இந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....

சாகுபடிக்கு நீர் திறப்பதா; சீரமைப்புக்கு நீர் அடைப்பதா?

ஈரோடு மாவட்டம் காலிங்கராயன் கால்வாயில் மார்ச் இறுதியில் 11.64 கோடி ரூபாய் செலவில் சீரமைப்பு பணி துவங்குவதால், இரண்டாம் போக நெல் சாகுபடியை பிந்தி துவக்கியுள்ள விவசாயிகளுக்கு அறுவடை வரை தண்ணீர் கிடைப்பதில் சிக்கல் எழுந்துள்ளது. காலிங்கராயன் கால்வாய் 766 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்டது. காலிங்கராயன் பாளையத்திலிருந்து, ஆவுடையார் பாளையம் வரை 91 கி.மீ., நீளம் உள்ள இக்கால்வாய் மூலம் ஆண்டு தோறும் 17 ஆயிரம் ஏக்கர் விளைநிலம் பாசன வசதி பெறுகிறது. இந்த பாசனத்தில் அதிகளவு நெல், கரும்பு, வாழை, மஞ்சள் பயிரிடப்படுகிறது. கால்வாயில் இருபுறமும் நான்கு சக்கர வாகனம் சென்று வரும் நிலையில் சாலைக்காக பாதையுடன் கால்வாய் அமைக்கப்பட்டது. ஆனால், கால்வாயின் இருபுறமும் உள்ள பாதை பெரும்பாலும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.
ஒன்றரை ஆண்டுக்கு முன் கால்வாயில் இடதுபுறம் உள்ள கரையை சர்வே செய்து, பொதுப்பணித்துறை சார்பில் எல்லைக்கல் நடப்பட்டது. அதன்படி பெரும்பாலான விவசாயிகள் கரையை ஆக்கிரமித்து அதில் சாகுபடி பணிகளை மேற்கொள்வது தெரிந்தது. பிராமண பெரிய அக்ரஹாரம் பகுதியிலிருந்து, ஈரோடு வைராபாளையம், கருங்கல்பாளையம் பகுதிகளில், கால்வாயின் வலது புறத்தில் நேரடியாகவே தெருக்களில் உள்ள கழிவுநீர் கலக்கிறது. பிளீச்சிங் பட்டறைகள் கழிவுநீர் செல்லும் குழாய்களை நேரடியாகவே கால்வாய்க்குள் அமைத்துள்ளன. இதனால், கால்வாயில் பெரும்பாலான நாட்களில் தண்ணீர் சாக்கடை போல கருப்பு நிறத்தில் தான் செல்கிறது. இதனால், விளைநிலங்கள் பாதிக்கப்பட்டு, இந்த கால்வாய் பகுதியில் உற்பத்தியாகும் மஞ்சள், கரும்பு, நெற்பயிரில் ரசாயன தாக்கம் உள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால், காலிங்கராயன் பாசனத்தில் உற்பத்தியாகும் மஞ்சளுக்கு பிற பகுதி மஞ்சளை விட குறைவான விலை நிர்ணயிக்கப்படுகிறது.



சென்றாண்டு ஈரோடு வந்த தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகன், கால்வாயை பார்வையிட்டார். பின்னர் அவர், "விவசாயிகள் கூறியதைவிட கழிவு அதிகம் கலக்கிறது. கழிவு கலப்பதை தடுக்க கான்கிரீட் தடுப்பு சுவரும், வாகனங்கள் சென்று பாதையும் அமைக்கும் பணிக்கு விரைவில் நிதி ஒதுக்கப்பட்டு துவங்கப்படும்' என கூறினார்.




அதன்படி, 11.64 கோடி ரூபாய் முதல் கட்டமாக ஒதுக்கப்பட்டது. இத்திட்டத்தின் படி, கால்வாயில் உள்ள 382 மதகுகள் சீரமைக்கப்படுவதுடன், ஏழு பாலங்கள், ஆர்.என்.புதூரில் இருந்து பி.பி., அக்ரஹாரம் வரை ஆறு மைல் தூரத்துக்கு வலது கரையில் கான்கிரீட் தடுப்பு சுவர், 56 மைல் தூரமும் படித்துறை மற்றும் 8,000 சதுர கி.மீ., தூரம் பாதை சீரமைக்க திட்டமிட்டு சென்றாண்டு மார்ச் மாதம் டெண்டர் விடப்பட்டது.



சென்றாண்டு ஒரே நிறுவனம்தான் டெண்டருக்கு விண்ணப்பித்தது. அந்த நிறுவனமும் கூடுதலாக தொகை நிர்ணயிக்க கேட்டதால், டெண்டர் விடாமல் பணி நிறுத்தப்பட்டது. ஆனால், அரசு கூறியபடி சென்றாண்டு, காலிங்கராயனில் மார்ச் மாதமே தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது. ஏற்கனவே, சாகுபடி பணிகளை முடித்த விவசாயிகள் சென்றாண்டு போதிய விளைச்சல் இல்லாமலேயே அறுவடையை செய்ததால், பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது. நடப்பாண்டில், சீரமைப்பு பணிக்காக மார்ச் 15ம் தேதி முதல் ஜூன் 15ம் தேதி வரை கால்வாயில் நீர் திறப்பு நிறுத்தப்படுகிறது. தற்போது இப்பணிகளை மேற்கொள்ள மூன்று நிறுவனங்கள் டெண்டர் கோரியுள்ளன. பொதுப்பணித்துறை நீர்ப்பாசன பிரிவு அதிகாரிகள், "நடப்பாண்டில் கண்டிப்பாக திட்டமிட்டபடி பணிகள் முடிக்கப்படும்' என தெரிவித்துள்ளனர்.அதே வேளை, காலிங்கராயன் கால்வாய் பாசனத்தில் இரண்டாம் போகம் நெல் நடவை பிந்தி துவக்கியுள்ள விவசாயிகளுக்கு, ஏப்ரல் முதல் வாரத்துக்கு பின்னர்தான் அறுவடை துவங்கும். மார்ச் மாதம் தண்ணீர் நிறுத்தப்பட்டால், நெல் அறுவடைக்கு தயாராகும் நிலையில் தண்ணீரின்றி நெற்பயிர் பாதிக்கப்படும். எனினும், கடைசி வேளையில் நீர் திறப்பு நீட்டிக்கப்படும் என்று விவசாயிகள் நம்புகின்றனர். அவ்வாறு நீர் திறப்பு நீட்டிக்கப்பட்டால் காலிங்கராயன் சீரமைப்பு பணியும் தாமதாகும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. சாகுபடிக்காக தண்ணீர் திறப்பை நீட்டிப்பதா; அல்லது மார்ச் மாதம் தண்ணீரை அடைத்து குறிப்பிட்டபடி கால்வாய் சீரமைப்பு பணியை துவக்குவதா என்ற தர்மசங்கடமான நிலை அதிகாரிகளுக்கு ஏற்பட்டுள்ளது.

குறிச்சொற்கள்: ,

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..

Post a Comment