வறட்சியிலிருந்து தப்பிக்க மக்காச்சோளம் சாகுபடியில் ஆர்வம்
8:34 PM செய்திகள், வறட்சியிலிருந்து தப்பிக்க மக்காச்சோளம் சாகுபடியில் ஆர்வம் 0 கருத்துரைகள் Admin
வறட்சியிலிருந்து தப்பிக்க ஈரோடு மாவட்டம் அந்தியூர் பகுதி மானாவரி விவசாயிகள் பெரும்பாலானோர் மக்காச்சோளம் சாகுபடியில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.அந்தியூர் சுற்று வட்டார கிராமங்களான மைக்கேல்பாளையம், நஞ்சமடைகுட்டை, மலைகருப்புச்சாமி கோவில், செல்லம்பாளையம், கோவிலூர், கும்பரவாணி, அத்தாணி, வெள்ளித்திருப்பூர் ஆகிய இடங்களில் உள்ள பெரும்பாலான விவசாயிகள் மக்காச்சோளம் பயிரிட ஆர்வம் காட்டி வருகின்றனர்.
கிணற்றுப் பாசன விவசாயிகள் கரும்பு, வாழை, பருத்தி, மஞ்சள் போன்ற பயிர்களை சாகுபடி செய்து வந்தனர். கரும்புக்கு சரியான விலை கிடைக்காததால், விவசாயிகள் கரும்பு பயிரிடுவதை விரும்புவதில்லை. நேரம் வீணாதல், கூலியாட்கள் பிரச்னை, பண விரயம் என பெரும் சிரமத்துக்குள்ளாகி, கரும்பு விவசாயிகள் நஷ்டத்துக்கு தள்ளப்படுகின்றனர். மூன்று மாதத்துக்கு முன், தங்கத்தின் விலையை காட்டிலும், மஞ்சள் விலை 13 ஆயிரத்தை தாண்டி சாதனை படைத்தது. ஈரோடு மாவட்ட விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சியில் திளைத்தனர். தற்போதைய சூழ்நிலையில், மஞ்சளின் விலை 9,000 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அந்தியூர் பகுதியில் மஞ்சள் அறுவடை தற்போது நடந்து வருகிறது. அந்தியூர், வெள்ளித்திருப்பூர், ஜரத்தல், சென்னம்பட்டி, அத்தாணி போன்ற பகுதிகளில் வாழை பயிரிடப்பட்டு, பாதுகாப்போடு வளர்க்கப்பட்டு வருகிறது.
மற்ற பயிர்களை விட எளிதான சாகுபடி யுக்தி கொண்ட மக்காச்சோளம் பயிரிடுவதில் பெரும்பாலான விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். கோடை, குளிர், மழை என அனைத்து காலத்திலும் மக்காச்சோளம் விதைக்கப்படுகிறது. 120 நாட்களில் அறுவடைக்கு தயாராகும் பயிருக்கு ஐந்து முறை தண்ணீர் பாய்ச்சினால் போதுமானது.
நடப்பாண்டு பருவ மழை பொய்த்து போனதால், ஏரிகளிலும், கிணற்றிலும் போதுமான அளவுக்கு தண்ணீர் இல்லை.இந்த நிலை நீடிக்கும் வேளையில், இன்னும் சில மாதங்களில் கிணற்று நீர் வற்றி விடும் அபாயமும் ஏற்படலாம்.
இதை கருத்தில் கொண்ட கிணற்று விவசாயிகள் மக்காச்சோளம் பயிரிடுவதற்கு தயாராகி வருகின்றனர். நல்ல பராமரிப்பின் மூலம் இவற்றின் மகசூலை அதிகளவுக்கு பெருக்க முடியும் என விவசாயிகள் நம்புகின்றனர்.இப்பகுதியில் அதிகளவில் "பயனியர் 07' என்ற ரக மக்காச்சோள விதையை பயிரிடுகின்றனர். ஒரு ஏக்கர் பரப்பளவில் பயிரிட ஐந்திலிருந்து ஆறு கிலோ விதை தேவை. இரண்டு முறை களை எடுக்கப்பட்டு, அடி உரம் இடப்படுகிறது. நல்ல முறையில் விளையும் மக்காச்சோளம் மூட்டை ஒன்றுக்கு 900 ரூபாய் வரை விலை போகிறது. இரண்டாம் தர மக்காச்சோளம் மூட்டை 800 முதல் 850 ரூபாய் வரை விற்கப்படுகிறது. ரு ஏக்கரில் 25 லிருந்து 30 மூட்டை மக்காச்சோளம் கிடைக்கலாம். பாதி விளைந்த நிலையில், வேக வைத்து சாப்பிடுவற்கு அறுவடை செய்யப்படுகிறது.
ஒரு சோளக்கதிரின் விலை இரண்டு ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இது ஆடி பண்டிகை காலங்களில் அதிகளவில் அந்தியூர் குருநாத ஸ்வாமி கோவிலில் குவிந்திருக்கும். ஒரு கட்டத்தில் மானாவரி விவசாயிகள் மட்டும் பயிரிட்ட மக்காச்சோள பயிரை, வறட்சியிலிருந்து தப்பிக்க அனைத்து விவசாயிகளும் பெரும் ஆர்வத்துடன் பயிரிட்டு வருகின்றனர்.
குறிச்சொற்கள்: செய்திகள், வறட்சியிலிருந்து தப்பிக்க மக்காச்சோளம் சாகுபடியில் ஆர்வம்
பகிர்தல் மிக எளிமையானது,அழகானது