இந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....

மாவுப்பூச்சி தாக்குதலால் மரவள்ளி விளைச்சல் பாதிப்பு: ஸ்டார்ச் தேவை அதிகரிப்பால் விலை உயர்வு

ஈரோடு மாவட்டத்தில் மாவுப்பூச்சி தாக்குதலால் மரவள்ளிக் கிழங்கு உற்பத்தி கடுமையாக பாதித்துள்ளது. ஜவ்வரிசி மற்றும் ஸ்டார்ச் தேவை அதிகரிப்பால், மஞ்சளைப் போல் நடப்பாண்டு மரவள்ளிக் கிழங்கு விலையும் கடுமையாக உயர்ந்து வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் ஆண்டுதோறும் 8,000 ஹெக்டேரில் மரவள்ளிக் கிழங்கு பயிராகிறது. நடப்பாண்டு தென்மேற்கு பருவமழை பொய்த்த போதிலும், வடகிழக்கு பருவமழையை நம்பி, ஈரோடு மாவட்ட விவசாயிகள் மரவள்ளி பயிரிட்டனர். கோபி, நம்பியூர் மற்றும் டி.என்.பாளையம் பகுதியில் மட்டும் 1,500 ஹெக்டேரில் நடப்பாண்டு மரவள்ளி பயிரிடப்பட்டது. ஆனால், விவசாயிகள் எதிர்பார்த்த, வடகிழக்கு பருவமழையும் தாமதமானது.

எதிர்பார்த்த காலத்தில் மழை பெய்யாத போதிலும், விவசாயிகளுக்கு அடுத்த இடி, "மாவுப் பூச்சி' தாக்குதல் மூலமாக வந்தது. வழக்கமாக ஏக்கருக்கு 12 முதல் 15 டன் வரை மரவள்ளி விளைச்சல் கிடைக்கும். மாவுப் பூச்சி தாக்குதலால் வெறும் ஐந்து டன்னாக உற்பத்தி குறைந்தது. தமிழகத்தில் மாவுப்பூச்சி தாக்குதல் கோவை மாவட்டம் அன்னூர் பகுதியில் முதன் முறையாக கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து ஈரோடு மாவட்டத்தில் சத்தி, டி.என்.பாளையம், நம்பியூர் மற்றும் கோபி பகுதியில் பரவியது. குறிப்பாக மரவள்ளி, பப்பாளி மற்றும் மல்பெரி இலைகளில் மாவுப் பூச்சி தாக்குதல் அதிகளவில் இருந்தது. ஏற்கனவே பருவமழை தவறியதால் போதிய தண்ணீர் இல்லாமல் இருந்த மரவள்ளி பயிர், மாவுப்பூச்சி தாக்குதலால் மேலும் நிலை குலைந்தது. ஒரு மாதமாக அறுவடையாகி வரும் மரவள்ளிக் கிழங்கில் மாவுச்சத்து 28 சதவீதத்துக்கு பதிலாக வெறும் 18 சதவீதமே உள்ளது. மாவுச் சத்து குறைந்த மரவள்ளிக்கிழங்கு மூலம் தரமான ஸ்டார்ச் தயாரிக்க முடியாது. இதனால், " சேக்கோ' ஆலைகள் விவசாயிகளிடம் குறைந்த விலைக்கே மரவள்ளிக் கிழங்கை கொள்முதல் செய்தன.

மரவள்ளிக் கிழங்கு மூலம் தயாரிக்கப்படும் பொருட்களான ஜவ்வரிசி மற்றும் ஸ்டார்ச் தேவை தற்போது அதிகரித்துள்ளது. இதனால், 28 சதவீதம் மாவுச்சத்துள்ள மரவள்ளிக் கிழங்குக்கான தேவை அதிகரித்துள்ளது.
நவம்பர் மாதம் தரமான மரவள்ளிக் கிழங்குக்கு டன் 3,500 ரூபாய் விலை கிடைத்தது. டிசம்பருக்கு பின் விலை படிப்படியாக உயர்ந்து 5,000 ரூபாயை எட்டியுள்ளது. நவம்பர் வரை ஈரோட்டில் மஞ்சள் விலை தங்கத்துக்கு போட்டியாக உயர்ந்தது. இதுபோல், மரவள்ளிக் கிழங்கின் விலை தற்போது படுவேகமாக உயர்ந்து வருகிறது. ஆனால், தரமான கிழங்கு இல்லாமல் விவசாயிகள் தவிக்கின்றனர். மாவட்டத்தில் மாவுப்பூச்சி தாக்குதல் தென்பட்டவுடன், பட்டு வளர்ச்சி துறை மூலம் மல்பெரி விவசாயிகளுக்கு இலவச பூச்சிக் கொல்லி மருந்து வழங்கப்பட்டது. மல்பெரி செடிகள் ஓரளவு தப்பின. ஆனால், மரவள்ளிக் கிழங்கில் ஏற்பட்ட பூச்சி பாதிப்பை கட்டுப்படுத்த வேளாண் துறை அதிகாரிகள் தவறி விட்டனர். இதனால், மாவட்டத்தில் மரவள்ளிக் கிழங்கு உற்பத்தியில் 60 சதவீதம் வரை பாதிப்பு ஏற்பட்டதாக விவசாயிகள் கவலை தெரிவித்தனர்.

குறிச்சொற்கள்: ,

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..

Post a Comment