20 மணி நேரம் மின்சாரம் வழங்க விவசாயிகள் வலியுறுத்தல்
11:17 PM 20 மணி நேரம் மின்சாரம் வழங்க விவசாயிகள் வலியுறுத்தல், செய்திகள் 0 கருத்துரைகள் Admin
விவசாயத்திற்கு 20 மணி நேரம் தடையற்ற மின்சாரம் வழங்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.
திண்டுக்கல்லில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க 27-வது மாநில மாநாடு சனிக்கிழமை நடைபெற்றது. இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:
தமிழ்நாட்டில் பாசன வசதி பெற்ற நிலங்களில் பாதிக்கும் மேற்பட்ட நிலம் மின் இணைப்பு மூலம் பாசனம் பெறுகின்றன. 2 ஆண்டுகளாக அமல்படுத்தப்படும் மின்வெட்டால் ஒரு நாளைக்கு 6 மணி நேரம் கூட விவசாயத்திற்கு மின்சாரம் வழங்கப்படுவதில்லை. இதனால் பல லட்சம் ஏக்கர் நிலம் தரிசாக மாறியுள்ளன.
மாற்றுப்பாசன ஆதாரங்கள் இல்லாததால் திண்டுக்கல் உள்பட பல்வேறு மாவட்டங்களில் நிலைமை மிகவும் மோசமடைந்துள்ளது.
இந் நிலையில், அரசு மின்வாரியத்தை மூன்றாகப் பிரிக்கும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இது கிராமப்புற மின் வழங்கல் மற்றும் மின்பராமரிப்பை பாதித்து விவசாயம் கேள்விக்குறியாக மாறும் நிலையை உருவாக்கும்.
எனவே மின்வாரிய சீரமைப்பு நடவடிக்கையை அரசு ரத்து செய்ய வேண்டும். இதுவரை செயல்பட்டது போலவே இனியும் தமிழ்நாடு மின்வாரியம் செயல்பட வேண்டும். விவசாயத்திற்கு குறைந்தபட்சம் ஒரு நாளைக்கு 20 மணி நேரம் மின்சாரம் வழங்க வேண்டும். ஏற்கெனவே மின் இணைப்பு கேட்டு விண்ணப்பித்துள்ள 5 லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாநாட்டில் கே.பாலபாரதி எம்.எல்.ஏ. வரவேற்றுப் பேசினார். மாநாட்டிற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் கே.முகமது அலி தலைமை வகித்தார். மாநாட்டுக் கொடியை ஏற்றி வைத்து என்.ஆர்.ராமசாமி பேசினார்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் தீர்மானங்களை முன் மொழிந்தார். அகில இந்திய விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் கே.வரதராஜன், மாநிலத் தலைவர் ஜீ.வீரய்யன், மாநிலச் செயலர் ஆர்.சந்திரா, மார்க்சிய கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலர் என்.பாண்டி உள்பட பலர் பேசினர்.
குறிச்சொற்கள்: 20 மணி நேரம் மின்சாரம் வழங்க விவசாயிகள் வலியுறுத்தல், செய்திகள்
பகிர்தல் மிக எளிமையானது,அழகானது