூலும் ரூ.7 ஆயிரம் முதல் ரூ.9 ஆயிரம் வரை கூடுதல் வருவாயும் கிடைக்கிறது என்றார்.இதுபற்றி உத்தரமேரூர் உதவி வேளாண் இயக்குநர் ரங்கநாதன் கூறியது:உத்தரமேரூர் வட்டாரத்தில் ஒருங்கிணைந்த உணவு தானிய உற்பத்தி திட்டத்தில் 150 ஹெக்டேரிலும், ஆத்மா திட்டத்தில் 6 தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டத்தில் 234 ஹெக்டேரிலும் செம்மை நெல் சாகுபடி செயல் விளக்க தளைகள் விவசாயிகளின் வயல்களில் அமைக்கப்பட்டு அரசு மானியம் வழங்கப்படுகிறது.செயல்விளக்க தளைகளைப் பார்வையிடும் இதர விவசாயிகள் இத்தொழில்நுட்பத்தை கடைப்பிடித்து குறைந்த செலவில் அதிக மகசூலும, அதிக வருவாயும் பெறுகின்றனர் என்றார்.
குறிச்சொற்கள்: செம்மை நெல் சாகுபடி தீவிரம், செய்திகள்
பகிர்தல் மிக எளிமையானது,அழகானது