இந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....
Subscribe
Enter your email address below to receive updates each time we publish new content.
பண்ணைத் திட்டத்தில் விளைபொருள்களின் உற்பத்தி 2 மடங்கு அதிகரித்துள்ளதாக திட்ட அலுவலர் டாக்டர் இ.வடிவேலு தெரிவித்தார்.வாணவராயர் வேளாண் கல்லூரி சார்பாக பொள்ளாச்சி டாக்டர் மகாலிங்கம் பொறியியல் தொழில் நுட்பக் கல்லூரி வளாகத்தில் உழவர் சிந்தனைக் களஞ்சியத்தின் சார்பில் துல்லிய பண்ணைத் திட்டம் குறித்த விளக்கக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடந்தது. இதில் துல்லிய பண்ணைத் திட்டம் குறித்து திட்ட அலுவலர் டாக்டர் இ.வடிவேலு கூறியது: இப்போதுள்ள சூழ்நிலையில் விவசாயம் செய்வதை விட நிலத்தை விற்றுவிட்டு அத்தொகையை வங்கியில் போட்டு வைப்பது சிறந்தது என்ற எண்ணம் பலருக்கும் வந்துள்ளது. விவசாயத்தை விட லாபம் தரும் தொழிலுக்குப் பலர் சென்றுவிட்டனர். விவசாய வேலை செய்வதற்கு ஆள்கள் கிடைக்காத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. கிராமங்களில் உள்ள வயதானவர்கள் மட்டும் விவசாயப் பணியில் ஈடுபடுகின்றனர். ஆழ்குழாய்க் கிணறு இல்லாவிட்டால் விவசாயம் செய்ய முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த 30 ஆண்டுகளில் உரம், பூச்சி மருந்து போன்ற இடுபொருள்கள் 300 சதவீதம் விலை உயர்ந்துள்ளது. ஆனால் விளைபொருள்கள் 30 சதவீதம் விலை உயர்ந்துள்ளது. முன்பெல்லாம் விவசாயத் தொழில்நுட்பங்கள் எளிதில் புரியும்படியாக இருந்தது. ஆனால் இப்போது ஒருமுறை அறுவடை செய்தால் மட்டும் புரியுமாறு உள்ளது. அரசு அறிவிக்கும் பல்வேறு திட்டங்கள் மானியம் கிடைக்கும் வரை தொடரும். ஆனால் துல்லிய பண்ணைத் திட்டத்தில் விவசாயிகளிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதை விவசாயிகள் விரும்பிக் கேட்கின்றனர். இத்திட்டத்தில் விவசாயிகளைக் குழுவாக இணைந்து செயல்படத் தூண்டி, விளை பொருள்களுக்கு வாய்ப்புள்ள மார்க்கெட்டுடன் இணைத்து, விவசாயிகளிடம் ஆளுமையை ஏற்படுத்துவதைச் செய்கிறோம். துல்லிய பண்ணைத் திட்டத்தில் மகசூல் இரு மடங்காகிறது. 50 சதவீத மின்சாரம் மிச்சமாகிகறது. கிடைக்கும் மகசூலில் 90 சதவீதம் முதல் தரத்தில் கிடைக்கிறது. காய்கறிகளின் எடையும் அதிகரித்துள்ளது. 15 நாள்கள் வரை காய்கறிகள் கெடுவதில்லை. 400 ஹெக்டேரில் துவங்கிய இத்திட்டம் இப்போது 40 ஆயிரம் ஹெக்டேராக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது என்றார் வடிவேல். வாணவராயர் வேளாண் கல்வி நிறுவன இயக்குநர் கெம்புசெட்டி, முன்னோடி விவசாயி ஓ.வி.ஆர். சோமசுந்தரம், ஆழியாறு வேளாண் ஆராய்ச்சி நிலையத் தலைவர் ராஜமாணிக்கம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். விவசாயிகளின் கேள்விகளுக்கு தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழக விஞ்ஞானிகள் பதிலளித்தனர்.