பொட்டாஷ் மூடையில் செந்நிறகட்டிகள் கலப்படமா? : நெல் சாகுபடி விவசாயிகள் வேதனை
2:21 AM செய்திகள், பொட்டாஷ் மூடையில் செந்நிறகட்டிகள் கலப்படமா? 0 கருத்துரைகள் Admin
அழகர்கோவில் : மதுரை மாவட்டத்தில் பொட்டாஷ் உரம் கலப்படத்துடன் வியாபாரம் செய்யப்படுவதாக நெல் சாகுபடி விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.மதுரை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தாமதமாக பெய்தாலும் பெரியாறு, வைகை அணைகள் நிரம்பியதால் ஆகஸ்டில் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. உடனடியாக விவசாயிகள், சாகுபடி பணிகளை துவக்கினர். நடவின்போது அடியுரமாக டி.ஏ.பி., யூரியா இட்டனர். நடவு முடிந்த முதல் 15 நாளில் களை எடுத்து மேலுரம் இடவேண்டும். மேலுரம் மற்றும் மணிச்சத்து தேவைக்காக ஏக்கருக்கு தலா அரை மூடை பொட்டாஷ், யூரியா கலந்து இடவேண்டும். அடுத்த 15 நாட்களுக்கும் இதுபோல் உரமிட வேண்டும். விவசாயிகள் தேவைக்கேற்ப வெளி மார்க்கெட்டிலும் உரம் வாங்குகின்றனர். பொட்டாஷ் 50 கிலோ மூடை 225 ரூபாய்க்கும், யூரியா 50 கிலோ மூடை 250 ரூபாய்க்கும் வாங்குகின்றனர். உரத்தின் தேவை அதிகரித்து உள்ளதால் விற்பனையாளர்கள் உரத்தில் கலப்படம் செய்து விற்பனை செய்வதாக குற்றச் சாட்டு எழுந்தது. உரத்தின் நிறத்தை ஒத்த வேறு பொருளை மூடைக்கு இரண்டு அல்லது மூன்று கிலோ வீதம் கலப்படம் செய்கின்றனர். விவசாயிகள் இதை கவனிக்காமல் பயிர்களுக்கு இட்டால், பயிர்களின் வளர்ச்சி பாதித்து மகசூல் பாதிக்கும் என்கின்றனர்.திருவிழான்பட்டியை சேர்ந்த விவசாயி ஆழ்வார் கூறியதாவது: மாட்டுத்தாவணியில் உள்ள உரக் கடையில் ஐந்து மூடை பொட்டாஷ் வாங்கினேன். வயலில் இடுவதற்காக மூடையை பிரித்தபோது அதில் அதே நிறமுடைய கட்டிகள் நிறைய இருந்தன. சந்தேகமடைந்து மீதமுள்ள மூடைகளையும் பிரித்தேன். அவற்றிலும் கட்டிகள் இருந்தன.
பொதுவாக பொட்டாஷ் உரத்தில் கட்டிகள் இருப்பதில்லை. அக்கட்டியை உடைத்தபோது அது வெறும் மண் கட்டியாக இருந்தது. இதுகுறித்து கடை உரிமையாளரிடம் கேட்டேன். பொட்டாஷ் உரத்தை அரசுதான் தருகிறது. எங்களுக்கு எதுவும் தெரியாது என்கிறார். ஒவ்வொரு மூடைக்கும் தலா மூன்று கிலோ மண் கட்டிகள் உள்ளன. இதனால் மூடைக்கு 15 ரூபாய் வரை இழப்பு ஏற்படுகிறது,'" என்றார்.விவசாய உதவி இயக்குனர் (தரக்கட்டுப்பாடு) ராதாகிருஷ்ணன் கூறியதாவது:பொட்டாஷ் உரத்தில் கலப்படம் வர வாய்ப்பே இல்லை. போக்குவரத்து மற்றும் இருப்பு வைத்த இடங்களில் ஏதாவது லீக்கேஜ் இருந்து கட்டி ஏற்பட்டு இருக்கலாம். இப்பொட்டாஷ் உரம் இயந்திர பேக்கிங்காக வருகிறது. இதனால் கலப்படத்திற்கு வாய்ப்பே இல்லை. இக்கட்டிகளால் பயிர்களுக்கு பாதிப்பும் வராது. தற்போது மேலுரத்தின் தேவையும் குறையும் நிலையில், ஒரு ஏக்கருக்கு இந்த உரம் 8 முதல் 10 கிலோதான் தேவைப்படும். உரத்தில் கட்டி இருப்பது தெரிந்தால் அதை உடனே வியாபாரியிடம் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம். வியாபாரிகளே தயாரிக்கும் கலப்பு உரத்தில் வேண்டுமானால் கலப்படம் ஏற்பட வாய்ப்புள்ளது, என்றார்.
குறிச்சொற்கள்: செய்திகள், பொட்டாஷ் மூடையில் செந்நிறகட்டிகள் கலப்படமா?
பகிர்தல் மிக எளிமையானது,அழகானது