""மரபணு மாற்றப்பட்ட நான்கு வகை கத்தரி ரகங்களை வேளாண் பல்கலை கண்டுபிடித்துள்ளது. அரசு அனுமதித்தபின் புதிய ரகங்கள் வெளியிடப்படும்,'' என்று கோவை வேளாண் பல்கலை துணைவேந்தர் முருகேசபூபதி கூறினார்.விதைகளில் ரகதூய்மை கண்டறியும் ஆய்வு பற்றிய தேசிய அளவிலான ஐந்து நாள் பயிற்சி, கோவை வேளாண் பல்கலையில் துவங்கியது. பயிற்சியின் துவக்க விழாவில் துணைவேந்தர் முருகேச பூபதி பேசியதாவது:பயிர் உற்பத்தி பெருக தரமான விதை முக்கியம். மரபணு மாற்றப்பட்ட பருத்தி, அதன் உயிர் பாதுகாப்பு பரிசோதனைக்குப் பிறகும், மகசூல் தன்மையை நிர்ணயித்த பின்பும் வெளியிடப்பட்டுள்ளது.
தற்போது பருத்தி பயிரிடப்படும் மொத்த பரப்பளவில் சுமார் 80 சதவீதம் மரபணு மாற்றம் செய்யப்பட்ட பருத்தி ரகங்களே பயிரிடப்படுகின்றன.இதனால் பூச்சிகொல்லி மருந்துகளின் பயன்பாடு குறைந் துள்ளது. பருத்தியின் மகசூல் ஒரு எக்டருக்கு 308 கிலோவில் இருந்து 591 கிலோவாக உயர்ந்துள்ளது. உற்பத்தி திறன் சுமார் 32.2 மில்லியன் பேல்கள் உயர்ந்து ஏற்றுமதி அதிகரித் துள்ளது.மரபணு மாற்றப்பட்ட நான்கு வகை கத்தரி ரகங்களை வேளாண் பல்கலை கண்டுபிடித்துள்ளது. அரசு அனுமதித்தபின் புதிய ரகங்கள் வெளியிடப்படும். இதனால் மரபணு மாற்றத்துக்கு அடிப்படையான விதையின் தரம் முக்கியம்.சர்வதேச உணவு பதப்படுத்தும் ஆராய்ச்சி நிலைய அறிக்கையின்படி, சுமார் 4,500 விவசாயிகள் மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திராவில் தரமற்ற மரபணு மாற்றப்பட்ட பருத்தி விதையை பயன்படுத்தியதால் ஏற்பட்ட பொருளாதார இழப்பு காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டுள்ளது.
இந்த தரமற்ற விதைகளால் விதை முளைப்புத்திறன் குறைவதோடு, பூச்சி, பூஞ்சாணத் தாக்குதலும் அதிகரித்து, மகசூல் வெகுவாக பாதிக்கப்படுகிறது. 5,000 கோடி ரூபாய் முதலீட்டில் வளர்ந்து வரும் விதை வியாபாரத் தொழிலில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களின் எண்ணிக்கை பெருகி வருகிறது. இந்த நிலையில், விவசாயிகளுக்கு வழங்கப்படும் விதையின் தரத்தில் அதிக கவனம் தேவை.இவ்வாறு, முருகேசபூபதி கூறினார்.பல்கலை விதை மைய தனி அலுவலர் ராமமூர்த்தி, விதை நுட்ப அறிவியல் துறைத் தலைவர் ஸ்ரீமதி, பயிர் நோயியல் துறை பேராசிரியர் பிரபாகர் மற்றும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் பணிபுரியும் விதை நுட்ப விஞ்ஞானிகள், வேளாண் அலுவலர்கள், விதை ஆய்வு அலுவலர்கள் பங்கேற்றனர்.