ஈரோடு: நாட்டுக்கோழி வளர்ப்பு குறித்த பயிற்சி வகுப்பு
2:08 AM ஈரோடு: நாட்டுக்கோழி வளர்ப்பு குறித்த பயிற்சி வகுப்பு, செய்திகள் 0 கருத்துரைகள் Admin
ஈரோடு கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம் சார்பில் நாட்டுக்கோழி வளர்ப்பு குறித்த பயிற்சி வகுப்பு ஈரோட்டில் நடந்தது. பயிற்சியை பேராசிரியர் மற்றும் தலைவர் விசுவநாதன் துவக்கி வைத்தார்.
உதவி பேராசிரியை யசோதை பயனாளிகளுக்கு பயிற்சி அளித்து பேசியதாவது: நாட்டுக்கோழி வளர்ப்புக்கான பண்ணையை மேட்டுப்பாங்கான இடங்களில் அமைக்க வேண்டும். பண்ணையின் சுற்றுப்புறத்தில் எக்காரணத்தை கொண்டும் நீர் தேங்கக்கூடாது. பண்ணைக்கு கிடைக்க கூடிய குடிநீர் மென்மையானதாகவும், சுகாதாரமானதாகவும் இருத்தல் வேண்டும். குடிநீரை அருகிலுள்ள பரிசோதனை கூடத்தில் கொடுத்து ஆய்வு செய்து அறிய வேண்டும். குடிநீரில் தேவையில்லாத உப்பின் அளவு அதிகம் இருத்தல் கூடாது. பண்ணை அமையுமிடம் ஆரோக்கியமான சுற்றுப்புற சூழ்நிலையும், நல்ல வசதி வாய்ப்புகளும் உள்ளவாறு பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம்.
கோழிப்பண்ணை அமைக்கும் இடம் போதுமான காற்றோட்ட வசதி இருத்தல் அவசியம். ஆகவே பண்ணை அருகே நிழல்தரும் மரங்களை நடவேண்டும். நிழல் தரும் மரங்கள் கோழிக்கு பயனுள்ள வகையில் தீவனம் தரும் மரமாக இருத்தல் அவசியம். குறிப்பாக கீரை வகை மரங்களை நட்டால் இரும்பு சத்து, புரதச்சத்து ஆகியவை கோழிக்கு கிடைக்கும். நாட்டுக்கோழி குப்பையை கிளறி தனக்கு தேவையான உணவுப்பொருட்களை தன் அலகால் கொத்தி உண்ணும்.
கோழிப்பண்ணைக்கு மேற்பரப்பில் கம்பி வேலி இருந்தால் கழுகு வகை பறவைகளில் இருந்து பாதுகாக்க முடியும். ஒரு கோழிக்கு ஒரு "வாட்ஸ்' பல்ப் வீதம் பயன்படுத்தலாம். கோழிக்கு குளிர்காலத்தில் வெப்பம் அதிகம் தேவைப்படும், வெயில் காலத்தில் குறைவாக இருந்தால் போதுமானது. குளிர்காலத்தில் குளிரை கட்டுப்படுத்த தார்பாய், சாக்குகளை பயன்படுத்தலாம். பண்ணையை சுற்றிலும் பிளீச்சிங் பவுடர் மற்றும் சுண்ணாம்பு தெளிப்பதன் மூலம் கிருமி நாசிகளை அளிக்கலாம். இவ்வாறு அவர் பேசினார்.
பயிற்சி வகுப்பில் சின்னயம்பாளையம், மூலப்பாளையம், திருப்பூர், கருங்கல்பாளையம், அரச்சலூர், அவல்பூந்துறை, பள்ளிபாளையம் பகுதியை சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டனர்.
குறிச்சொற்கள்: ஈரோடு: நாட்டுக்கோழி வளர்ப்பு குறித்த பயிற்சி வகுப்பு, செய்திகள்
பகிர்தல் மிக எளிமையானது,அழகானது