இந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....

விளைநிலத்தை சுற்றிலும் 'மின்மினி' விளக்கு : விவசாயிகள் மகிழ்ச்சி; யானைகளுக்கு கிலி

மேட்டுப்பாளையம் : யானைகளை விரட்ட விளை நிலங்களை சுற்றி விவசாயிகள் வண்ண விளக்குகளை எரிய விட்டுள்ளனர். தீப்பந்தமோ என பயந்து, யானைகள் தூரத்திலேயே திரும்ப சென்று விடுவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மேட்டுப்பாளையம், பெரியநாயக்கன்பாளையம், தொண்டாமுத்தூர் என மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டியுள்ள விவசாயிகள் யானைக்கு பயந்து, விவசாயம் செய்து வருகின்றனர்.
மேலும், காட்டுப்பன்றிகள், மான்களும் வேளாண்மை பயிர்களை அழித்து வருகின்றன. பகலில் வனப்பகுதியில் இருக்கும் இந்த விலங்குகள் இரவில் கூட்டம் கூட்டமாக விவசாய விளை நிலங்களில் புகுந்து பயிர்களை சேதம் செய்து வருகின்றன. ஒவ்வொரு விவசாயியும் பல ஆயிரம் ரூபாய் நஷ்டம் அடைந் துள்ளனர்.
யானையை விரட்ட, பல்வேறு யுக்திகளை விவசாயிகள் கையாண்டனர். பட்டாசு வெடித்தனர். நாளாக, நாளாக பழகிப்போன யானைகள், மீண்டும் விளை நிலங்களுக்குள் புகுந்தன. காவல் இருந்த விவசாயிகளையும் விரட்டியடித்தது. வனவிலங்குகள் விளை நிலங்களுக்கு வராமல் தடுக்க, வனத்துறையினரும் மின்வேலியை அமைத்தனர். தேடல் விளக்கு (சர்ச் லைட்) அடித்து, விரட்டி வந்தனர்.
யானைகளோ மின் வேலியையும் மிதித்து சேதம் செய்து விளை நிலங்களில் புகுந்து பயிர்களை சாப்பிட்டு அழித்து வருகிறது. விவசாயிகள் வனப்பகுதி ஓரத்தில்"அகழி' அமைத்தனர். யானைகள் அவற்றை இடித்து சமதளமாக்கி விளை நிலங்களுக்கு வந்து செல்கின்றன. வனவிலங்குகள் வருவதை கட்டுப்படுத்த பல்வேறு தடுப்புகளை வனத் துறை நிர்வாகமும், விவசாயிகளும் அமைத்தனர். அனைத்து யுக்திகளையும் யானைகள் முறியடித்தன. தைரியமாக விளை நிலங்களில் கால் பதித்தன.
இவற்றை விரட்ட சிறுமுகை பகுதி விவசாயிகள் புதிய யுக்தியை கையாண்டுள்ளனர். வெற்றியும் கிடைத்துள்ளது.
சிறுமுகை கூத்தாமண்டிபிரிவு, மூலையூர் பகுதி விவசாயிகள் விளை நிலங்களை சுற்றி "கலர் லைட்' போட்டனர். இரவு முழுவதும் கலர் லைட் "அணைந்து அணைந்து' எரிவதால், யானைகள் விளை நிலங்களுக்கு வராமல் வந்த வழியில் திரும்பி செல்கின்றன.
விவசாயி லெனின் கூறியதாவது: விவசாய பயிர்களை யானைகள், காட்டுப்பன்றிகள் அழித்து சேதம் செய்து வருகின்றன. ஒவ்வொரு விவசாயிகளுக்கும் ஆண்டிற்கு ஆயிரக்கணக்கான ரூபாய் நஷ்டம் ஏற்பட்டது. இந்நிலையில் ஒரு கி.மீ., தூரத்திற்கு பேட்டரியில் எரியும் சிறிய "கலர் லைட்' மாதிரிக்கு போட்டோம். 750 ரூபாய் செலவானது. இரவில் வனப்பகுதியில் இருந்து வேகமாக வரும் யானைகள், காட்டுப்பன்றிகள் அணைந்து அணைந்து எரியும் கலர் லைட்டை பார்த்து திரும்பி சென்று விடுகின்றன. இது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. மற்ற விவசாயிகளும் விளை நிலங்களை சுற்றியும் வண்ண விளக்கு போடுகின்றனர். ஒரு பேட்டரியை "சார்ஜ்' செய்தால் இரண்டு நாட்களுக்கு பயன்படுத்தலாம். வனவிலங்குகளிடம் இருந்து பயிர்கள் பாதுகாக்கப்படுகின்றன. இவ்வாறு விவசாயி லெனின் கூறினார்.
விவசாயிகளின் புதிய யுக்தி எவ் வளவு நாள் கைகொடுக்கும் என்பதை காத்திருந்து பார்ப்போம்.

குறிச்சொற்கள்: ,

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..

Post a Comment