இந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....

மரவள்ளி பாதிப்பு : பாசன நீரில் சாயக்கழிவு கலப்பு வே.பாளையம் விவசாயிகள் தவிப்பு

வேலாயுதம்பாளையம்: பாசன நீரில் சாயக்கழிவு நீர் கலந்ததால் வேலாயுதம்பாளையம் பகுதியில் மரவள்ளிக்கிழங்கு சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது. தொடரும் கழிவு நீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.


கரூர் மாவட்டத்தில் வேலாயுதம்பாளையம், ஒலப்பாளையம், ஒரம்புபாளையம், திருகாடுதுறை, நடையனூர், சேமங்கி, நொய்யல், புன்னம்சத்திரம், தளவாபாளையம், ஆவரங்காட்டு புதூர், ஆத்தூர் செல்லும் சுற்றுப்பகுதிகளில் ஆயிரம் ஏக்கருக்கு மேல் மரவள்ளிக்கிழங்கு சாகுபடி செய்யப்படுகிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும் கிழங்கு ரகமான முன்வாடி, வெள்ளைக்கிழங்கு ஆகியவற்றில் மாவு சத்து அதிகம் உள்ளதால், நாமக்கல், சேலம் மா வட்டம் ராசிபுரம், நாமகிரிப்பேட்டை, ஆத்தூர், செல்லப்பன்பட்டி, புதன்சந்தை ஜவ்வரிசி மில்லுக்கு அனுப்பப்படுகிறது.

கடந்த மாதம் நொய்யல் ஆற்று நீர்பிடிப்பு பகுதிகளில் தீவிரமடைந்த வடகிழக்கு பருவமழையைத் தொடர்ந்து ஒரத்துப்பாளையம் அணையில் இருந்து திறக்கப்பட்ட சாயக்கழிவு நீர் இடைவிடாமல் காவிரி ஆற்றில் நுரைத்துக்கொண்டு கலந்தது. காவிரியும், நொய்யல் ஆறும் சங்கமிக்கும் இடத்தில் இருந்து ஆற்றில் மூன்று கி.மீ., தொலைவில் சிறுவிவசாயிகளின் நதி நீரேற்று பாசன நீர் ஊர்ந்தும் மையம், வேட்டமங்கலம், புங்கோடை, காளிபாளையம் பகுதியில் உள்ள 200 ஏக்கருக்கு மேற்பட்ட விவசாய நிலம் பாசன வசதி பெறும் வகையில் அமைந்துள்ளது. தற்போது இங்கு அடிக்கடி சாயக்கழிவு நீர் செல்வதையடுத்து அங்கிருந்து கழிவு நீர் கலக்காத தண்ணீர் பாசனம் செய்வதில் நடைமுறை சிக்கல் ஏற்பட்டுள்ளது.


மேலும், சம்பந்தப்பட்ட வேட்டமங்கலம், புங்கோடை திட்ட அலுவலகத்தில் உள்ள மோட்டாரானது, கொடுமுடி ஸ்டேட் பேங்க் கிளை மற்றும் திருகாடுதுறை ஐ.ஓ.பி., கிளை மூலம் பெறப்பட்ட கடன் உதவியில் அமைக்கப்பட்டவை. இவை தொடர்ந்து சாயக்கழிவு மற்றும் அதிக உப்பு சதவீதம் உள்ள தண்ணீரை பாய்ச்சுவதால் அடிக்கடி மோட்டார் பழுது ஏற்பட்டு, துருப்பிடிக்கிறது.

வங்கி கடன் செலுத்தவே தடுமாறும் நிலையில், மோட்டார் பழுது நீக்கவும் செலவிட முடியாமல் விவசாயிகள் பொருளாதார ரீதியாக தவிக்கின்றனர். நொய்யல் ஆற்று சாயக்கழிவு கலந்த தண்ணீர் பாசனம் காரணமாக நொய்யல் நந்தமேடு, புங்கோடை, வேட்டமங்கலம் உள்ளிட்ட சுற்றுப்பகுதிகளில் மானாவாரி பயிரான மரவள்ளிக்கிழங்கு தற்போது நல்ல விலைக்கு விற்கவேண்டிய நிலையில், சரியான தண்ணீர் கிடைக்காமல் கருகி சருகாகும் நிலை ஏற்பட்டுள்ளது. பகுதி விவசாயிகள் கூறியதாவது: கடந்த ஆண்டு மரவள்ளிக்கிழங்கு அதிக பரப்பில் விவசாயிகள் சாகுபடி செய்திருந்தனர். உற்பத்தி இருமடங்கு அதிகரித்ததால் கிழங்கு விலைவீழ்ச்சியை சந்தித்து விவசாயிகளுக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியது. தற்போது மாநிலம் முழுவதும் உற்பத்தி குறைவால், மரவள்ளிக்கிழங்கின் விலை நல்ல லாபம் தரும் வகையில் உள்ளது. மரவள்ளியில் தயாரிக்கப்படும் ஜவ்வரிசி, மைதா மாவு, அழகு சாதனப் பொருள் மற்றும் பலவகை உணவு பொருள் தயாரிப்பும் அதிரித்து வரும் நிலையில் மரவள்ளிக்கு நல்ல வரவேற்பு உள்ளது. இந்நிலையில், சாயக்கழிவு நீரால் ஏற்பட்டுள்ள பாதிப்பு காரணமாக வேலாயுதம்பாளையம் பகுதியில் பல ஏக்கர் பரப்பளவில் மரவள்ளிக்கிழங்கு கருகி சருகாவதால் நாங்கள் பாதிக்கப்பட்டுள்ளோம். பாசன நீரில் சாயக்கழிவு சேர்வதை தடுக்க அரசு நிரந்தர தீர்வு காண வேண்டும். இவ்வாறு விவசாயிகள் கூறினர்.

குறிச்சொற்கள்: ,

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..

Post a Comment