இந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....

வெங்காய செடிகளை காப்பாற்ற டேங்கர் தண்ணீரை விலைக்கு வாங்கும் ஸ்ரீவி., விவசாயிகள்

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பிள்ளையார் நத்தம் பகுதியில் கிணறுகள் வறண்டு போனதால் வாடும் நிலையிலுள்ள வெங்காய செடிகளை காப்பாற்ற விவசாயிகள் டேங்கர் தண்ணீரை விலைக்கு வாங்கி விவசாயம் செய்து வருகின்றனர். தமிழகம் முழுவதும் சில மாதங்களாக பருவமழை பெய்து வருகிறது. ஆனால் இம்மழை விருதுநகர் மாவட்டத்தில் குறைவான அளவே பெய்தது. இதனால், கண்மாய்களில் தண்ணீர் இல்லாமலும், நிலத்தடி நீர்மட்டம் குறைந்து கிணறுகளும் வறண்டன. மக்கள் குடிநீருக்காகவும், விவசாயிகள் விவசாயம் செய்ய முடியாமல் திண்டாடி வருகின்றனர். ஸ்ரீவில்லிபுத்தூர் பிள்ளையார்நத்தம் பகுதியில் கடந்த அக்டோபர் மாதம் மழையை நம்பி 500க்கும் அதிகமான ஏக்கர்களில் விவசாயிகள் வெங்காயம் நடவு செய்தனர்.
ஆனால் மழை தொடர்ந்து பெய்யாமல் போனதாலும், கிணறுகளில் நிலத்தடி நீர் மட்டம் குறைந்ததால் தண்ணீர் இல்லாமல் வெங்காயசெடிகள் பட்டு போகும் நிலை ஏற்பட்டது. பொதுவாக விவசாய நிலங்களுக்கு தண்ணீர் பாய்ச்ச அருகிலுள்ள வயல்களின் கிணறுகளிலிருந்து தண்ணீரை விலைக்கு வாங்கி பாய்ச்சுவர். ஆனால் தற்போது பிள்ளையார் நத்தம் பகுதி முழுவதும் தண்ணீர் இல்லாமல் நிலத்தடி நீர் குறைந்ததால் வெங்காய செடிகளை காய்ந்து போவதை தடுக்க விவசாயிகள் தற்போது தண்ணீரை டேங்கர்களில் விலைக்கு வாங்கி வயல்களுக்கு பாய்ச்சி வருகின்றனர்.



மனோகரன் தெரிவித்ததாவது: ஒரு ஏக்கரில் வெங்காயம் நடவு செய்துள்ளேன். தற்போது ஒன்றரை மாதசெடியாக உள்ள வெங்காயத்திற்கு தண்ணீர் கிடைக்கவில்லை. நடவு செய்யும் போது மழை பெய்தது. மேலும் கிணற்றிலும் தண்ணீரும் இருந்தது. இதை நம்பி வெங்காயம் நடவு செய்தேன். தற்போது மழையுமில்லை. கிணற்றில் தண்ணீரும் இல்லை. செடிகள் காயும் நிலைக்கு வந்து விட்டது. வெங்காய செடியை காப்பாற்ற டேங்கர் தண்ணீரை விலைக்கு வாங்கி விட்டு வருகிறேன். வெங்காயத்திற்கு 10 நாளுக்கொருமுறை தண்ணீர் பாய்ச்ச வேண்டும். ஒரு ஏக்கர் முழுவதும் ஒரு முறை தண்ணீர் பாய்ச்ச 6 ஆயிரம் லிட்டர் கொள்ளவுள்ள 32 டேங்கர் தண்ணீர் தேவைப்படுகிறது. ஒரு டேங்கருக்கு 400 ரூபாய் முதல் 500 ரூபாய் வரை கொடுக்க வேண்டியதுள்ளது. இதுவரை இல்லாத அளவு விவசாயத்திற்கு கடுமையான செலவு ஏற்பட்டுள்ளது என தெரிவித்தார்.



விவசாயி வேலுச்சாமி தெரிவித்ததாவது: மழையை நம்பி ஐப்பசி மாதம் வெங்காயம் நடவு செய்தேன். தற்போது விளைச்சல் வரும் நேரத்தில் மழையும் இல்லை, கிணற்றில் தண்ணீரும் இல்லை. இதனால் வெங்காய செடிகள் காயும் நிலைக்கு வந்துவிட்டது. இதை காப்பாற்ற டேங்கர் மூலம் தண்ணீர் வாங்கி வயலில் விட்டு வெங்காயத்தை காப்பாற்றி வருகிறேன். இதனால் மிகுந்த கஷ்டத்திற்குள்ளாகி வருகிறேன். பொதுவாக ஏக்கருக்கு 60 முதல் 70 மூடை வெங்காயம் கிடைக்கும். தற்போது தண்ணீர் இல்லாததால் இந்த விளைச்சல் கிடைப்பது என்பது சந்தேகமாகத்தான் உள்ளது. என தெரிவித்தார்.

குறிச்சொற்கள்:

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..

Post a Comment